Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஏன் இந்த உலகத்திற்கு ப்ரித்வி என்று பெயர்?

பிரம்ம புராணம் அல்லது ப்ரஹ்ம புராணம், என்பது மகா புராணங்களில் முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுகின்றனர். பிரம்ம புராணத்தில் அற்புதமான பல விஷயங்கள் இருக்கின்றன.கோதாவரி நதியின் புனிதத் தலங்களை மையமாகக் கொண்ட புவியியல் படைப்பாகவும், அண்டவியல், பரம்பரை மற்றும் புராணங்களின் கலைக்களஞ்சியப் படைப்பாகவும் உள்ளது. இப்புராணம் 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது. வியாசரின் சீடரான லோமஹர்ஷனரே ( ரோம ஹர்ஷனரே) இப் புராணத்தைக் கூறுவதாக பிரம்ம புராணம் தொடங்குகிறது.

“சத்தியம், ஞானம், ஆனந்தம், பிரம்மம் என்ற கருதி வாக்கியத்தை அடியொற்றி, \”அது என்றுமுள்ளது. ஆனந்த மயமானது, தாய்மையே வடிவானது, கருணை நிரம்பியது, ஞான வடிவானது’ என்று பிரம்ம புராணம் பேசுகிறது. வாழ்க்கையின்குறிக்கோள் தர்மமே என்று பேசுகிறது.இந்தப் புராணத்தில் பாரத நாட்டின் வடகோடியிலிருந்து, தென் பகுதிவரை உள்ள தீர்த்தங்கள், புண்ணியத் தலங்கள் ஆகியவற்றை ஆறுகள், ஒருங்கிணைத்து விவரிப்பதன் மூலம், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு முதன்முதலாக வடிவு கொடுக்கின்றது.

கங்கை, கோதாவரி, கோமதி ஆகிய ஆறுகள் நாட்டின் விளைச்சலை அதிகப்படுத்தி, பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் செயல் விரிவாகக் கூறப்படுகிறது. கங்கைச் சமவெளியில் கங்கைநதி பாயுமாறு பகீரதன் செய்த முயற்சியும், இந்தியாவின் தென்பகுதியில் கோதாவரி பாயுமாறு கௌதம முனிவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் இப்புராணத்தில் பேசப் பெறுகின்றன. நைமிசாரணியம்புராணக் கதைகள் பெரும்பாலும் நைமிசாரண்யம் என்கின்ற புனிதத் தலத்தில் தான் சொல்லப்பட்டதாக எல்லா புராணங்களிலுமே முன்னுரையாக வரும். நைமி சாரணியம் வடநாட்டு திவ்ய தேசங்களிலே ஒன்று 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார்.

அடர்ந்த நதிக்கரையின் அருகே உள்ள வனப்பகுதி என்பதால் இதற்கு நைமிசாரண்யம் என்று பெயர். பகவான் இங்கே ஆரண்ய ரூபமாகவே இருக்கின்றான்.

பிரம்மா ஒரு முறை தவம் செய்வதற்கு ஏற்ற இடம் எது என்று தேர்வு செய்வதற்காக ஒரு தர்ப்பையை சக்கரமாகச் செய்து உருட்டி விட்டார். அந்தச் சக்கரம் இந்தக் காட்டில் வந்து நின்றது தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று குறிப்பால் உணர்த் தியது. நைமிசம் அரணியம் நைமிசாரண்யம் என ஆயிற்று. ஆழ்வார் பாடிய ஆலயமும் மூர்த்திகளும் இப்பொழுது இல்லை.

கொல்கத்தா, டேராடூன் ரயில் மார்க்கத்தில் பாலமாவு ஜங்ஷன் என்கிற இடத்தில் இறங்கி அங்கிருந்து சீத்தாப்பூர் போகும் ரயிலில் ஏறி நைமி சாரண்யா ஸ்டேஷனில் இறங்கி இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்தத் தலத்தை அடையலாம்.

மூலவர் தேவராஜன். நின்ற கோலத்தில் கிழக்கே திரும்ப திருமுக மண்டலத்தோடு காட்சி தருகிறார் தாயாருக்குஸ்ரீ ஹரி லட்சுமி என்ற பெயர்.

இங்கே ஓடுகின்ற நதிக்கு கோமதி நதி என்று பெயர். கோமதி நதிக்குச் செல்லும் வழியில் வியாசகட்டி என்ற இடத்தில் வேதவியாசர் ஆலயம் உள்ளது. இங்கேதான் வேதவியாசரும் அவருடைய திருமகனாரான சுகப்பிரம மகரிஷியும் தவம் செய்தனர் மஹா பாரதம்,ஸ்ரீமத் பாகவதம் முதலிய இதிகாச புராணங்களை இயற்றினர். இத் தலம் குறித்ததிருமங்கை ஆழ்வாரின் பாசுரம் மனதை பிசையும்படியாக உருக்கமாக இருக்கும்.

