நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 15ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 8ம்தேதி சோதனை ஓட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டம் துவங்கியது. காலை 9 மணிக்கு கப்பல் புறப்பட்டு இலங்கை காங்கேசன் துறைக்கு பிற்பகல் 12 மணிக்கு சென்றடைந்தது. மீண்டும் மாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடைந்தது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.