சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றபின், எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி: சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உத்தரவுப்படி நானும், ஆர்.பி.உதயகுமாரும் கலந்து கொண்டோம். இந்தகூட்டத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகநேரம் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். அதேபோன்று, சட்டமன்ற கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
ஆனால் 2 நாள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இதற்கு முன் நடைபெற்ற பட்ஜெட் கூட்டமும் 9 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. தற்போதும் 2 நாள் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வருத்தம். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னையை சட்டமன்றத்தில் கொண்டு வந்தால்தான் அதிகாரிகள் வேலை செய்வார்கள். அதிமுகவை பொறுத்தவரை, இந்த கூட்டத்தை 10 நாட்கள் நடத்த கோரிக்கை வைத்தோம், அதை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.