ஒரு பாசுரம் பாருங்கள்

ஊனிடைச்சுவர் வைத்தென் புதூண் நாட்டி

உரோமம் வேய்ந் தொன்பது வாசல்,

தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,

தேனுடைக்கமலத்திருவினுக்கரசே.! திரைகொள்மாநடுங்கடற்கிடந்தாய்!,

நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப்படுத்துகின்றார். குடிசையில் இடையிடையே சுவர்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவ்வுடலில் மாமிசப் பிண்டங்கள் சுவர்போலிருக்கின்றன; குடிசையில் தூண்கள் நாட்டப்பட்டிருக்கும்; இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன. குடிசையில் பல வாசல்களுண்டு; உடலிலும் நவத்துவாரங்கள் இருக்கும் . குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப்பட்டி ருக்கும்; இதுவும் உரோமங்களால் மூடப்பட்டிருக்கிறது.

குடிசை யிலே நாம் வாழ்வதுபோல் இவ்வுடலில் ஆத்மா வாழ்கின்றான்; இவ்வுடலைவிட்டு ஆத்மா வெளிக்கிளம்புங்காலமே மரணமெ னப்படும். அப்படி மரணம் நேர்ந்தபிறகு இவ்வாத்மா போய்ச் சேர வேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே - என்கிற தேவை தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தார். யமபடர்கள் வந்து என்னைப்பற்றியிழுத்துக் கொண்டு போய்ப் பலவகையான துன்பங்களைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் செய்து வைத்திருந்தாலும், இன்று தேனுடைக்கமலத் திருவாகிய பெரியபிராட்டியாரை முன்னிட்டு உன்னைச் சரணமடையும் படியான பாக்கியம் நைமி சாரண்யத்தில் எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யமபுரம் சென்று வருந்த வேண்டியதில்லை; உன் திருவடிகளையே கிட்டி ஆனந்திக்க வழி ஏற்பட்டுவிட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இப்படிப்பட்ட ஒரு அற்புதத் தலத்தில் தான் முனிவர்கள் ரிஷிகள் தங்கள் நன்மைக்காக அல்லாமல் ஆத்ம பலத்திற்காகவும் உலக நன்மைக்காகவும் வேள்விகள் இயற்றுவார்கள்.

வேள்விகளால் தவறாது மழை பொழியும். பயிர்கள் விளையும். கால்நடைகள் சுகமாக இருக்கும். மொத்தத்தில் மக்களுக்கான அத்தனை நலன்களும் கிடைக்கும்.இது மந்திரத்திலேயே வரும். உதாரணமாக ஒரு ஹோமத்தையோ வேள்வியையோ முடிக்கும் பொழுது பவமான சூக்தத்தின் முடிவில் இன்றைக்கும் சொல்லக்கூடிய சாந்தி மந்திரம் இது.

ஓம் தச்சம் யோராவ்ருணீமஹே

காதும் யஜ்ஞாய் காதும் யஜ்ஞபதயே

தை வீ: ஸ்வஸ்திரஸ்து ந

ஸ்வஸ்திர்மாநுஷேப்ய

ஊர்த்வம் ஜிகா’து பேஷஜம்

ஸந்நோ அஸ்து த்’விபதே ஸம் சதுஷ்பதே

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இந்த மந்திரத்தில் செடி கொடிகள், கால்நடைகள், மனிதர்கள் போன்ற அனைத்து உயிர்களின் நன்மையும் பிரார்த்தனையாக வெளிப்படுகிறது.

ரோமஹர்ஷனர்

நைமிசாரண்யத்தில் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு வேள்வி இயற்றப்பட்டது. அப்பொழுது இடையிடையே கிடைக்கக்கூடிய ஓய்விலே சத்விசயங்களைப் பேச வேண்டும் என்பதற்காக வேதவியாசரின் சீடரான ரோமஹர்ஷனர் என்ற முனிவரை மற்ற ரிஷிகள் சூழ்ந்துகொண்டு வேதவியாசரிடம் கற்ற புராணங்களை தங்களுக்குச் சொல்லுமாறு வேண்டினர். அப்பொழுது அவர்களுக்குச் சொல்லப்பட்டதாகத் தான் பல புராணங்கள் துவங்கும். (சூத முனிவர் சொன்னதாகவும் வரும்) அதில் ஒன்றுதான் இந்த பிரம்மபுராணம்.

