Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யோகேஸ்வரி

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி! வங்கதேசத்தின் ஒரு பகுதியில் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சின்னஞ்சிறு வயதிலிருந்து ஆன்மிகம், தெய்வீகத் தொண்டு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். அடுத்தவர்களுக்கு தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்தார். யாருமே போகாத எளிமையான பகுதிகளு‌‌க்கெல்லாம் போய், அந்தப் பகுதியில் தொண்டு செய்வார்.

நல் உபதேசங்கள், அறிவுரை என்றெல்லாம் எளிமையாகச் சொல்லி அவர்களுக்குப் புரியவைப்பார் அந்தப் பெண்மணி. அவர் பெயர் யோகேஸ்வரி அம்மையார்.இவரைத்தான் பைரவி பிராம்மணி என்று அனைவரும் அழைப்பர். அந்த அம்மையார் தட்சிணேஸ்வரத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 45.அந்த ஊரிலும் அவர் தன்னுடைய ஆன்மிகத் தொண்டை, திருப்பணியை நிறுத்தவில்லை. ஏராளமானோர் வந்து அம்மையாரின் அருள் உபதேசங்களைக் கேட்டு, ஆறுதலும் அமைதியும் பெற்றார்கள்.

அவர்களில் இளைஞர் ஒருவர்; மிகவும் அடக்கத்துடன், ஆர்வத்துடன் அம்மையாரின் அருள் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்; அனைவரும் வெளியேறிய பிறகே மிகவும் பொறுமையோடு வெளியேறுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார், அந்த இளைஞர்.அவருடைய அமைதி, பொறுமை, அடக்கம் ஆகியவை எல்லாம் அம்மையாரைக் கவர்ந்தன; ‘‘யார் இந்த இளைஞன்? கண்களில் பார்க்கும் அனைத்தின் மீதும் பாய்ந்து பாய்ந்து வேட்டையாடும் தன்மை உள்ள இந்த வயதில் இப்படி இருக்கிறானே!’’ என்று வியந்தார்; ஒருசில வினாடிகள் யோசித்தார். அவர் முகம் பிரகாசமானது.

அப்போது அந்த இளைஞர் தனித்து நிற்கக்கூடிய நேரம்; வந்திருந்தவர்கள் எல்லாம் போவதற்காக ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தார். அவரைப் பார்த்து அம்மையார், ‘‘அப்பா! வா! வா! எவ்வளவு நாட்களாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்?’’ என்று மிகுந்த ஆர்வத்துடன் அழைத்தார்.அதைக் கேட்ட இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை; ‘‘அம்மா! இதற்கு முன்னால் நான் உங்கள பார்த்ததே கிடையாது. இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சந்தேகமாகஇருக்கிறது. என்னை எப்படித் தெரியும்?’’ எனக் கேட்டார்.

உடனே அம்மையார், ‘‘அப்பா! என்ன பேசுகிறாய் நீ? தாய்க்குப்போய் குழந்தையை யாராவது அறிமுகப்படுத்தி வைக்கவேண்டுமா என்ன? இதுதான் உன் குழந்தை? நீ பெற்றது என்று யாராவது சொல்லிப் புரிய வைக்க வேண்டுமா என்ன? உன்னை யார் என்று அம்பிகை எனக்குள் நின்று அறிவித்தாள்’’ என்றார் அம்மையார்.அதன் பிறகு, அந்த இளைஞர் அடிக்கடி வந்து அம்மையாரிடம், தனக்கு உண்டான யோக-ஞான சந்தேகங்களை எல்லாம் தீர்த்துக்கொண்டார். அவ்வளவையும் தீர்த்துக்கொண்டார். அந்த இளைஞருக்கு முறையான தியான நிலை-யோக நிலை அவற்றைக் கடைப்பிடிக்கும் முறைகள் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் அம்மையார்.

இன்று உலகம் புகழும் மகா ஞானியாக இருக்கக்கூடிய ராமகிருஷ்ண பரமஹம்சர்தான் அந்த இளைஞர். அவருக்குச்சொல்லிக் கொடுத்து எல்லாம் செய்தது இந்த யோகேஸ்வரி அம்மையார்தான்!ஒரு நாள் வழக்கப்படி தன்னுடைய அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தார் அம்மையார்.அதே நேரத்தில் அந்த ஊரில் பெரும்பாலானோர் ராம கிருஷ்ண பரமஹம்சரின் தெய்விக நிலையை உணராமல், பலவிதமான தொல்லைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம் ஏராளமானோர் முன்னிலையில் அமர்ந்தபடி நல் உபதேசம் செய்து கொண்டிருந்த அம்மையாரிடம் ஒருவர் ஓடிப்போய், ‘‘அம்மா! ராமகிருஷ்ணனைப் பலர் கூடி வீதியில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லிப் பதறினார்.

அதைக் கேட்டதும் தான் சொல்லிக் கொண்டிருந்ததை அப்படியே நிறுத்திவிட்டு எழுந்து ஓடினார் அம்மையார். பலர் பின் தொடர்ந்து ஓடினார்கள்.வேகவேகமாகப் போன அம்மையார் ராமகிருஷ்ண பரமஹம்சரை துன்புறுத்திக் கொண்டவர்களை மிரட்டினார்,அப்போது அவர் கண்களில் கனல் வீசியது ராமகிருஷ்ணரை கைகளைப் பிடித்துக் கட்டி அணைத்தபடி யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இவரை. தெய்வீக அவதாரமடா... இவன் உலகமே புகழப்போகும் இவனுடைய அருமை பெருமை தெரியாமல் கேவலப்படுத்துகிறீர்களே மனிதர்களா? நீங்கள் என்று கூவினார்.தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் விலகி ஓடிப் போனார்கள். உலகமே புகழக்கூடிய ஒரு ஞானிக்கு மகாகுருவாக இருந்தது இந்த யோகேஸ்வரி அம்மையார்தான்!

V.R.சுந்தரி