Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருமண வாழ்க்கையை ராகு பாதிப்பாரா...

ஒரு நண்பர் சொன்னார்.

‘‘எனக்கு லக்னத்தில் ராகு. திருமண வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கிறது’’ என்றார். நான் சொன்னேன்;

‘‘எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’’

‘‘ஒரு ஜோதிடர் சொன்னார். ராசிக்கோ லக்னத்துக்கோ ஒன்றாம் இடத்திலும் இரண்டாம் இடத்திலும் ராகு-கேது இருந்தால், மனைவி சரியாக அமையாது. பெண் ஜாதகத்தில் இருந்தால் கணவன் சரியாக அமைய மாட்டான். அப்படித்தான் என் ஜாதகம் இருக்கிறது’’ என்றார். நான் சொன்னேன்;

‘‘உங்கள் கணக்குப்படி பார்த்தால், இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் 90 கோடி மக்கள், கணவன் அல்லது மனைவி சரி இல்லாமல் இருப்பார்கள்’’ என்றதும் அவர் சிரித்தார்.

‘‘சும்மா சொல்லாதீர்கள்’’ என்றார். நான் கணக்கு சொன்னேன்;

‘‘ராகு - கேதுக்கள் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) சஞ்சரிக்கிறார்கள். ஒரு நாளில் லக்னம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், எவர் எங்கு பிறந்தாலும் இந்தச் சமன்பாட்டின்படி பூமியில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு லக்னம் அல்லது ராசிக்கு 1, 2, 7, 8-ஆம் இடங்களில்தான் ராகு - கேதுக்கள் வர நேரிடும். இதை வைத்துப் பார்த்தால், உலகத்திலுள்ள அத்தனை பேருக்கும் திருமண வாழ்க்கை பாழாகிவிடும் என்று சொல்வது ஜோதிடத்தின் அடிப்படை விதிகளையே அறியாத அறியாமையாகும்’’

``அப்படியா?’’

``ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். வான மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் இயற்கையின் வெவ்வேறு ஆற்றல்களின் வெளிப்பாடுகள்தானே தவிர, எங்குமே தீய நட்சத்திரம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய தேவதைகளும், அதன் அதிபதிகளும் அந்தந்த ஆன்மாக்களின் கர்மவினைகளைச் செப்பனிடவே உதவுகின்றன. நட்சத்திரங்களின் தன்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவற்றுக்கு முத்திரை குத்துவது தவறு.

‘‘அப்புறம் ராகு -கேது, சர்ப்பதோஷம் என்று பயமுறுத்துகிறார்களே....’’ என்றார்.

‘‘அப்படி பயமுறுத்தி பலருக்கு திருமணமாகவில்லை. திருமணம் ஆனாலும் மனைவி கணவனை அனுசரிப்பது கிடையாது; கணவன் மனைவியை அனுசரிப்பது கிடையாது. இரண்டு பேருமே ராகு-கேதுவை நினைத்துக்கொண்டு வாழ்க்கையை கஷ்டப்படுத்திக் கொண்டு, பிறருக்கும் கஷ்டம் தருகிறார்கள்’’.

‘‘அப்படித்தானே இருக்கிறது. இதன் உண்மைதான் என்ன?’’ என்று வினவினார்.

‘‘ஜோதிடத்தில் ராகுவைப் பற்றிப் பேசும்போது அவரைப் பற்றிய பயமே அனைவரிடமும் முதலில் உருவாக்கப்படுகிறது. ஆனால், பராசர மற்றும் உண்மையான ஜோதிட தத்துவத்தின்படி, ராகு என்பது வெறும் அச்சமூட்டும் கிரகம் அல்ல; ராகு என்பது மாயை (Illusion), விஸ்தரிப்பு (Expansion) மற்றும் பெருக்கல் (Multiplication) தன்மையைக் குறிக்கும். எங்கு ராகு இருக்கிறாரோ, அந்த இடத்தின் விஷயங்களை அவர் பலமடங்கு பெரிதுபடுத்திக் காட்டுவார். லக்னத்தில் ராகு இருந்தால் சுயமரியாதை, தனித்துவமான சிந்தனை, உலகியல் அறிவு மற்றும் சாதிக்கும் ஆர்வம் ஆகியவற்றைத் தருவார்.’’

‘‘பிறகு?’’

‘‘ராகுவுக்கு என்று சொந்த ராசி கிடையாது. அவர் எந்த ராசியில் நிற்கிறாரோ, எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறாரோ, அந்த வீட்டின் அதிபதி மற்றும் நட்சத்திர நாதனின் தன்மையையே முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுவார். எனவே, ராகு நின்ற இடத்தின் பலன் என்பது அங்குள்ள மற்ற கிரகச் சேர்க்கைகளைப் பொறுத்தே முழுமையாக மாறுகிறது’’ என்றேன்.

