Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மறைந்த முன்னோர்களின் ஆத்மா வழிகாட்டுமா?

?பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

- ஏ. ஜெரால்டு, வக்கம்பட்டி.

தாராளமாக அணியலாம். பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது நல்லது. மாத விலக்கு நிற்காத இளம் வயது பெண்கள் ருத்ராட்சத்தை மாலையாக, அதாவது மார்பு வரை நீளமாக அணியக் கூடாது. கண்டம், அதாவது கழுத்து வரை மட்டுமே, தனது மேலாடைக்குள் மறையாதவாறு, வெளியில் தெரியும்படியாக பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். இதே விதி ஆண்களுக்கும் பொருந்தும். தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கும் ஆண்கள் கழுத்து வரை மட்டுமே ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி விரத காலத்திலும், பூஜை செய்யும் நேரத்திலும் மட்டும்தான் ருத்ராட்சத்தை மாலையாக அணிந்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு நின்ற பெண்கள், தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாத பட்சத்தில் சிவ தீட்சை பெற்று ருத்ராட்சத்தை மாலையாகவும் அணிந்து கொள்ளலாம். இதில் எவ்விதத் தவறும் இல்லை.

?விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற எந்தக் கடவுளை வணங்குவது நன்மை பயக்கும்?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற உடல்பலத்தோடு மனோபலமும் புத்திரபலமும் இணைந்திருக்க வேண்டியது அவசியம். இந்த பலத்தினைத் தருவது ஆஞ்சநேய ஸ்வாமி என்பதால் செவ்வாய்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வந்தால் விளையாட்டுப் போட்டிகளில் தலைசிறந்த வெற்றியைக் காணலாம்.

?மறைந்த முன்னோர்களின் ஆத்மா வழிகாட்டுமா?

- டி. நரசிம்மராஜ், மதுரை.

நிச்சயமாக. இதை அனுபவத்தில் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். இக்கட்டான சூழலில் ஒரு பிரச்னையில் வெளியே வரத்தெரியாமல் தவிக்கும்போது எங்கப்பா தான் எனக்கு வழிகாட்டுனாரு, உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தபோது எங்கம்மா தான் என் பக்கத்துலயே உட்கார்ந்து என்ன பாத்துக்கிட்டமாதிரி இருந்துச்சு என்று சொல்பவர்களை இன்றளவும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, நடைமுறையில் கண்கூடாகப் பார்க்கின்ற உண்மையும் கூட.

?முன்பிறவியின் கர்மாதான் இப்பிறவியின் தொடக்கம் என்றால் பாவம் புண்ணியம் எதற்கு?

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கர்மா என்றாலே செய்த பாவம் என்பதுபோல் தவறாகப் புரிந்து கொள்கிறோம். கர்மா என்றால் செயல். பாப கர்மா, புண்ய கர்மா என்று பாவம், புண்ணியம் இரண்டுமே கர்மாவின் பிரிவுகள்தான். முற்பிறவியில் செய்த செயல்களின் பலனை அனுபவிக்கின்ற விதமாகத்தான் மானிடப் பிறவியை எடுத்திருக்கிறோம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று ஔவை சொன்னது முற்றிலும் உண்மை. பாவத்தை விட அதிகமாக புண்ணியம் செய்தவர்கள்தான் மனிதப்பிறவியை எடுக்க இயலும். அதே நேரத்தில் மனிதனாகப் பிறந்துவிட்டோம் என்ற ஆணவத்தோடு பாவச் செயல்களைச் செய்தால் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையானது அடுத்த ஜென்மாவிலும் தொடரும் என்று சொன்னார்கள். அப்படிச் சொன்னால்தான் மனிதன் தவறு செய்யாமல் இருப்பான் என்பதற்காகச் சொல்லி வைத்தார்கள். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற சிலப்பதிகாரக் கருத்து முற்றிலும் உண்மை. பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே என்று ஜோதிஷ சாஸ்திரமும், ஆயுர்வேத சாஸ்திரமும் ஒரே குரலில் சொல்கின்றன. முன்ஜென்மத்தில் செய்த பாபத்தின் தண்டனையை இந்த ஜென்மத்தில் வியாதியாக அனுபவிக்கிறோம் என்பது இதன் பொருள். அவ்வாறு முன்ஜென்ம பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் என்பது உண்மையாகில் இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கான பலனை அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்போம் என்ற கருத்தும் உண்மைதானே என்ற வாதமும் இங்கே எழுகிறது. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பாவம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்நாளின் இறுதிக் காலத்திற்குள் திருத்திக் கொள்ளும் வாய்ப்பினை இறைவன் அருள்கிறான். தனக்குத்தானே செய்த பாவத்தினை உணர்ந்து அதற்கான தண்டனையை அனுபவிப்பவனுக்கு ஊழ்வினை தொடர்வதில்லை. அவ்வாறில்லாமல் தவறு என்று தெரிந்தும் இறுதி மூச்சு வரை தொடர்ந்து தவறு செய்பவனுக்கு அவன் செய்த பாவமானது அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது என்பதே பெரியோர்கள் சொல்லும் விளக்கம்.

