*ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் நேற்று 500க்கும் மேற்பட்ட படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டன.ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு பாக்ஜலசந்தி கடலில் நான்கு முறை மட்டுமே மீன் பிடிப்பில் ஈடுபட்டனர். முதல் நாள் இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இரண்டாவது தடவை இதுவரை இல்லாத அளவுக்கு இறால் மீன்பாடு முற்றிலும் குறைந்ததால், ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து நஷ்டத்தை சந்தித்தனர். மூன்றாவது முறை கடல் சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
நான்காவது தடவை நேற்று முன்தினம் ஒரு படகையும், 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 106 சிறிய விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து ரூ.2 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலம் முடிந்து நான்கு முறை மட்டுமே கடலுக்கு சென்றுள்ள நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித்து துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. இலங்கை கடற்படையின் பிரச்னை இல்லாமல், மீன் பிடிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.