Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பேரருள் பொழியும் பேழை வழிபாடு

பகுதி 2

வாழ்மங்கலம்

திருமலைராயன்பட்டினத்திற்கு மிக அருகேயுள்ள அமைதியான கிராமங்களில் இதுவும் ஒன்று. பசுமை போர்த்திய கிராமத்தின் மையத்திலேயே வீரமாகாளியம்மனின் அழகிய சிற்றாலயம் அமைந்துள்ளது. இந்த ஏழு தலங்களிலுமே காளியன்னை எழுந்தருளிய விதம் ஒரே மாதிரியாக சொல்லப்பட்டு வருகின்றன. ஆற்றோட்டமாகவோ அல்லது கடலில் மிதந்து வந்த விக்ரஹத்தை ஊர் மக்கள் எடுத்து கோயில்களில் அமைத்து பிரதிஷ்டை செய்ததாகவே சரிதம் வந்து கொண்டிருக்கும். இதைத்தவிர ஒரே மன்னன் ஏழு பேழைகளை காளியின் ஆணையினால் நீரோட்டத்தில் மிதக்க விட்டு அது மக்களுக்கு கிடைத்தது என்றும் கூறுகிறார்கள். மேலும், ஒரே இடத்தில் கிடைக்கப்பட்ட பேழைகள் இந்த பதினெட்டுப்பட்டி மக்கலால் வழிபடப்பட்டு ஆங்காங்கு கோயில் களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.

காளியன்னை விரும்பி கருணையோடு இந்த ஏழு தலங்களிலும் நிலை கொண்டிருக்கிறாள் என்பதே உண்மையாகும். அவளுக்கு உகந்த பூஜை முறைகளிலிருந்து வழுவாது அவர்களும் பூஜித்து வருகிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியமான விஷயமாகும். தனித்த சிறு கோயிலாக நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான இந்த பேழைக் கோயில்களில் ஓரிரு சந்நதிகள்தான் இருக்கும். வெள்ளிக் கவசத்தாலான பேழையை அலங்கரித்து வைத்து பூஜிக்கின்றனர். கோயிலுக்கு வெளியே இருந்து உள்ளுக்குள் நுழையும்போது சட்டென்று நம் மனம் மாறுகிறது. விஷமம் செய்து கொண்டிருக்கும் சிறுவன் யாரோ புதிய நபரைக் கண்டவுடன் ஓடி ஒளிவானே, அதுபோல அதுவரை ஓய்ச்சலாக இருந்த மனம் சட்டென்று அடங்குகிறது. அம்மையின் அருளமுதம் நம்மை துளைத்துச் செல்கிறது.

இந்த ஏழு தலத்திற்குள் இந்த தலத்தில் மட்டும்தான் வருடா வருடம் பேழையைத் திறந்து காளியன்னையை தரிசித்து பூஜிக்கின்றனர். ஒவ்வொரு ஊருக்குமான பெரியோர்கள், ஒவ்வொரு தலத்திலும் நடைபெறும் பூசையின்போது அழைப்பு விடப்படுகிறது. அதுதவிர பதினெட்டுப்பட்டி ஊர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது. அதுபோலவே அந்தந்த ஊர்களின் பெரியவர்களை வரவேற்று மரியாதை செய்து அன்னையை தரிசிக்கச் செய்து பிரசாதங்களோடு அனுப்புகின்றனர். இந்த நடைமுறை ஏழு ஆலயங்களிலுமே நடைபெறுகிறது. திருமலைராயன்பட்டினத்திற்கு அருகேயே சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருமலைராயன் பட்டினத்தை தரிசித்துவிட்டு இத்தலத்தை தரிசிக்கலாம்.

காட்டுச்சேரி

இந்த ஏழு தலங்களையும் எது முதல் எது கடைசி தலம் என்று வகைப்படுத்தாமல் திருமலைராயன்பட்டினத்திலிருந்து பயணப்படுவதாகவே கொடுக்கின்றோம். காரைக்கால் வழியாக பொறையார் வந்து அருகேயே உள்ள காட்டுச் சேரியை அடையலாம். இந்தக் கோயிலை முன்னரே தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது. வனபத்ரகாளியம்மன் கோயில் அல்லது பெட்டி காளியம்மன் கோயில் எங்கேயுள்ளது என்று கேட்டுச் செல்ல வேண்டும். கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே உடல் சிலிர்க்கிறது. கருவறையில் அழகிய பேழைக்குள் வனபத்ரகாளியாக திருநாமம் பூண்டு அருள்பாலிக்கிறாள். காட்டுச்சேரி என்கிற பெயராலேயே வனபத்ரகாளியாக அருள்கிறாளோ என்றும் தோன்றியது.

