நவகிரகங்களின் நாயகர் எனப் போற்றிப், பூஜிக்கப்படும் சூரிய பகவான், சிம்ம ராசியில் பூரண பலம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தையே "ஆவணி மாதம்" எனக் கொண்டாடுகிறோம்.
சிம்மராசி, சூரியனின் ஆட்சிவீடாகும்! மேஷராசி, அவரது உச்சராசி! துலாம்ராசி, அவரது நீச்சராசி!
சூரிய பகவானின் தெய்வீகப் பெருமையும், சக்தியும் அளவற்றவை!
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகரான சூரிய பகவானின் ஆற்றலும், சக்தியும் எண்ணிலடங்கா!
நவகிரகங்களுக்கு நாயகன், சூரியனே! அவதாரப் புருஷரான, ஸ்ரீ ராமபிரான் "ஆதித்ய ஹிருதயம்" என்னும் தன்னிகரற்ற ஸ்லோகங்களினால் சூரிய பகவானைப் பூஜித்து, அதன் பலனாகவே ராவணனை வெல்லும் சக்தியைப் பெற்றார்.
வேத மந்திரங்களின் "தாய்" எனப் பூஜிக்கப்படும் காயத்ரி மகா மந்திரத்திற்கு நாயகன், சூரிய பகவானே ஆவார்.
ஆயுர் வேத சாஸ்திரத்தில், தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவருவதின் சக்தி விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், எவ்வித நோயும் நம்மை அணுகாது எனக் கூறுகிறது, ஆயுர் வேத சாஸ்திரம். சூரிய பகவானின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து, கணிக்கப்படும் கணித முறை, "சூரிய சித்தாந்தம்" எனப் போற்றப்படுகிறது.
யஜூர் வேதம், சூரியனின் பெருமைகளை விவரிக்கிறது. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் சூரிய பகவானே தலைவராவார். திடகாத்திரமான சரீரம், நோயற்ற சருமம், நீண்ட ஆயுள், ஆரோக்கியமான இருதயம், திட புத்தி ஆகியவற்றை அளித்தருள்பவர், சூரியபகவானே!
"ஆதித்திய ஹிருதயம்" எனும் ஒப்புயர்வற்ற மந்திர பலத்தினால், ஸ்ரீ ராமபிரான், ராவணனை வெற்றிபெறும் ஆற்றலைப் பெற்றார். திருமணத்திற்கு உகந்த மாதமாகவும், மழலை பாக்கியம் தரக்கூடிய மாதமாகவும் ஆவணி மாதத்தினைப் போற்றிப் புகழ்கின்றன, "ஜோதிட பாரிஜாதம்" எனும் பழம்பெரும் நூல்.
இத்தகைய தெய்வீகப் பெருமைகளையும், சக்திகளையும் ஒருங்கே கொண்டுள்ள சூரிய பகவானும், மற்ற கிரகங்களும், இம்மாதம் நமக்கு அளிக்கவிருக்கும் நன்மை தீமைகளை புராதன ஜோதிட நூல்களின் அடிப்படையில் கணித்து வழங்குவதில் மனநிறைவை அடைகின்றோம். தேவையான ராசியினருக்கு எளிய, மிகவும் சக்திவாய்ந்த பரிகாரங்களையும் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். தினகரன் வாசக அன்பர்கள் இவற்றின்மூலம் பயனடையுமாறு பிரார்த்திக்கின்றோம். இனி, இம்மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளைக் காண்போமா?
ஆவணி 1 (18-8-2026) - செவ்வாய்க்கிழமை - சஷ்டி விரதம்.