இதிலே அஷ்டவசுக்கள் எப்படி உண்டாகினர்? 27 நட்சத்திரங்கள் எப்படி உருவாகின ?என்பதைப் பற்றி எல்லாம் உருவகக் கதைகளாக சில விஷயங்கள் உண்டு. இந்தக் கதைகளின் தன்மைகளைக் குறித்து ஆராயாமல் சுவாரஸ் யமான குறிப்புக்களை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கதைகளும் பேர்களும் கூட ஒவ்வொரு புராணத்தில் ஒவ்வொருமாதிரியாக இருக்கும். எப்படி ஆயினும் நட்சத்திரங்கள் 27 தானே? எட்டுதானே அஷ்டவசுக்கள்?பூமி எப்படி உண்டாயிற்று?

தொடக்கத்தில் எல்லா இடத்திலும் நீர்தான். அப்பொழுது பிரளய நீரில்ஸ்ரீமன் நாராயணன் துயில் கொண்டிருந்தார்.. அவரிடமிருந்து ஒரு பொற்றாமரை முட்டை வடிவத்தில் வெளியே வந்தது. பிரம்மன் தோன்றினார். அந்த முட்டை வடிவத்தின் ஒரு பகுதி ஆகாயமாகவும் மறுபகுதி பூமியாகவும் மாறியது. நான்முகன் ஏழு ரிஷிகளை படைத்தார். இவர்களோடு ருத்ரனையும் சரத்குமாரன் என்ற முனி வரையும் பிரம்மன் படைத்தார்.

தன் உடம்பிலிருந்து ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்தார். இந்த ஆணுக்கு சுயம்பு மனு என்று பெயர். மனுவின் வழியில் வந்ததால் மக்கள் “மானவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

மனுவுக்கும் ஷத்த ரூபா என்ற பெண்ணுக்கும் விரா, பிரிய விரதா, உத்தான பாதா என்ற மூன்று குமாரர்கள் தோன்றினர். உத்தான பாதரின் மகன்தான் துருவன். தவம் செய்து நட்சத்திர பதவியை அடைந்தான்.

அதன் பிறகு பிரசேதாஸ் என்ற பெயருடன் 11 பேர் அந்த பரம்பரையில் தோன்றினர். அவர்கள் உலகத்தை அப்படியே விட்டுவிட்டு கடலுக்கடியில் தவம் செய்யச் சென்றுவிட்டனர்.

இதனால் உலகம் காடுகளும் செடிகளுமாக மண்டி காற்றும் நுழைய முடியாத அளவிற்கு துன்பப்பட்டது. இது தெரிந்த பிரசேதாஸ் சகோதரர்கள் வாயினால் நெருப்பை உண்டாக்கி காட்டை அழித்தனர்.

ஒரு அழிவிலிருந்து மற்றொரு அழிவிற்கு உலகம் சென்றதை பொறுக்க முடியாமல் சோமன் எனப்படும் சந்திரபகவான் ஒரு அழகிய பெண்ணுடன் இந்தச் சகோதரர்களிடம் சென்று, உலகை ஆள்வதற்காக இந்த பெண் மூலம் ஒரு வாரிசை உண்டாக்குங்கள் என்ற வேண்டுகோள் வைக்க, அவர்கள் ஒரு ஆண்குழந்தையை உருவாக்கினர்.அவருக்கு பெயர் தட்சன். தட்சப் பிரஜாபதி என்பார்கள். பிரஜை என்றால் மக்களைக் குறிக்கும். பதி என்றால் தலைவரைக் குறிக்கும். உலக மக்களின் தலைவராக இருப்பதால் அவருக்கு தட்ச பிரஜாபதி என்று பெயர்.

இந்த தட்சணைக்கு 60 பெண்கள் இருந்தார்கள். 27 பெண்களை சந்திரன் மணந்து கொண்டார். பத்து பெண்களை தர்ம தேவதை மணந்துகொண்டார். இங்கே மணந்து கொள்ளுதல் என்பது இணைவைக் குறிப்பது. காற்றும் நீரும் சேர்ந்து மழை உண்டாவது போல, உலகத் தோற்றத்திற்கு இந்த இணைவுகள் காரணங்களாக விளங்கும். இந்த இணைவை குறிக்கும் சொல்தான் மணம்.

தட்சனின் மற்ற பெண்களை ஆங்கிரஸா முதலிய முனிவர்கள் மணந்து கொண்டனர்.

சோமனை மணந்துகொண்ட 27 பெண்களும் 27 நட்சத்திரங்கள் ஆகினர். தட்சனின் பெண்களில் 13 பெண்களை காசிப முனிவர் மணந்து கொண்டார். அதிதி என்ற பெண்ணுக்கு 12 ஆதித்யர்களும் திதி என்ற பெண்ணுக்கு இரணியன் ஹிரண்யாட்சஷன் முதலிய அசுரர்களும் பிறந்தனர். சுரசை என்ற பெண்ணுக்கு நாகர்கள் பிறந்தனர் காஷா என்னும் பெண்ணிற்கு யட்சர்கள் பிறந்தார்கள். சுரபி வயிற்றில் பசுக்கள் தோன்றினர். வினதை வயிற்றில் கருடன் அருணன் முதலிய பறவைகள் தோன்றினர்.

