உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இன்று (அக்டோபர் 26) 25 வது லீக் ஆட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.2 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியின் லகிரு குமாரா 3. மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் 43, பேர்ஸ்டோவ் 30, டேவிட் மாலன் 28 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 77 மற்றும் சமரவிக்ரமா 55 ரன்கள் எடுத்தனர். இந்த உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு கிடைக்கும் 2-வது வெற்றி இதுவாகும்.