சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கிடும் வகையில் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” உருவாக்கப்பட்டு 08.05.2023அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளார்.
பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவித்தொகையாக ரூ.3,96,48,649 வழங்கப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சார்ந்த போதிய நிதிவசதி இல்லாத வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட https://tnchampions.sdat.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.