?தீபாவளி அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பதன் ஐதீகம் என்ன?
- ஸ்ரீநாத், வேளச்சேரி, சென்னை.
ஐப்பசி மாத அமாவாசை நாளில், கேதாரகௌரி விரதம் கொண்டாடப் படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை, ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது, தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்கு உரிய கிரஹமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரஹமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்கு உரிய பிரத்யதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்கு உரிய பிரத்யதி தேவதை கௌரி. நீசம் பெற்ற தந்தை ஆகிய சூரியனோடு, தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக, பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது.
சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்திசெய்து, அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும். கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம்.
இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் மற்றும் நரகாசுரனின் தாய்) வில்லெடுத்துப் போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா..... அதாவது, தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள். குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன் - மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைப்பிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுரவதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
?கோயில் பிரசாதத்தை வீணாக்கினால் பாவம் வந்து சேருமா?
- ரமேஷ், நாமக்கல்.
நிச்சயமாக. பிரசாதம் மட்டுமல்ல, வெறும் சாதத்தை வீணாக்கினாலே பாவம் என்பது வந்து சேரும். ``அன்னம் ந நிந்த்யாத்’’ என்கிறது வேதம். அன்னத்தை நிந்திக்காதே, அன்னத்தை பழித்தல் கூடாது. உணவினை உண்ணும்போது கீழே இறைத்தல் கூடாது என்று பலவிதமாக வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு தர்மசாஸ்திரம் அடித்துச் சொல்கிறது. வெறும் சாதத்திற்கே இப்படியென்றால், சாதத்திலேயே உயர்ந்ததாகக் கருதப்படும் பிரசாதம் என்பது கிடைத்தற்கரிய ஒன்று. வெறுமனே சமைத்த சாதம் ஆனது இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்போது, அது உயர்ந்த பொருளாக அதாவது, பிரசாதமாக மாறிவிடுகிறது. அத்தனை உயர்வான ஒரு பொருளை வீணாக்குவது என்பது மடமையான செயல் அல்லவா.. கையில் கிடைத்த மகாலட்சுமியை யாராவது தூக்கி எறிவார்களா. சாதத்தை அன்னலட்சுமி என்றுதானே அழைக்கிறோம். அப்படியிருக்க, சாதத்தை வீணாக்குவது என்பதும் செல்வத்தை தூக்கி எறிவதற்குச் சமமே. அதிலும் அத்தனை ஐஸ்வரியமும் நிறைந்த, இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட, கிடைத்தற்கரிய கோயில் பிரசாதத்தை வீணாக்குவது என்பது நிச்சயமாக பாவச் செயல்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?எதிர் சுக்ரன் அல்லது எதிர் வெள்ளி கூடாது என்றால் என்ன?
- சாருமதி, திருச்சி.
வீடு கிரஹபிரவேசம் செய்யும்போது, எதிர் வெள்ளி கூடாது என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். எதிர் வெள்ளி கூடாது என்றால், வீட்டிற்குள் நுழையும் திசையில் வெள்ளி இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு, ஒரு வீட்டின் தலைவாயில் என்பது கிழக்கு நோக்கி இருப்பதாக வைத்துக் கொள்வோம். மரத்தால் செய்யப்பட்ட அந்த வாயிலுக்கு வீட்டின் எஜமானர் தனது இல்லத்தரசியுடன் இணைந்து பூஜை செய்து தம்பதியராக உள்ளே நுழைவார்கள். கிழக்கு நோக்கிய தலைவாயிலாக இருந்தால், இவர்கள் மேற்கு நோக்கி உள்ளே நுழைவார்கள். அவ்வாறு நுழையும்போது மேற்குத் திசையில் வெள்ளி இருக்கக் கூடாது என்பதைத்தான் ஜோதிடர்கள் வலியுறுத்துகிறார்கள். கிழக்கு நோக்கிய வாயிலுக்கு மேற்கில் வெள்ளி இருக்கும்போதும், மேற்கு நோக்கிய வாயிலுக்கு கிழக்கில் வெள்ளி இருக்கும்போதும், குடிபுகுதல் கூடாது. வடக்கு அல்லது தெற்கு நோக்கிய வாயில் கொண்ட வீடுகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது.
இந்த விதியானது தனி வீடுகளுக்குத்தான் விதிக்கப்பட்டுள்ளதே தவிர, அடுக்கு மாடி குடியிருப்பு அதாவது பிளாட்டுகளுக்குப் பொருந்தாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீண்ட காலத்திற்கு வெள்ளி மேற்கிலேயே இருக்கிறார் எனும்போது, கிழக்கு பார்த்த வாயில் கொண்ட தனி வீடுகளுக்கு இந்த காலத்தில் புதுமனைபுகுவிழா நடத்த முடியாதா, நீண்ட நாட்களுக்கு இந்த வீடுகள் மூடித்தான் கிடக்க வேண்டுமா என்ற ஐயமும் நம் மனதில் உருவாகக் கூடும். இதற்கும் விதிவிலக்கு என்பது உண்டு.
அதாவது வெள்ளி என்பது விடியற்காலை நேரத்தில்தான் கண்களுக்குப் புலப்படும். பொதுவாக சூரிய உதயத்திற்கு முன் புதுமனைபுகுவிழா நடத்திவிட வேண்டும் என்ற சம்பிரதாயம் நம்மால் கடைப்பிடிக்கப்படுவதால், எதிர் வெள்ளி என்ற விதி அங்கே வந்து சேர்கிறது. விடிந்த பிறகு சூரிய ஒளியின் தாக்கம் தொடங்கிவிடுவதால், வெள்ளி அங்கே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் விடிந்த பிறகு தோஷமில்லாத வகையில் ஒரு நல்ல லக்னத்தை நிர்ணயம் செய்து அந்த நேரத்தில் கிரஹபிரவேசம் செய்யும்போது எதிர் சுக்ரனால் எந்தவிதமான தோஷமும் உண்டாகாது.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.