ஆவணி 4 (21-8-2026) வெள்ளிக்கிழமை - ஸ்ரீ வரலட்சுமி விரதம். வீட்டில் கலசம் வைத்து, ஸ்ரீ லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்வித்து, ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிப்பதன்மூலம், குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழியும். சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை பாக்கு - பூ - பழத்துடன் கூடிய தாம்பூலம், ரவிக்கைத் துண்டு, பொருள் வசதி படைத்தவர்கள் புடவையுடன்கூடிய ரவிக்கைத் துண்டு கொடுத்து வணங்க வேண்டும். இவ்விதம் பக்தி சிரத்தையுடன் பூஜைகளைச் செய்துவரும் பெண்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தீர்க்க நித்ய சுமங்கலிகளாகப் பரிமளிப்பர் இப்பாரினில்! அவர்தம் அபிலாஷைகள் அனைத்தும் ஈடேறுவது திண்ணம்.
ஆவணி 6 (23-8-2026) ஞாயிற்றுக்கிழமை - சர்வ ஏகாதசி. கங்கையை விடப் புனிதமான நீர் இல்லை. அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. காயத்ரி மகா மந்திரத்திற்கு நிகரான வேறு மந்திரம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு! அதுபோல், ஏகாதசி விரதத்திற்கு இணையானதோர் விரதம் இப்பாரினில் இல்லை என அனைத்து புராணங்களும், இதிகாசங்களும்அறிவுறுத்துகின்றன, ஏகாதசி விரதம் அனைத்து பாபங்களையும் போக்க வல்லது.
ஆவணி 8 (25-8-2026) செவ்வாய்க்கிழமை - பிரதோஷம் பிரதி ஒவ்வொரு மாதத்திலும் கிருஷ்ணபட்ச சுக்லபட்ச பிரதோஷத்தன்றும், பகலில் நிர்ஜலமாய் (நீர்கூட அருந்தா நிலை) உபவாசமிருந்து, பிரதோஷகாலமாகிய 4.30 மணிக்கு மேல் சாம்ப சிவ மூர்த்தியை ரிஷபரூட ராக தரிசனம் செய்ய வேண்டும். இன்றைய தினமாகிய செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம் வருவதால், இந்நாளில் இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு, கடன் தொல்லை அறவே இராது இவ்விரதத்தின் பெருமைகளைப் பற்றி அனைத்து புராணங்களிலும் உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். அதன் பலாபலனை அனுபவத்தில் கண்டு மகிழ்வீர்கள் என்பது உறுதி. மேலும், இன்று துவாதசி திதி.
ஆவணி 9 (26-8-2026) புதன்கிழமை - சிரவண விரதம். மஹாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் (சிரவணம் "திருவோணத்தான் உலகாளுமென்பார்களே..!" என்பது ஆழ்வார் திருவாக்கல்லவா?). இந்தத் தினத்தில் உபவாசமிருந்து, ஸ்ரீ மஹா விஷ்ணுவைப் பூஜித்தால், பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அனைத்துவித சுகங்களும், நீங்கள் கோராமலேயே உங்களை வந்தடையப்போவது திண்ணம். மேலும், இன்றைய தினம் ருக் உபாகர்மா. ஓணம் பண்டிகை, ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் அபிஷேகத்திற்கு, இளநீர், பால், தயிர், பசுநெய், கரும்புச் சாறு, பஞ்சா மிருதத்திற்குத் தேவையான பழவகையறாக் களை கோயிலில் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள்.
ஆவணி 10 (27-8-2026) வியாழக்கிழமை - பெளர்ணமி விரதம் மாத்ரு காரகர் எனப் போற்றப்படுபவர் சந்திரன். மனித மனத்திற்கும் காரகத்துவம் வாய்ந்தவர். அதனால்தான், இந்நாளில் சில மனிதர்கள் முக்கியமாக மனப்பிரமை (மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்) விவேகமில்லாமல் நடந்து கொள்வார்கள். மேலும், சந்திரனின் அதிதேவதை நீர்நிலைகள். அதனால்தான் இக்காலகட்டங்களில் பெரும் அலைகள் கடலினுள் உருவாகின்றது. இந்நன்னாளில் உபவாசமிருந்து, மாலையில் சந்திரனை தரிசித்தபிறகு, ஸ்ரீ சத்திய நாராயணப் பெருமானை துளசி தளங்கொண்டு பூஜிக்க வேண்டும். இந்நாளில் தன்னைப் பக்தி சிரத்தையுடன் பூஜிப்பார்க்கு, சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வதாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளபடியாலேயே இவ்விரதத்திற்கு " ஸ்ரீ சத்திய நாராயண விரதம்" என்ற காரணப் பெயராயிற்று! வாசக அன்பர்கள் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து, உங்கள் அபிலாஷைகள் அனைத்தும் ஈடேறிடுமாறு இறைவனை வேண்டி, வணங்கிப் பிரார்த்திக்கின்றேன். இன்றைய தினம் ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி, யஜூர் உபாகர்மா.