?சாமகோடாங்கியின் வாக்கு பலிக்குமா?

- பி. கனகராஜ், மதுரை.

இது குறி சொல்வது, அருள்வாக்கு போன்ற கணக்கில் வரும் விஷயம் ஆகும். கோடாங்கி சொல்லும் வாக்கு பலிப்பது என்பது இறையருள் அவர்களுக்கு இருந்தால்தான் நடக்கும். அறிவியல் ரீதியாக இதனை நிரூபிக்க இயலாது. தற்காலத்தில் முறையாக விரதம் இருந்து இறையருளோடு குறி சொல்பவர்கள் என்பவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள். இளம் தலைமுறையினர் கோடாங்கிகளை பிச்சையெடுப்பவர்களில் ஒரு வகையினர் என்றுதான் புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் பிரதிபலன் ஏதும் எதிர்பாராது தன் மனதில் தோன்றும் விஷயங்களை இரவு ஜாமத்தில் வந்து வீட்டு வாயிலின் முன் சொல்லிவிட்டு போகும் சாமகோடாங்கிகளை இக்காலத்தில் பார்க்க இயலவில்லை.

?மனம் என்ற மாயையில் இருந்து விடுபட உச்சரிக்க வேண்டிய மந்திரம் எது?

- ஏ. மூர்த்தி, திருவள்ளூர்.

அகாரம், உகாரம் மற்றும் மகாரம் ஆகியவற்றின் இணைவாகிய ஓம்காரம் எனும் ப்ரணவ மந்திரமே மாயையில் இருந்து விடுபட உதவுவது ஆகும். தினந்தோறும் குறைந்த பட்சமாக பத்து நிமிடங்கள் கண்களை மூடி ஓம் எனும் மந்திரத்தை மனதில் ஜபித்துக் கொண்டே சிந்தையில் ஜோதியைக் காண்பவர்கள் மனம் எனும் மாயையில் இருந்து எளிதில் விடுபட்டு விடுவார்கள்.

?ஜாதகத்தில் ராகு - கேது உள்ள பெண்களை ஆண்களுக்கு திருமணம் செய்யலாமா?

- மு. விஜயராணி, ராமநாதபுரம்.

இது என்ன கேள்வி? எல்லோருடைய ஜாதகங்களிலும் ராகு-கேது, சனி, செவ்வாய் போன்ற கிரஹங்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு ஜாதகம் என்றாலே ஒன்பது கிரஹங்களுமே இருக்கும்தானே. அந்த கிரஹங்கள் இருக்கும் பாவகத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அவரவர் ஜாதகங்களில் பலன் என்பது நடக்கிறது. அவர வருக்கு வாழ்க்கைத்துணை என்பது எப்படி அமையவேண்டும் என்று விதி எழுதப்பட்டிருக்கிறதோ அப்படித்தான் அமையப் போகிறது. இதில் ராகு-கேது இருக்கிறது, இந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது, இந்தப் பெண்ணிற்கு சனியின் தாக்கம் இருக்கிறது என்று நாமாக ஒரு ஜாதகத்தை ஒதுக்குவது என்பது முற்றிலும் மூடநம்பிக்கையே. நீங்கள் குறிப்பிடும் ராகு-கேது தோஷம் உள்ள பெண்களுக்கும் திருமணம் என்பது நடந்து அவர்களும் நல்லபடியாகத்தான் குடும்பம் நடத்துவார்கள். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.