Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆழ்வார்கள் பாசுர உரைகளில் மிளிரும் அற்புதக் கதைகள்

பகுதி 1

தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் முதலிய அருள் நூல்கள் நம்முடைய வாழ்வின் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் செழுமைக்கும் உதவி செய்கின்றன. வாழ்வியல் கலையை நமக்குக் கற்பிக்கின்றன. இந்த வரிசையில் ஆழ்வார்கள் பாடிய அருட்பாடல்களுக்கு அவர்களுக்குப் பின் வந்த சான்றோர்கள் மிக அருமையான விளக்க உரையை எழுதிச் சென்று இருக்கின்றனர்.

ஆழ்வார்களுக்கு பின் வந்து இந்த உரைகளை வழங்கியவர்களை, “வைணவ வழிக் குரவர்கள்”அதாவது ஆச்சாரியர்கள் என்பார்கள்.ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னால் 4000 பாசுரங்கள். சிலகாலம் வழக்கில் இல்லாமல் மறைந்து போயிருந்தன. அவற்றையெல்லாம் கண்டுபிடித்துத் தொகுத்து நமக்கு வழங்கியவர், நாதமுனிகள். வைணவ ஆச்சாரிய மரபில் இவர்தான் முதல் ஆச்சாரியர். இவர் பாசுரங்களை மட்டும் தொகுக்கவில்லை. பாசுரங்களுக்கான விரிவான பொருளையும் வழங்கினார். ஆனால் ஏடு படுத்தப்படவில்லை வாய்மொழி வழியாகவே இந்த உரை சொல்லப்பட்டது. அடுத்து வந்த ஆச்சாரிய புருஷர்கள் தங்களுடைய முந்தைய குருமார்களிடமிருந்து கற்ற விளக்கங்களோடு தங்கள் விளக்கங்களையும் இணைத்துச் சொல்லி வந்தார்கள். விளக்கவுரை முதல் முதலில் ஏடுபடுத்தப்பட்டது ராமானுஜர் காலத்தில்தான்.

அவருடைய சீடர்கள் ‘‘உங்கள் காலத்தில் உங்கள் வாய்மொழியாக ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு, குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை வழங்க வேண்டும்’’ என்று கேட்டபொழுது அவர் மறுத்துவிட்டார். அவர் பல பாசுரங்களுக்கு உரை வழங்கி இருக்கிறார். ஆனால், அது செவி வழியாகத்தான் இருந்ததே தவிர, ஏடுபடுத்தப்படவில்லை அதற்கு ராமானுஜர் சொன்ன காரணம் மிக முக்கியமானது.

‘‘இதை நான் எழுதி ஏடு படுத்தலாம். அப்படி என்னுடைய உரை ஏடு படுத்தப்பட்டு விட்டால் அதற்கு பின்னால் வேறு யாரும் உரை எழுத மாட்டார்கள். ராமானுஜர் சொன்ன பிறகு நாம் இதற்கு மேலே சொல்வது சரியாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு உரை சொல்லும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். அதனால் நான் என்னுடைய வாய்மொழியாக இந்த உரைகளை ஏடுபடுத்த விரும்பவில்லை வேண்டுமானால் ஒன்று செய்கிறேன்”என்று சொல்லி, தன்னுடைய வளர்ப்புப் பிள்ளையான திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்கிற சீடனிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதச் சொன்னார்.

அவர் 6000 படி என்ற உரையை எழுதிக் கொடுத்தார். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முதல் முதலில் எழுதப்பட்ட உரை என்பது இதுதான். அதற்குப் பிறகு வந்த உரை ஆசிரியர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தொடர்ந்து உரை எழுத ஆரம்பித்தார்கள். அப்படி உரை எழுதும் பொழுது பெரும்பாலும் முன்னர் சொல்லப்பட்ட உரைப் பகுதிகளையே மேலும் அழகாக விரிவாகச் சொன்னதோடு, அந்த பாசுரங்களின்படி ஆச்சாரியார்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் தங்கள் உரைகளிலே இணைத்தார்கள். அது மட்டுமின்றி தத்துவ விவாதங்கள், அதற்குப் பொருந்தக்கூடிய புராண இதிகாச கதைகள் என பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேர்த்தார்கள். அவர்கள் காலத்தில் இருந்த அரசியல் சூழல்களையும் அதில் இணைத்தார்கள். பண்பாட்டு விஷயங்கள், பழமொழிகள் முதலிய விஷயங்களையும் இணைத்ததால் இந்த உரைகள் அக்காலத்து நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வதற்கான ஆவணங்களாகவும் ஆகியது. இப்படிப் பாசுரங்களுக்கு, முன்னர் நடந்த சில நிகழ்ச்சிகளையும், புராணச் செய்திகளையும் மேற்கோள்களாகக் காட்டுவதை ஐதீக (ஐதிஹ்ய) நிர்வாகங்கள் என்று அழைத்தார்கள்.