இந்த குறிப்பிட்ட நாளன்று நிகழும் பூஜை முறைகளும், சடங்குகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இதுபோல ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூசையினாலேயே மிகவும் பிரபலமாக இந்தக் கோயில்கள் விளங்குகின்றன. கிட்டத்தட்ட இந்த மாவட்டத்திலுள்ள அனைவருமே தரிசித்துவிட வேண்டுமென்று விரும்புகின்றனர். கோயிலுக்குள்ளேயே அஷ்டபுஜ காளி போன்ற சிலையொன்றை காணலாம். தீச்சுடர்போன்ற கேசங்களும் கைகளில் ஆயுதங்களோடும் முகத்தில் சாந்தமும் கருணையும் ஒன்று சேர இந்தச் சிலை அமைந்துள்ளது. காட்டுச்சேரி வனபத்ரகாளியை தரிசித்து வற்றாத வளம் பெறுவோம்.

திருக்களாச்சேரி

ஈசன் அருளாட்சி பொழியும் தலங்களில் ஒன்றுதான் திருக்களாச்சேரி. கயிலையில் ஈசனின் சாபம் பெற்ற அம்பிகை திருக்குராமரமாக வடிவெடுத்து இத்தலத்திலுள்ள நாகநாதர் ஆலயத்தில் சிவபிரானை நினைந்து தவமிருந்து சாபவிமோசனம் பெற்றாள். திருக்குராச்சேரி என்பதே பின்னர் திருக்களாச்சேரி என்றானது. இத்தலமும் பொறையாரிலிருந்து வரும்போது காட்டுச்சேரிக்கு அருகேயே அமைந்துள்ளது. மயிலாடுதுறை - சங்கரன்பந்தல் - பொறையார் மார்க்கமாக வரும்போது இந்த இரு தலங்களையும் தரிசிக்கலாம்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலென வயல்வெளி பரவியிருக்கிறது. காவிரியின் கிளை நதியான வீரசோழன் பாய்ந்து வளமாக்குகிறது. பத்ரகாளியம்மன் எனும் திருப்பெயரில் அருள்கிறாள். கருவறையில் பித்தளைத் திருவாட்சியின் (பிரபை) நடுவில் திருப்பேழையினுள் காளி அருள்பாலிக்கிறாள். கருவறைக் கதவுகள் மற்றும் படிகளுக்கு அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பித்தளைத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்னே சிறிய அர்த்த மண்டபமும், அதனையொட்டிய பெரிய மகாமண்டபமும் உள்ளன. திருக்கோயிலைச்சுற்றி மதிலுடன் கூடிய சுற்றுப் பிராகாரம் அழகூட்டுகிறது. துன்பம், துயரம் என்று வருவோரின் துயரைத் துடைத்தெறிகிறாள். வேண்டியதை ஈடேற்றுவதில் அசகாய வேகம் கொண்டவள் என்கிறார்கள். வேண்டிச் சென்ற வேகத்திலேயே மீண்டும் கண்களில் நீருடன் நன்றி தெரிவிப்பதை இத்தலத்தில் சகஜமாகக் காணலாம்.

குடவாசல்

கும்பகோணம் - திருவாரூர் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது. வீரமாகாளியம்மன் எனும் திருப்பெயரில் அருள்கிறாள். அழகிய வளைவோடு கோயில் நம்மை வரவேற்கிறது. கோயிலின் வாயிலிலேயே ஏழு தலங்களிலும் அருளும் காளியன்னையின் உருவங்களை ஓவியங்களாக வரைந்திருக்கின்றனர். இங்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் பூஜை நடைபெறுகிறது. கோயிலின் கருவறைக்குள் திருப்பேழைக்குள் காளியன்னை கம்பீரமாக அருள்பாலிக்கிறாள். சந்நதிக்குள் நுழையும்போதே சட்டென்று மேனியெங்கும் சிலிர்த்துப் போடுகிறது. அத்தலத்திலுள்ள சக்தியின் ஆளுமை நம்மை பணிய வைக்கிறது. மக்களின் சிறந்த பிரார்த்தனை தலமாக இது விளங்குகிறது. இந்த ஏழு தலங்களிலும் ஒரே பேழையாக இருப்பதால் எல்லாம் ஒன்றுதானே என்று நினைத்து விடக் கூடாது. ஒவ்வொருவிதமான நிலைக்கு ஜீவன்களை மேலேற்றுவதுதான் ஏழு ஆலயங்களின் ரகசியம் ஆகும்.