ஆவணி11 (28-8-2026) வெள்ளிக்்கிழமை - காயத்ரி ஜெபம்.
சதய நட்சத்திரத்தில், இந்திய நேரப்படி காலை 8.05 மணி முதல், பகல் 11.25 வரை நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சந்திர கிரகஹணம் ஐரோப்பா, ஆசியா, வடதென்அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்ட்டிக்காவில் தெரியும் சந்திர கிரஹணம். நம் பாரதத்தில் தெரியாது! ஆகையால், யாரும் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை!
ஆவணி 15 (1-9-2026) செவ்வாய்க்கிழமை - சித்த மகாபுருஷர் சுந்தரனார்ன் திருநட்சத்திரம். மேலும், இன்று பௌமாஸ்வினி. "பௌம" என்ற சொல்லிற்கு செவ்வாய் எனவும், "மாஸ்வினி" என்கிற பதத்திற்கு செவ்வாய்க்கிழமை மற்றும் அஸ்வினி நட்சத்திரம் இணையும் நன்னாள். இன்றைய தினமாகிய வளர்பிறை சதுர்த்தசி திதியுடன்கூடியதும், பௌமாஸ்வினி நன்னாளுடன் கூடியதும், செவ்வாய்க் கிரகத்தின் ஆட்சி வீடாகிய மேஷராசிக்குள், சந்திரன் வலம் வருகையில், அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வருவது அளப்பரிய புண்ணிய பலனைப் பெற்றுத் தரவல்ல சுபதினமாகும்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் மூல மந்திரத்தில் கூறப்பட்டுள்ள, "உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்" இதில் "ஜ்வலந்தம்" என்கிற பதத்திற்கு, நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், நினைத்த வடிவத்தில், பிரகாசமான ஒளியுடன்கூடிய மின்னல் கற்றைப் போல் வடிவுடன் கூடியவராக ஆவிர்பவிப்பவர் என்பதே இதன் அர்த்தம். மேலும், தேவர்கள், முனிசிரேஷ்டர்கள் மற்றும் பக்த சீலராகிய பிரஹ்லாதனின் துயரைக் களைவதற்காக அவதாரம் எடுத்தருளியவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி. இந்நன்னாள் பூமிகாரகராகிய ெசவ்வாயின் தோஷங்களனைத்தையும் போக்கடிப்பவரும், புதிய விளைநிலங்களை அளித்தருள்பவருமாகியவரும், உடற் பிணிகளைப் போக்கி நல்வாழ்வளித்தருள்ப வரும், முக்கியமாக ரத்த சம்பந்தமான நோய்களை குணமாக்கு பவருமாகிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு உகந்த நன்னாள்.
இந்நாளில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை துளசி தளங்கொண்டு அர்ச்சித்தும், பானகம் நைவேத்தியம் செய்வித்து, கீழ்க்காணும் ருணவிமோசன ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தோ அல்லது காதால் கேட்பீராகில் அனைத்துவிதத் துயரங்களும் விலகிடும். சகல துறைகளிலும் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதுமட்டுமல்லாது, புதிய வீடு விளைநிலம் வாங்கும் யோகமும் உங்களை வந்தடையும். நமக்குத் தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே!
