Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குழந்தைகள் வாயில் வசம்பு வைப்பது ஏன்?

?தேர்த் திருவிழாக்கள் தோன்றிய விதம், காரணம் பற்றி விளக்கம் தாருங்களேன்.

- டி.நரசிம்மராஜ், மதுரை.

ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன், தன்னுடைய மக்களைக் காண்பதற்காகவும், ஊர் நன்மைக்காகவும், நகர் வலம் வரும் நிகழ்வுதான் திருவிழாக்காலம் என்பது. அரசன் மக்களைக் காண வரும்போது, தேரில் வருவது வழக்கம். அதுபோல, அரசர்களுக்கெல்லாம் அரசனான அந்த தேவாதிதேவன், மிகப் பிரமாண்டமான தேரில் தனது மக்களைக் கண்டு, அவர்களின் குறை தீர்க்க நேரடியாக வலம் வருதலே தேர்த் திருவிழா. அரசனின் தேரை குதிரைகள் இழுக்கும். ஆண்டவனின் தேரை பக்தர்கள் இழுப்பார்கள். ஊர்கூடி தேர் இழுத்தல் என்று சொல்வார்கள். இதனால், மக்களிடையே பாகுபாடு என்பது மறந்து எல்லோரும் ஒன்றாக இணைந்து தேரை இழுக்கும்போது, அங்கே சமத்துவம் என்பது வளர்கிறது.

இதுபோக, தேர் என்பது கீழிருந்து மேல்நோக்கி பார்க்கும்போது, ஆலயத்தின் விமானம் போலவும், கோயில் கோபுரம் போலவும் காட்சியளிக்கும். தேரில் அந்த ஆண்டவன் பவனி வரும்போது, அந்த ஆலயமே அசைந்து வருவதை போன்ற உணர்வு உண்டாகும். புராண ரீதியாக சிவபெருமான் திரிபுரம் எரித்த நிகழ்வின்போது, பூமியைத் தேராகவும், சூரிய-சந்திரர்களை சக்கரமாகவும் கொண்டு புறப்பட்டுச் சென்று, திரிபுர சம்ஹாரத்தை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.

அது முதல் ஆண்டவன் தேரில் வந்து தீய சக்திகளை அழித்து மக்களைக் காக்கிறார் என்ற நம்பிக்கை உண்டானது. தேரில் பவனி வருதல் என்பது அரசர்கள் பெற்ற வெற்றியின் அடையாளம். தனது மக்களின் குறைதீர்க்கும் அரசன் எப்படி தேரில் பவனி வருகிறானோ.. அதே போல, இந்த உலகத்தையே கட்டிக் காக்கும் ராஜாதிராஜன் ஆகிய அந்த ஆண்டவன், பிரமாண்டமான தேரில் பவனி வந்து தனது மக்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதே, தேர்த் திருவிழா நடத்தப்படுவதன் அடிப்படை நோக்கம்.

?இறைவனுக்கு வெறும் சாதத்தை படைக்கலாமா?

- வண்ணை கணேசன், சென்னை.

சந்தேகமே வேண்டாம். தாராளமாக இறைவனுக்கு வெறும் சாதத்தை படைக்கலாம். ``சுத்தான்னம்’’ அல்லது ``சால்யான்னம்’’ என்று சொல்வார்கள். கொஞ்சமாக சுத்தமான பசுநெய்யை விட்டு வெறும் சாதத்தை இறைவனுக்கு படைத்தல் என்பது மிகவும் விசேஷம்.

?குழந்தைகள் வாயில் வசம்பு வைப்பது ஏன்?

- பொன்விழி, அன்னூர்.

``பிள்ளைவளர்த்தி’’ என்ற பெயரில், வசம்பு என்ற மூலிகையைக் குறிப்பிடுவார்கள். வசம்பு, நாவில் தேய்த்தால், குழந்தை நன்றாகப் பேசும், நினைவாற்றல் அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், குறிப்பாக குழந்தையின் செரிமானத் திறனை கூட்டுவதற்காக வசம்பு என்பது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதனை அப்படியே வீட்டில் உள்ளவர்கள் தேய்த்துக் கொடுப்பது நல்லதல்ல. ஆயுர்வேதத்தில், குழந்தைகளுக்கு வசம்பினை குறிப்பிட்ட முறையில் மருந்தாக தயாரித்து அளித்திருக்கிறார்கள். அதுபோல் பாதுகாப்பான முறையில்தான் அளிக்க வேண்டுமே தவிர, நாமாக வசம்பினை தேய்த்து நாவில் தடவக் கூடாது. ``அஷ்டாங்க ஹ்ருதயம்’’, ``காஸ்யப சம்ஹிதை’’, ``சுஷ்ருத சம்ஹிதை’’ போன்ற நூல்களில், வசம்பினைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

