சென்னை: தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தை (டாஸ்கான் 2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (டாஸ்கான் 2023), சென்னை தாஜ் கோரமண்டலில் 7ம் தேதி (நேற்று) மற்றும் 8 என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தில் விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு மறுவாழ்வு, விளையாட்டு நிர்வாகம் மற்றும் மேம்பாடு, ப்ரான்சைஸ் லீக்ஸ், விளையாட்டு பயோமெக்கானிக்ஸ், விளையாட்டு உடலியல், ஊட்டச்சத்து, உயர் செயல்திறன் விளையாட்டு பயிற்சி, விளையாட்டு தொழில்நுட்பம் மற்றும் இ-விளையாட்டு போன்ற சர்வதேச அளவில் விளையாட்டு துறை தொடர்பான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய குழு விவாதங்கள் பன்னாட்டு விளையாட்டு துறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படும்
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கை (டாஸ்கான் 2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் நிகழ்வாகும். இது விளையாட்டு அறிவியலில் வல்லுனர்கள் மட்டும் பங்கேற்கும் கருத்தரங்கம் இல்லை, இது நமது விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்கான முயற்சியாகும். டாஸ்கான் 2023-ல் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் விளையாட்டு அறிவியல் அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பல விளையாட்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது. மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்வதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளில் இது ஒரு முன்னோடி முயற்சி என்பதை தமிழ்நாடு நிரூபித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு வெற்றிகரமாக நடத்தியது. ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023ல் சென்னையில் நடத்தினோம். ஆசிய கோப்பை ஹாக்கி 2023ஐ தமிழ்நாடு வெற்றிகரமாக நடத்தியது.
உலக சர்பிங் லீக் மற்றும் பிசிலி சைக்ளோத்தான் ஆகியவை நமது மாநிலத்தின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்நாடு அடுத்த மாதம் முதல் பார்முலா ரேசிங் சர்க்யூட்டை சென்னையில் நடத்த தயாராகி வருகிறது. இந்திய ஒன்றியம் ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான சரியான இடமாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது.
மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு விளையாட்டு கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் அதிநவீன ‘உலகளாவிய விளையாட்டு நகரத்தை’ உருவாக்குவதற்கான ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம். தமிழ்நாட்டில் தற்போதுள்ள 29 விளையாட்டரங்கங்களுடன் 10 சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* தமிழ்நாட்டில் முதல் பாரா விளையாட்டு அரங்கு
இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: முதன்முறையாக, பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஆறு மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பாரா விளையாட்டரங்குகளை அமைக்கவுள்ளோம். தமிழ்நாட்டில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் முதல் முதலீடு இதுவாகும். இந்த கருத்தரங்கம் விவாதங்கள் மட்டுமல்ல;
இது தமிழ்நாட்டின் விளையாட்டு அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைப்பதாகும். இது நமது விளையாட்டு வீரர்களை சாதனையின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் அதிநவீன நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆராய்வதாகும். இது நமது விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் நல்வாழ்வை மேம்படுத்துவது, சிறந்த கவனம் மற்றும் ஆதரவை அணுகுவதை உறுதி செய்வதாகும். நமது விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்தை விளையாட்டு திறன்களின் மையமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.