ஆவணி 17 (3-9-2026) வியாழக்கிழமை - கிருத்திகை விரதம். மற்றும் இன்றைய தினம் சீதளா விரதம் இவ்விரதத்தைக் கைக் கொள்வார்க்கு, சொந்தத் தொழில் புரிவோர்க்கு, தொழிலில் சுணக்கம் ஏற்பட்டிருக்கையில், இவ்விரதம் கைகொடுத்து உதவும். தொழில் அபிவிருத்தி அடையும். நெடுநாளாக உடற்பிணியினால் வருந்துபவர்களுக்கு அருமருந்தாக விளங்கும். எப்பேர்பட்ட நோயானாலும் உடனடியாக பிணியின் உக்கிரம் கணிசமாகக் குறையும். உடற்பிணிகள் நீங்கி, ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமன்றி, ஆயுளும் விருத்தியடையும். நமக்குத் தேவை பக்தியுடன்கூடிய நம்பிக்கை மட்டுமே! இதனை அனுபவத்தில் காண்பீர்கள்!
ஆவணி 18 (4-9-2026) வெள்ளிக்்கிழமை -
ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி. வைகானஸ, முனித்ரய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி காலையில் நீராடிய பின்பு, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவுருவத்தை நன்கு அலங்கரித்து, அன்றைய நாள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, பாகவத புராணத்தைப் படித்தோ அல்லது காதாரக் கேட்டோ, வீட்டிலுள்ள சிறு குழந்தைகளை ஸ்ரீ கிருஷ்ணனைப் போல் அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசல் முதல், பூஜையறை வரை ஸ்ரீ கிருஷ்ண பெருமானின் திருவடியைப் போன்று மாக்கோலமிட்டு, மாலையில் ஸ்ரீ பாகவதம் படித்து, இரவில் நவநீதமுடன்.
கூடிய (வெண்ணெயுடன் கற்கண்டையும் கலந்தது) பலவித பலகாரங்களை அமுது செய்வித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஒன்பது அல்லது 18 முறைகள் பாராயணம் செய்து, அனைவருடனும் சேர்ந்து, உணவருந்துதல் வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ண பெருமானின் இன்னருளால் இகலோக சுகங்களனைத்தையும் அனுபவித்து, பதினெட்டு வகைச் செல்வங்களையும் ஒருங்கே பெற்று மகிழ்வர் என்று உறுதிபடக் கூறுகின்றன, " ஸ்ரீ மத் பாகவதமும்", "விரத சூடாமணியும்"! மேலும் இன்று ஸ்தானு அஷ்டமி. இந்நன்னாளில் காலையில் ஸ்ரீ சிவபெருமானையும், மாலை வேளையில் ஸ்ரீ பைரவரையும் தரிசனம் செய்து, வழிபட்டால், ஸ்ரீ லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும் கொடிய விஷ பயம் நீங்கும்.
ஆவணி 21 (7-9-2026) திங்கட்கிழமை - சர்வ ஏகாதசி.
ஆவணி 22 (8-9-2026) செவ்வாய்க்கிழமை - பிரதோஷம்.
ஆவணி 23(9-9-2026) புதன்கிழமை - சிவராத்திரி - விரதங்களுள் மிக மிக உன்னதமானதும், உத்தமமானதுமாகிய ஏகாதசிக்கு சற்றும் குறைவில்லாத விரதம் இந்த சிவராத்திரி விரதம், பகல் முழுவதும் உபவாசமிருந்து, மாலையில் நீராடி, உடலில் திருநீறு மற்றும் ருத்ராட்சம் தரித்து, சிவபெருமானுக்கு பல வித திரவியங்களினால் அதாவது தேன், பால், தயிர், கரும்புப் பால், தேன், ெநய், மா, வாழை, பலா, தேங்காய்த் துருவல் கலந்த பஞ்சாமிருதம், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி முதலியவற்றால் அபிஷேகம் செய்வித்தல் வேண்டும்.
ஆவணி 24 (10-9-2026) வியாழக்கிழமை - சர்வ அமாவாசை.
