27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் பரணி. “பரணி” என்றாலே தாங்குவது, சுமப்பது என்ற பொருள். ஒரு கருவைத் தாங்கி, உயிரை உலகத்திற்குக் கொண்டு வருவது போல, வாழ்க்கையில் பொறுப்புகளைத் தாங்கி, ஒரு காரியத்தை முடிவு வரை கொண்டு செல்லும் சக்தியை இந்த நட்சத்திரம் குறிக்கிறது.
பரணி நட்சத்திரம் முழுவதுமாக மேஷ ராசியில், 13°20’ முதல் 26°40’ வரை அமைந்துள்ளது. இதன் அதிபதி சுக்கிரன். நட்சத்திரத்தின் தெய்வம் எமதர்ம ராஜா. பரணியின் அடையாளம் கருப்பை அல்லது யோனி. கணம் மனுஷ்ய கணம். பரணியின் இந்த அமைப்புகளே இந்த நட்சத்திரத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முக்கியமான திறவுகோல்கள்.
பரணியின் நட்சத்திர அதிபதி சுக்கிரன். அது அமைந்திருக்கும் ராசி செவ்வாயின் மேஷம். சுக்கிரன் அழகு, கலை, அன்பு, வசதி, இன்பம் ஆகியவற்றைக் குறிக்கிறார். செவ்வாய் வேகம், துணிவு, போராட்டம், விடாமுயற்சி, ஆவேசம் ஆகியவற்றைக் குறிக்கிறார்.
அதனால் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சுக்கிரனின் ரசனையும், செவ்வாயின் துணிவும் கலந்திருப்பதைப் பார்க்கமுடியும்.
ஒருபுறம் அழகையும் நேர்த்தியையும் விரும்புவார்கள்.மறுபுறம், தங்களுக்கு சரி என்று தோன்றிய விஷயத்தில் விடாப்பிடியாக நின்று போராடுவார்கள்.
பரணியின் நான்கு பாதங்களும் மேஷ ராசியிலேயே உள்ளன. ஆனால் நவாம்சத்தில் ஒவ்வொரு பாதமும் வெவ்வேறு ராசிக்குச் செல்கிறது.
முதல் பாதம் - சிம்ம நவாம்சம்
இரண்டாம் பாதம் - கன்னி நவாம்சம்
மூன்றாம் பாதம் - துலாம் நவாம்சம்
நான்காம் பாதம் - விருச்சிக நவாம்சம்.
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. சுக்கிரனுக்கு கன்னி நீச ராசி. எனவே பரணியின் இரண்டாம் பாதம் கன்னி நவாம்சத்தில் அமைவதால் சுக்கிரன் நவாம்சத்தில் நீச நிலையில் இருப்பதாகக் கருதப் படுகிறது.
மூன்றாம் பாதம் துலாம் நவாம்சம். துலாம் சுக்கிரனுடைய சொந்த ராசி. எனவே இங்கு
சுக்கிரன் ஆட்சி நிலையில் இருக்கிறார்.
இதனால் பரணியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதங்களில் பிறந்தவர்களிடம் சுக்கிரனுடைய பலன்கள் வெளிப்படும் விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால் ஒருவருடைய முழு ஜாதகத்தையும் பார்க்காமல், நட்சத்திரப் பாதத்தை மட்டும் வைத்து முடிவு
செய்யக்கூடாது.
பரணியின் தெய்வம் எமதர்ம ராஜா. எமன் என்றாலே மரணம் மட்டுமே நினைவுக்கு வரக்கூடாது. எமதர்மன் என்பது தர்மம், நீதி, செய்த செயலுக்குரிய விளைவு ஆகியவற்றோடு தொடர்புடைய தெய்வீகத் தத்துவம்.
அதனால் பரணி நட்சத்திரக்காரர் களிடம் “எது சரி, எது தவறு?” என்ற எண்ணம் வலுவாக இருக்கும். அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களாக இருந்தாலும் தவறு என்றால் தவறு என்று சொல்லக் கூடியவர்கள்.
அதனால்தான் சில சமயம்,“வெட்டு ஒன்று, துண்டு இரண்டு!”என்று பேசுபவர்கள் போலத் தோன்றலாம். இது அவர்களுக்கு ஒரு பலமும் கூட; அதே நேரத்தில் ஒரு குறையும் கூட. உண்மையை நேரடியாகச் சொல்வது நல்லதுதான். ஆனால், அந்த உண்மையை எப்படிச் சொல்கிறோம் என்பதும் முக்கியம்.
“பரணி” என்ற பெயரிலேயே தாங்குதல் இருக்கிறது. வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் உடனே பின்வாங்காமல், அதைத் தாங்கிக் கொண்டு மீண்டு வரக்கூடிய மன வலிமை இவர்களிடம் இருப்பதாக ஜோதிட மரபு கூறுகிறது.