அஷ்டவசுக்களில் பிரபஸா என்பவனுக்கு பிள்ளையாக விஸ்வகர்மா பிறந்தார். இந்த பிரபாசா மகாபாரதத்திலும் வருவார். அவர் தான் அஷ்டவசுக்களில் ஒருவரான பீஷ்மாச்சாரியார். வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகள் என்பதால் ஒவ்வொரு புராணத்திலும்ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இது குறித்து கதை சொல்லும் முனிவரே ஒரு இடத்தில் சொல்லுகின்றார். தட்சன் என்ற பெயரில் பலரும் உண்டு. ஒவ்வொரு புராணத்திலும் அவர்களுடைய தோற்றம் ஒவ்வொரு விதமாக இருக்கும். குழப்பிக் கொள்ள வேண்டாம். அது வெவ்வேறு காலங்களில் நடந்தது.

தாமரா எனும் பெண்ணின் வயிற்றில் ஆந்தைகள் வல்லூறுகள் காகங்கள் குதிரைகள் கழுதைகள் என பல்வேறு மிருகங்கள் தோன்றின. இலா என்பவள் வயிற்றில் மரங்கள், செடிகொடிகள், தோன்றின. கத்ரு என்னும் பெண்ணின் வயிற்றில் அனந்தன் வாசுகி தட்சகன் முதலிய அஷ்ட நாகங்கள் தோன்றினர். முனி என்னும் பெண்ணிற்கு அப்சராஸ்கள் பெண்களாக தோன்றினர்.இப்படி உலகத்தினுடைய பல்வேறு பொருள்களும், விலங்குகளும், மனிதர்களும் மற்ற மற்ற உயிரினங்களும் தட்சப் பிரஜா பதியின் மூலமாக பல்வேறு கிளைகளாகத் தோன்றி, உலக இயக்கத்திற்கு வழி செய்தன.

யார் யாரெல்லாம் பொறுப்பு?

பூமியில் உள்ள பல்வேறு பொருட்களுக்கு யார் யாரெல்லாம் பொறுப்பு என்பதை பிரம்மா பங்கிட்டு தந்த கதை இந்த புராணத்தில் இருக்கிறது.மரம், செடி கொடிகள், விண்மீன்கள், கோள்கள், யாகங்கள் இவர்களுக்கு தலைவனாக சோமன் எனப்படும் சந்திரனை நியமித்தார். வருண பகவானை கடலுக்கு அதிபதியாகவும் குபேரனை செல்வத்திற்கு அதிபதியாகவும் 12 சூரியர்களுக்கு அதிபதியாக சூரியநாராயணனும் அஷ்டவசுக்களுக்குத் தலைவனாக அக்கினியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

எல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவனாக தட்சனும் 49 மருத்துக்களுக்கு தலைவனாக இந்திரனும் தைத்திரியர்கள் தானவர்கள் தலைவனாக பிரகலாதனும் நியமிக்கப்பட்டனர். பிதுர்லோகத்தின் தலைவனாக எமனும், மலைகளின் தலைவனாக இமவானும், பறவைகளின் தலைவராக கருடனும் யானைகளின் தலைவனாக ஐராவதமும் நியமிக்கப்பட்டனர் நான்கு திசைக்கும் திசை நாதர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் பூமியின் தலைவனான பிருத்து நல்லபடியாக ஆட்சிசெய்த. வேள்விகள் நல்லபடியாக அரங்கேறின. இயற்கை அருமையாக ஒத்துழைத்தது. அந்தந்த காலத்தில் நடக்க வேண்டிய நிகழ்வுகள் தவறாமல் நடந்தன. மழைக்காலத்தில் மழையும் வெயில் காலத்தில் வெயிலும் சுகமாக அவற்றின் வேலைகளை நல்லபடியாக செய்ததால் உலகம் செழித்தது.பசுக்கள் பாலை பொழிந்தன.

இதனிடையே பூமி ஒருமுறை விளைச்சல் இன்றி இருந்தது. அதன் காரணத்தை ஆராய்ந்து பிரித்து பூமியை சமம் பிருத்து செய்தான். மலைகளை எல்லாம் ஒருபுறமாக ஒதுங்கி இருக்குமாறு செய்து சமதளத்தில் வேளாண்மை செய்து மிகச்சிறந்த நன்மையை செய்தான். உலகம் செழித்தது. உயிர்களின் வாழ்வுக்காக இந்த பூமியை முறையாக அமைத்துக் கொடுத்த மன்னனின் பெயரால் இந்த பூமி ப்ருத்வி என்கின்ற பெயரை பெற்றது.

முனைவர்ஸ்ரீராம்