Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்திராஷ்டமம் எதற்கு பார்க்க வேண்டும்?

?சந்திராஷ்டமம் எதற்கு பார்க்க வேண்டும்?

- வண்ணை கணேசன், சென்னை.

இதற்கான பதிலை சிறிய பதிவாகக் காண இயலாது. தனிக் கட்டுரையாகத்தான் காண வேண்டும். முதலில் இந்த சந்திராஷ்டமம் என்றால் என்ன?, சந்திராஷ்டம நாட்கள் என்ன பலனை உண்டாக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி, சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால், கிட்டத்தட்ட 25 அல்லது 26 நாட்களுக்கு ஒருமுறை இதனை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டி வரும்.

சரி, இந்த சந்திராஷ்டமத்தினால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழுகிறது. கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால், எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரு நாட்கள் மனநிலை டென்ஷனாக இருக்கும். அவ்வளவுதான்.

மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுக்கும் பிரச்னை இல்லை. மற்றவர்களுக்கு, தொல்லைதான். மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசிபலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள். பதறாத காரியம் சிதறாது என்று சொல்வார்கள் அல்லவா, சந்திராஷ்டம நேரத்தில் ஒருவித பதட்டத்தோடு செயல்படுவோம், அதனால் இறங்கிய காரியங்களில் எளிதான வெற்றி கிடைக்காது போகும். எடுத்த காரியத்தில் அற்ப காரணங்களினால் இழுபறி உண்டாகும். இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம் போன்றவை சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பொதுவான பலன்கள். மருத்துவ ஜோதிடத்தைப் பொறுத்த வரை, சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தைக் குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதற்றத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள், சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுபகாரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள்.

வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு, ஏற்கெனவே ஒருவித ஆனந்த பூரிப்புடன் கூடிய டென்ஷன் இருக்கும். இதில் சந்திராஷ்டமத்தின் காரணமாகத் தோன்றும் பதற்றமும் இணைந்தால் என்னாவது? முதல் கோணல், முற்றிலும் கோணலாகி விடாதா? மணமக்களுக்கு மாத்திரமல்ல, மணமக்களின் தாய் தந்தையர்க்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து, பிள்ளை களின் திருமண நாளைக் குறிக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். அதுபோன்றே, அதிமுக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள்.

மருத்துவர், அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதற்றத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்துவிடலாம். நோயாளிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக, அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்த நாட்களை தவிர்ப்பதற்கான காரணம். சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கும், சிகிச்சை செய்ய உள்ள மருத்துவருக்கும் சந்திராஷ்டம நாள் ஆயிற்றே என்று சிகிச்சை அளிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா? இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா என்றால், நிச்சயமாக பரிகாரம் உண்டு.

சந்திரனுக்குரிய திரவம் ஆன பால் குடித்துவிட்டு, வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதற்றத்தினைக் குறைக்கும். (கவனிக்க.... முதலிரவில் மணமக்கள் பால் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருப்பதும் இதற்காகத்தான்) சந்திராஷ்டம நாட்களை, ஜோதிடர்கள் முன்னமேயே குறித்துக் கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி, பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல. சந்திராஷ்டம நாட்களில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு வேலையைத் துவக்குங்கள். வெற்றி நிச்சயம்.

?நம் பிரார்த்தனை எப்படி அமைய வேண்டும்?

- மல்லிகா அன்பழகன், சென்னை.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது. எல்லோரும் இன்புற்றிருக்க வேறோன்றும் யாமறியோம் பராபரமே என்ற வகையில், பிரார்த்தனை என்பது அமைய வேண்டும். பிரதி மாதம் மும்மாரி பொழிய வேண்டும். நீர்நிலைகள் நிரம்ப வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும். பசி, பஞ்சம், பட்டினி என்ற வார்த்தைகளுக்கே இடமின்றி எல்லோரும் வயிறார உண்ண வேண்டும். இந்த உலகத்தில் உள்ள யாவரும் அன்புடனும் அமைதியுடனும் உடல் நலமுடனும் வாழ வேண்டும். அத்தகைய நல்வாழ்விற்கு இறைவா.. நீதான் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுவதே உண்மையான பிரார்த்தனையாக இருக்கும்.

?தெய்வக் குற்றம் பற்றி சரியான விளக்கம் தேவை.

- டி.நரசிம்மராஜ், மதுரை.

தெய்வ நிந்தனை செய்வதும், நேர்த்திக் கடனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதும், தெய்வக் குற்றம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், ``அஹம் ப்ரஹ்மாஸ்மி’’ என்பதை வலியுறுத்துகிறது. நமக்குள்ளாகவே இறைவன் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அந்தக் கூற்றின்படி அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பது புலனாகிறது. அப்படி இருக்க, மற்றவர் மனம் கோணும்படி நடத்தல், நம்பியவருக்கு துரோகம் செய்தல், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உணராமல் அவர்களைப் பழித்தல், பசியால் துடிப்பவனை எள்ளி நகையாடுதல், வாயில்லா ஜீவன்களை வதைத்தல் முதலான செயல்கள் அனைத்துமே தெய்வக் குற்றக் கணக்கில்தான் வரும். சுருங்கச் சொல்லவேண்டும் என்று சொன்னால், எது தவறு என்று நம் மனசாட்சிக்குப் படுகிறதோ, அதாவது நமது மனசாட்சிக்கு உறுத்துகின்ற வகையிலான செயல்கள் அனைத்துமே தெய்வக் குற்றம்தான். நமக்குள்ளாகவும் இறைவன் உறைகின்றான், அந்த இறைசக்திக்கு எது தவறு என்று தோன்றுகிறதோ, அவை அனைத்துமே தெய்வ குற்றம்தான். அதனால்தான் ஏதேனும் தவறு நடக்கும்போது நீ பண்ணது சரிதானான்னு உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதையே ஆதிசங்கர பகவத்பாதாள், அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று வலியுறுத்துகிறார்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும்.ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.