‘‘கேட்க நன்றாகத்தான் இருக்கிறது...’’ என்றும் அவர் சொன்னார்.

‘‘ராகு, நம்மிடம் உள்ள ‘பேராசை’ அல்லது ‘அடைய வேண்டும் என்ற தீவிரமான பசியைக் குறிக்கிறார். ஆன்மிகத்தில் உயர் நிலையை அடையத் துடிக்கும் தீவிரமான தேடலையும், (எதிர்முனை கேது), லௌகீகத்தில் உச்சத்தைத் தொட வைக்கும் ஆற்றலையும் ராகுவே வழங்குகிறார். ஸ்ரீராமானுஜர் திருவாதிரை. ராசியில் ராகு. ராகு என்பது எல்லைகளை மீறும் சக்தி, வழக்கமான சமூகக் கட்டமைப்பினை உடைத்தெறிவது.

ராமானுஜர் தன் காலத்தில், சாதி மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, தாழ்த்தப்பட்ட மக்களையும் எம்பெருமானின் திருவடிக்கே அழைத்துச் சென்று விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பரப்பியவர். இது ராகுவின் ‘எல்லை கடந்த விஸ்தரிப்பு’ (Expansion) மற்றும் புரட்சிகரமான சிந்தனையின் ஆன்மிக வடிவம். திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியான ராகு, உலகியல் ஆசைகளைக் கடந்து பிரபஞ்சத்தோடு ஒன்றிணையும் ஆன்மிகத் தேடலைத் தீவிரமாக மாற்ற வல்லவர். ராமானுஜரின் வாழ்வு அதற்குச் சிறந்த சான்று’’ என்று கூறினேன். அதற்கு அவரோ...

‘‘ஆஞ்சநேயர்?’’ என்றும் கேள்வி கேட்டார்.

‘‘மூலம், கேதுவின் நட்சத்திரம். ராகுவின் எதிர்முனை. கேது பகவான் ஆன்மிக முக்திக்கும், பற்றின்மைக்கும், ஞானத்திற்கும் காரகக் கிரகம். ஜாதகத்தில் கேதுவின் தாக்கம் அதிகரிக்கும் போது, உலகப் பற்றுகள் நீங்கி, இறைவனிடம் முழுமையாகச் சரணடையும் பக்தி மேலோங்கும்’’.

‘‘ம்’’

‘‘கேதுவின் உன்னத வடிவமாகப் பார்க்கப்படுபவர், ஆஞ்சநேயர். ‘‘ராமதாசனாக’’ எவ்வித அகந்தையும் இன்றி, முழுமையான பக்தி மற்றும் தொண்டுள்ளத்துடன் (Surrender) வாழ்ந்தவர், ஆஞ்சநேயர். ராசியிலோ அல்லது ஆன்மிக வழியிலோ கேதுவின் ஆதிக்கம் பலமாக இருக்கும். ஒருவருக்கு, ஆஞ்சநேயரின் உபாசனையும், வழிபாடும், ஆன்மிகத்தின் உச்ச நிலையான ‘நிபந்தனையற்ற பக்தி மற்றும் முக்தியை’ (Spiritual Liberation) எளிதில் பெற்றுத் தரும்’’ என்றேன்.

‘‘திருமணச் சிக்கல் பற்றி?’’ என ஒரு கேள்வியை கேட்டார்.

‘‘1 அல்லது 7ல் ராகு இருந்தால், திருமணமே நடக்காது அல்லது வாழ்க்கை நரகமாகிவிடும் என்பது ஜோதிடத்தின் பொதுவான விதி அல்ல. அங்குள்ள பார்வை பலம், சுபர்களின் தொடர்பு (குரு அல்லது சுக்கிரனின் பார்வை) இருந்தால், அந்த ராகுவே தம்பதியினருக்கு இடையே வழக்கத்திற்கு மாறான ஒரு சிறந்த புரிதலை உருவாக்கித் தருவார்’’ என்றதும்;

‘‘நீங்கள் சொல்வது ஆறுதலாக இருக்கிறது’’ என்றார்.

‘‘ஜோதிடம் என்பது மனிதர்களை அச்சுறுத்தி அவர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கான சாஸ்திரம் அல்ல. மாறாக, வாழ்வியலின் அறத்தையும், கர்ம வினைகளையும் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் வாழ்வதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமே’’

‘‘அப்படியானால் என் வாழ்வை ராகு கெடுக்கவில்லையா?’’

‘‘இல்லை’’

‘‘பிறகு யார் கெடுக்கிறார்கள்?’’

‘‘யாரும் கெடுக்கவில்லை. நீங்களும் உங்கள் மனைவியும் கெடுத்துக் கொள்கிறீர்கள்’’ என்று சொன்னேன்.