ஐதீகம் என்பதற்கு என்ன பொருள் என்பதை பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்கரசாரியார் சுவாமி “ஆச்சாரியர்கள் தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளை பாசுரங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லியதை ஐதீகம் என்று சொல்லுகிறோம் இதி ஹ இதி ஹ அதாவது இப்படியாம் இப்படியாம் என்று சொல்லப்பட்ட கதைகள் தான் ஐதீகம்”என்று விளக்கம் எழுதியிருக்கிறார்.

“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப ஆழ்வார்களின் பாசுரங்கள் படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள், ஆச்சார்யார்கள்.பேராசிரியர் அரங்கராஜன் சுவாமி, “நம்பிள்ளை உரைத்திறன்”என்ற அற்புதமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அவர் இந்த ஐதீக நிர்வாகங்கள் பற்றிச் சொல்லுகின்ற பொழுது குறிப்பிடுவார்.

“வைணவ உரைகளில் நாதமுனிகள் தொடங்கி நஞ்சீயர் வரை ஆசாரியர்கள் வாழ்க்கையில் நடந்த பல சுவையான சம்பவங்களை இதில் காண முடிகிறது. சோழப் பேரரசர்கள், பேரரசர்கள் அவையில் இருந்த பல அரசாங்க அதிகாரிகள், புலவர்கள் பற்றி இந்த உரைகளில் தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தின் 500 ஆண்டுகால அரசியல் வரலாற்று நிலைகளைத் தெரிந்து கொள்வதில் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் எப்படிப் பயன்படுமோ அப்படி இந்த நிகழ்ச்சிகளும் பயன்படுகின்றன”என்று குறிப்பிட்டிருப்பார்.

இவைகளில் சில சுவையான பகுதிகளை சின்னஞ்சிறு கதைகளாகத் தெரிந்து கொள்வோம். முதலில் ஒரு பல்லாண்டு பாசுரம்.

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்

வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்

சிலை குனித்து ஐந்தலைய

பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.

இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் பகவானுக்கு என்ன தீங்கு வருமோ என்று நினைத்து பரிவோடும் தாய் உள்ளத்தோடும் பல்லாண்டு பாடுகிறார்.பொதுவாக தாய் குழந்தையைக் காப்பாற்றுவாள். ஆனால், அன்பு மிகும் பொழுது குழந்தை தன்னுடைய தாயைக் காப்பாற்றுவதாகச் சொல்லும்.

அப்படிச் சொல்வதை தாயும் விரும்பி மிகவும் மகிழ்ச்சியோடு “என்னுடைய குழந்தைக்கு என்மீது எத்தனை அன்பு”என்று சொல்வது போல பெரியாழ்வார் பல்லாண்டு பாட பெருமாள் மகிழ்ச்சி அடைகிறார். எல்லா ஆழ்வார்கள் பாசுரத்திலும் மிக அதிகமாகப் பேசப்படும் அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரத்தின் லீலைகள் தான் பெரும்பாலான பாசுரங்களிலே இருக்கும். இந்தப் பாசுரத்திலும் இருக்கிறது.

இந்தப் பல்லாண்டு பாசுரத்தின் “ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்த வனே”என்ற வரிக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் பட்டர். “அய்யய்யோ, விஷமுள்ள பாம்பின் மீது ஏறி விட்டாயே கிருஷ்ணா,உனக்கு என்ன ஆகுமோ”என்று நினைத்து காளியன் பாம்பின் மீது நடமாடிய நிகழ்ச்சியைச் சொல்லி பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறார். இதுவரை உள்ள விளக்கம் எல்லோருக்கும் தெரியும், புரியும். ஆனால், இந்தப் பாசுரத்தை மிக அழகாக பராசர பட்டர் விளக்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய மிக முக்கியமான சீடரான நஞ்சீயர் ஒரு கேள்வி கேட்டார். மிகவும் சுவையான கேள்வி. ஆனால் சிந்திக்க வேண்டிய கேள்வி.அவர் என்ன கேள்வி கேட்டார்? அதற்கு என்ன பதில் பராசரபட்டர் சொன்னார்? என்பதை அடுத்து நாம் பார்ப்போம்.

(தொடரும்)

பராசரன்