?தரையில்தான் படுத்து உறங்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறதா?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இல்லை. சுத்தமான விரிப்பின் மீது படுக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. அதே போல, பஞ்சுடன் கூடிய மெத்தை, தலையணை, தடிப்பான விரிப்பு முதலியவை வெயிலில் உலர்த்துவதால், சுத்தி (தூய்மை) அடைகிறது என்ற வாசகமும் சாஸ்திரத்தில் உண்டு. அப்படியென்றால், மெத்தையில் படுக்கலாம், தலையணையை உபயோகப்படுத்தலாம் என்றுதானே பொருள். அதேபோல, கட்டில் போன்றவை எக்காலத்திலும் உபயோகத்தில் இருந்தன என்பதை இதிகாசங்களின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். கடுமையான விரத நாட்களில் மட்டும் உடல் சுகத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதற்காக, தரையில் படுக்கச் சொல்லியிருப்பார்கள். மற்றபடி இரவு நேரத்தில் கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தி படுத்து உறங்குவதில், சாஸ்திர ரீதியாக எந்தவிதமான தோஷமும் இல்லை.

?சுந்தரகாண்டம் எப்போது எப்படி பாராயணம் செய்ய வேண்டும்?

- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

தனியாக நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியது இல்லை என்பது அடியேனின் கருத்து. இருப்பினும் ஒருசிலர் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனிக் கிழமை நாட்களில் பாராயணம் செய்கிறார்கள். பெரும்பாலும் அனுமன் ஜெயந்தி, அமாவாசை நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் பாராயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தையும், மாலையில் விளக்கு வைத்தவுடன் ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும், பாராயணம் செய்யலாம் என்று சொல்பவர்களும் உண்டு. சுந்தர காண்டத்தில் மொத்தம் 68 சர்க்கங்கள் உண்டு. தினமும் ஒரு சர்க்கம் வீதம் 68 நாட்கள் பாராயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ``சப்தாஹம்’’ என்ற பெயரில், ஏழு நாட்களிலும், ``நவாஹம்’’ என்ற பெயரில் 9 நாட்கள் பாராயணம் செய்து பூர்த்தி செய்பவர்களும் உண்டு.

நேரம் இருக்கும் பட்சத்தில், ஒரே நாளில் மொத்த சர்க்கங்களையும் படித்து பூஜை செய்பவர்களும் உள்ளார்கள். சுந்தரகாண்ட பாராயணம் துவங்குவதற்கு முன், 108 முறை  ஸ்ரீராமஜெயம் சொல்லித் துவங்குவது சிறப்பான பலனைத் தரும். பாராயணம் முடிந்ததும்,  ஸ்ரீராம அஷ்டோத்ரம், ஆஞ்சநேயர் அஷ்டோத்ரம் சொல்லி பூஜை செய்து தீபாராதனை செய்து வணங்க வேண்டும். நிவேதன பிரசாதங்களை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். சுற்றியுள்ளோருக்கும் பிரசாதத்தைத் தரவேண்டும். இதனால், நினைத்த காரியம் வெற்றிகரமாக கைகூடும்.

?பிறந்த ராசிக்கு ஏற்ப குணம் அமையுமா?

- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.

இந்தக் கூற்றில் சற்று உண்மை இருக்கத்தான் செய்கிறது. நாம் பிறந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாரோ, அதுவே நமது ஜென்ம ராசி என இந்திய ஜோதிடம் உரைக்கிறது. சந்திரனைத்தான் நமது மனநிலையை தீர்மானிக்கும் மனோகாரகன் என்றும் ஜோதிடம் சொல்கிறது. ஆக, பிறந்த ராசிக்கு ஏற்ப மனநிலை என்பது அமையும் என்பது ஜோதிடவியல் ரீதியாக ஓரளவிற்கு உண்மைதான். ஓரளவிற்கு என்று சொல்வதற்கான காரணம், ராசி என்பது மட்டும் நம் குணத்தினைத் தீர்மானித்துவிடுவதில்லை. ஜென்ம லக்னம், அந்த லக்னம் விழும் புள்ளி, அந்த லக்னத்தில் அமர்ந்திருக்கும் கிரஹம், அந்த லக்னாதிபதி அமர்ந்திருக்கும் நிலை மற்றும் ஜென்ம ராசியில் அதாவது சந்திரனோடு இணைந்திருக்கும் கிரஹங்கள், ஜென்மராசிக்கு அதிபதியின் அமர்வு நிலை என வெவ்வேறு காரணிகள் மனிதனின் குணத்தினைத் தீர்மானிக்கிறது. இந்த காரணிகளில் ஒன்றுதான் பிறந்த ராசியும் என்பதால், ராசிக்கு ஏற்ப மனிதனின் குணம் அமைகிறது என்ற கூற்றினில் உண்மை என்பது உண்டு என்பதே உங்கள் கேள்விக்கான நேரடியான பதில்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.