ஆவணி 26 (12-9-2026) சனிக்கிழமை - ஸ்ரீ கல்கி அவதாரம். இன்றைய தினம் சந்திர தரிசனம் பரம புண்ணியத்தைத் தரவல்லது. இந்நாளில் தேய்பிறை முடிந்து, வளர் பிறை ஆரம்பிக்கும் முதல் நாளாகையால், மாலைநேரத்தில் சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் மேற்குக் கீழ்வானில் தோன்றும் சந்திரனை தரிசிப்போர்க்கு, அந்நாள் தொடங்கி, அம்மாதம் முடிவடையும் வரை வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும், ஆயிரம் பிறைகளைக் காணும் மகத்தான பேறினைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காவண்ணமாக நவகிரகப் புராணம் அறுதியிட்டு உறுதிபடக்கூறுகிறது. ஒருகாசு கூட செலவில்லாமல், மகத்தான புண்ணிய பலனைத் தரவல்ல இந்தச் சந்திர தரிசனத்தை அனைவரும் கண்டு, நோய் நொடிகளற்ற நல்வாழ்வை வாழ வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.
ஆவணி 27 (13-9-2026) ஞாயிற்றுக்கிழமை - சாமவேத உபாகர்மா. மேலும், இன்றைய தினம்ஹரிதாளிகா கௌரி விரதம் உடல் மற்றும் மன நோய் விலகிடும், உடல் ஆரோக்கியம் பன்மடங்கு அதிகரிக்கும். திருமணமான நங்கையர், நித்திய சுமங்கலிகளாக பரிமளிப்பர். உயிருக்கும் உடைமைக்கும் எந்தவொரு பயமுமின்றி பாதுகாப்பை உணர்வீர்கள், அனுபவரீதியாக உணர்வீர்கள், இவ்விரதத்தைக் கடைப்பிடித்தால்!
ஆவணி 28 (14-9-2026) திங்கட்கிழமை - ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி.
ஆவணி 29 (15-9-2026) செவ்வாய்க்்கிழமை - ரிஷி பஞ்சமி பிரபலமான இவ்விரதம், பெண்களால் அனுஷ்டிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்.
இன்று அதிகாலையில், நித்திரை முடிந்த பிறகு எழுந்து, நாயுருவிக் குச்சிகளால் தந்த (பல்) சுத்திசெய்து ஒரு சுமங்கலிக்கு புடவை ரவிக்கைத் துண்டு தானம் செய்வித்து, ஸ்ரீ யமுனா தேவியை மனத்தளவில் வணங்கி, ஸப்த ரிஷிகளாகிய காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதமர், ஜாமதக்னி, வசிஷ்டர் ஆகியோருடன் ஸ்ரீ அருந்ததி தேவியையும் ஆவாஹனம் செய்வித்து, பலவித பழங்கள் தின்பண்டங்களை நைவேத்தியம் செய்வித்து பூஜை செய்தல் வேண்டும்.
இந்தப் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யும் பெண்களுக்கு, தோஷங்களனைத்தும் விலகி, இந்த ஜென்மப் பாபங்களிலிருந்து நிவாரணமும் பெற்று, நித்திய சுமங்கலிகளாகவும், சகல செளபாக்கியங்களையும் பெறுவர் எனக் கட்டியம் கூறுகிறது, ஸ்ரீ பவிஷ்ய புராணம்.
ஆவணி 30 (16-9-2026) புதன்கிழமை - சஷ்டி விரதம். "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்..!" இது ஆன்றோர்கள் வாக்கு!
அதாவது, சஷ்டியில் விரதமிருந்தால், அகப்பையாகிய கருவறையில் குழந்தைப் பேறு உண்டாகும் என்பதே இதன் கருத்தாகும்.
இந்தத் தினத்தில்தான், ஸ்ரீ முருகப் பெருமான் ஐஸ்வரியத்துடன்கூடிய, சிரேயஸையும், தேவர்களுடைய சேனாதிபத்தியத்தையும் ஒருங்கே ெபற்றார். ஸ்ரீ முருகப்பெருமான் அடைந்த அனைத்துவகைப் பேறுகளையும் நாமும் அடையவேண்டுமாகில் இவ்விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் சகல ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையப்போவது திண்ணம்!