யோக மார்க்கத்தில் ஏழு சக்கரங்களை குறிப்பதுபோல ஒரு ஜீவனை ஒவ்வொன்றாக மேலேற்றிச் செல்வதுதான் இத்தலங்களின் முக்கியப் பணிகளாகும். நமக்குள் இருக்கும் ரகசிய ஆன்மிக விழிப்புணர்வு ஒவ்வொரு தலங்களாகச் செல்லும்போது தானாக திறந்து கொள்ளும். இதை காளியின் ஏழு முக்கிய ஸ்தானங்கள் என்பதாகவே கொள்ள வேண்டும். இந்த ஏழு தலங்களிலுமே பக்தர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. மழலை வரம் முதல் மகத்தான சாதனைகள் புரிவது வரை அனைத்தையும் காளி அருள்கிறாள்.

வலங்கைமான்

வலங்கைமான் என்றவுடன் எல்லோருக்கும் பாடைகட்டி மாரியம்மன் ஆலயம்தான் நினைவுக்கு வரும். பொதுவாகவே ஈசன் இடக்கையில் மானும், வலக்கையில் மழுவையும் ஏந்தித்தான் காட்சி தருவார். ஆனால், இத்தலத்திலுள்ள சிவாலய உற்சவமூர்த்தியின் வலக்கையில் மான் இருப்பதாலேயே இவ்வூருக்கு வலங்கைமான் என்கிற பெயர் ஏற்பட்டது. கும்பகோணம் - மன்னார்குடி பாதையில் அமைந்துள்ளது. அருகேயே ஆலங்குடி குருத்தலம் உள்ளது.

குடவாசல் காளியை தரிசித்து விட்டும்கூட இக்கோயிலை அடையலாம். இந்த சிறிய நகரத்தின் மையத்தில்தான் பேழைக்கோயிலான பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாள். குங்கும சந்தனத்தின் சுகந்தம் கோயிலை நிறைக்க அன்னையின் சாந்நித்தியம் நெஞ்சை நிம்மதியாக்குகிறது. கடும் வெயிலில் நடந்தவருக்கு குவளை நிறைய நீரும், குளிர் நிழலும் கிடைத்தால் எப்படியிருக்குமோ அதுபோல அந்தச் சந்நதி ஆற்றுப்படுத்துகிறது.

சோழர் காலத்தில் கட்டப்பட்டது. புலிக் கொடி சின்னத்தை ஆலயத்திற்குள் காணலாம். சந்தன மரத்தாலான பெட்டிக்குள் அம்மன் எழுந்தருளியிருக்கிறாள். பத்ரகாளியம்மனை பக்தியோடு வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் அளிப்பாள்.

மாரியம்மன் கோயில் (புன்னைநல்லூர்)

தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகேயே செங்குந்தர் தெருவிலேயே வீரமாகாளியம்மனின் கோயில் அமைந்துள்ளது. செங்குந்தர் வீதியின் கடைசியில் சிறிய ஆலயத்தில் பேரருள் பெருக்கி காளி அருளாட்சி நடத்து கிறாள். இந்த தலத்தின் இரு கண்கள்போல காளியன்னை ஆலயமும், மாரியம்மன் ஆலயமும் திகழ்கின்றன. இரட்டிப்புச் சக்தியோடு இத்தலம் திகழ்கிறது. ஐந்தாண்டுகட்கு ஒரு முறை அன்னை எழுந்தருளும்போது என்னென்ன கிரியைகள், சடங்குகள், பூஜை முறைகள், நெறிமுறைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் அழகாக குறித்து வைத்துக் கொண்டு வழுவாது செய்கின்றனர்.

வீரத்தையும் விவேகத்தையும் செல்வத்தையும் அளிக்கவல்ல தெய்வம் இவள் என்கின்றனர். வீரமாகாளியை பணிவோம். வேண்டும் வரங்களைப் பெறுவோம். இந்த ஏழு தலங்களையும் பக்தர்கள் அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டும். அதிலும் ஆடி மாதத்தில் தரிசித்தால் அன்னை இன்னும் சந்தோஷப்படுவாள். அதுமட்டுமல்லாது சாக்த உபாசகர்களோ தீவிர இறைத் தேடல் உள்ளோர் யாராயினும் இந்த ஏழு தலங்களையும் அவசியம் மறக்காது தரிசிக்க வேண்டும்.

கிருஷ்ணா