முழு முதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனை வரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும்.
*விநாயகர் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களை பொழிகின்றார். சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம்.
*விநாயகருக்கு எளிதாக கிடைக்கக்கூடிய அறுகு வைத்து வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
*சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர்.
*தும்பை பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அறுகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகருக்கு மாலையாக அணிவிக்க உகந்தவையாகும்.
*வசிஷ்டரின் மனைவியான அருந்ததி முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டார்.
*வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து ஒன்பது கன்னிப்பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
*சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும்.
*விநாயகர் விரத முறை:தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.
*கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பூஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் படிப்படியாக கடன் அடைந்து விடும்.
*கல்வியில் முன்னேற்றம், வேலை கிடைக்க வழிபாடு செய்பவர்கள் வலம்புரி கணபதியை பூஜையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் அரச மரத்து விநாயகரை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.
*திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம், ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும்.
*விநாயகர் விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை விடுதல் கூடாது.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.