ஒரு வேலையைத் தொடங்கிவிட்டால் அதை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பொறுமையாகக் காத்திருக்கவும் தெரியும்.
ஆனால், அந்தப் பொறுமையின் எல்லையை யாராவது மீறிவிட்டால், நீண்ட நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபம் ஒரே நேரத்தில் வெளிப்படவும் வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரக்காரர்கள் குடும்பத்தினர் மீதும் நெருங்கிய நண்பர்கள் மீதும் அதிகமான அன்பும் நம்பிக்கையும் வைப்பார்கள்.
ஒருவரை தங்களுடையவர் என்று ஏற்றுக்கொண்டுவிட்டால் முழு மனதுடன் பழகுவார்கள். அந்த நம்பிக்கை குலைக்கப்பட்டால் மிகவும் மனம் வருந்துவார்கள். அதனால் இவர்களிடம் உறவு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் ஆழமான உறவாகிவிடும்.
சுக்கிரனுடைய நட்சத்திரம் என்பதால் அழகு, கலை, இசை, அலங்காரம், ஆடை, வாசனை, வசதியான வாழ்க்கை போன்ற வற்றில் இயல்பான ஈர்ப்பு இருக்கலாம். பேச்சிலும் ஒரு வசீகரம் இருக்கும்.
ஒரு பொருளை வெறுமனே பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவார் கள். வீடு, வாகனம், உடை, அலங்காரம் போன்றவற்றில் ரசனை இருக்கலாம்.அதனால் “சுகத்தை அனுபவிக்கத் தெரிந்தவர்கள்” என்றும் பரணி நட்சத்திரக்காரர்களைச் சொல்லலாம். ஆனால், இதுவும் முழுமையான ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைப் பொறுத்தே மாறும்.
பரணி மேஷத்தில் அமைந்திருப்பதால் செவ்வாயின் தாக்கமும் இருக்கிறது. இதனால் துணிவு, தைரியம், போட்டி மனப்பான்மை, விடாமுயற்சி ஆகியவை வரலாம்.தங்களுக்கு நியாயம் என்று தோன்றிய விஷயத்தை எளிதில் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
இதனால்தான் “பரணி” என்ற பெயரைக் கேட்டவுடன் போர்க் குணம் நினைவுக்கு வருவது இயல்பாக
இருக்கிறது. தமிழ் இலக்கிய மரபில் பரணி என்பது போரில் வெற்றி பெற்ற வீரனைப் போற்றிப் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகையாக வளர்ந்தது.
ஆனால், “பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு போர்க் குணம் கட்டாயம் இருக்கும்” என்று கூறுவது சரியல்ல. நட்சத்திரத்தின் குறியீட்டு தன்மையையும், ஜாதகத்தின் மற்ற அமைப்புகளையும் இணைத்துத்தான் பார்க்க வேண்டும்.
பரணி நட்சத்திரக்காரர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு சுவையான ஜோதிட மொழி: “பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வார்.” இதனை அப்படியே அரச பதவி கிடைக்கும் என்ற பொருளில்
எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
சுக்கிரன் தரும் செல்வாக்கு, மேஷம் தரும் துணிவு, எமதர்மன் தரும் நியாய உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில், பத்துப் பேர் இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் இவர்களைத் தனியாகக் கவனிக்க வைக்கும் தன்மை இருக்கலாம்.
தலைமைப் பொறுப்பு கிடைத்தால் வேலைகளை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஒழுங்கு வேண்டும். காலக்கெடு வேண்டும்,வேலை சரியாக முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதனால் சில சமயம் கடுமையான நிர்வாகி போலத் தோன்றலாம். ஆனால், தங்களுடன் இருப்பவர்களை அரவணைத்துச் செல்லும் திறனும் இவர்களிடம் இருக்கலாம்.
பரணி நட்சத்திரக்காரர்களைப் பற்றி பேசும்போது இதையும் சொல்லாமல் இருக்க முடியாது! சுக்கிரன் போககாரகன் என்பதால் நல்ல உணவு, ருசி, சுவை, வசதி போன்றவற்றில் ஆர்வம் இருக்கலாம். சாப்பிடும்போது அவசரமாகச் சாப்பிடாமல், ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். எந்த ஊரில் எந்த உணவு சிறப்பு என்பதையும் தெரிந்து வைத்திருப்பார்கள்! சாப்பாட்டு பிரியர்களாக மட்டுமல்லாமல், உணவு தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம்.
பரணி நட்சத்திரம் குறித்து, இன்னும் சில சுவையான செய்திகளையும், இயல்புகளையும், இவர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எந்த ரத்தினத்தை அணிய வேண்டும் போன்ற விஷயங்களையும் அடுத்த பகுதியில் காணலாம்.
பராசரன்



