சென்னை: தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் விளையாட்டு அறிவியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடத்தபடும்.
கருத்தரங்கம் நடத்திட ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில், தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (டாஸ்கான் 2023), சென்னை தாஜ் கோரமண்டலில் 2023 நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச விளையாட்டு அறிவியல் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இம்மாநாடு விளையாட்டு விஞ்ஞானிகள், பயிற்சியாளர்கள். பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு தொடர்பான கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்த சர்வதேச கருதரங்கத்தில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மற்றும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த விளையாட்டு அறிவியலைப் பயன்படுத்துவது தொடர்பாகவும்.
மேலும் தமிழ்நாட்டில் விளையாட்டு அறிவியலின் எதிர்கால வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தில் விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு மறுவாழ்வு, விளையாட்டு
நிர்வாகம் மற்றும் மேம்பாடு, ஃப்ரான்சைஸ் லீக்ஸ் (Franchise Leagues), விளையாட்டு பயோமெக்கானிக்ஸ் (Sports Biomechanics), விளையாட்டு உடலியல் (Sports
Physiology),
ஊட்டச்சத்து (Nutrition), உயர் செயல்திறன் விளையாட்டுப் பயிற்சி (High-Performance Sports Training), விளையாட்டு தொழில்நுட்பம் (Sports Technology) மற்றும் இ-விளையாட்டு (E-Sports) போன்ற சர்வதேச அளவில் விளையாட்டு துறை தொடர்பான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய குழு விவாதங்கள் பன்னாட்டு விளையாட்டு துறை நிபுணர்களால் நிறுவகிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (டாஸ்கான் 2023) 2 நாள் நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில் நேரலை செய்யப்படும்.