Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நடராஜர் ஏன் தெற்குத் திசை நோக்கி இருக்கிறார்?

? குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டுமா? எப்படிப் போடலாம்?

- சுமதி வரதராஜன், சேலம்.

அவசியம் திருஷ்டி சுற்றிப்போட வேண்டும். திருஷ்டி சுற்றிப் போடுவது தமிழ் கலாச்சாரத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை. மாலை வேளையில் (சூரிய அஸ்தமனத்திற்குப் பின்) அல்லது இரவு தூங்குவதற்கு முன் சுற்றிப் போடுவது நல்லது. இதற்கு பல வழிமுறைகள் உண்டு.

* சிறிதளவு கல் உப்பை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, குழந்தையின் தலைக்கு மேலிருந்து கால் வரை வலப்புறமாக மூன்று முறையும், இடப்புறமாக மூன்று முறையும் சுற்றி, ஓடும் நீரிலோ அல்லது சிறிதளவு தண்ணீரில் கரைத்தோ ஊற்றிவிட வேண்டும்.

* மூன்று காய்ந்த மிளகாய், சிறிதளவு கடுகு, கொஞ்சம் கல்லுப்பு மற்றும் கொஞ்சம் தெரு மண் அல்லது தலைமுடி எடுத்து, குழந்தையைச் சுற்றி 3 முறை வலமாகவும் இடமாகவும் கொண்டு சென்று அடுப்பில் அல்லது அகல் விளக்கில் போட்டு எரிக்க வேண்டும்.

* ஒரு தட்டில் சிறிதளவு கற்பூரம் வைத்து ஏற்றி, குழந்தைக்கு மூன்று முறை சுற்றி வீட்டின் வெளியே அல்லது வாசலில் போடலாம்.

* ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து (சிவப்பு நிறமாக மாறும்), அதில் கற்பூரம் ஏற்றிச் சுற்றி வீட்டின் வெளியே கொட்டலாம். எலுமிச்சம்பழத்தைச் பாதியாக நறுக்கி மஞ்சள், குங்குமம் தடவியும் சுற்றிப் போடலாம். தீ, கற்பூரம் அல்லது மிளகாய் எரிக்கும் போது புகை குழந்தையின் மேல் படாதவாறு பாதுகாப்பான இடைவெளியில் செய்ய வேண்டும்

? நடராஜர் ஏன் தெற்குத் திசை நோக்கி இருக்கிறார்?

- சுதர்சனம், கோவை.

கோயில் என்று அழைக்கப்படும் சிதம்பரத்தில் தெற்கு நோக்கி நடனக்கோலக் காட்சி தருகிறார். தெற்குத் திசை என்பது கூற்றுவன் என்று அழைக்கப்படும் எமதர்ம ராஜனுக்குரிய திசையாகும். இறைவன் தெற்கு திசையை நோக்கி நின்று ஆடும்போது, எமனின் ஆற்றலையும் மரண பயத்தையும் தன் கட்டுக்குள் வைத்துள்ளார் என்பதை உணர்த்துகிறது. தம்மை வழிபடும் பக்தர்களுக்கு மரண பயமில்லை என்பதையும், பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுதலை (முக்தி) தருவதையும் இது குறிக்கிறது.

நடராஜரின் வலது பாதத்திற்கு அடியில் மிதிபட்டுக்கொண்டிருக்கும் அரக்கனின் பெயர் முயலகன் (அபஸ்மாரன்). அவன் மனிதனின் அறியாமை, ஆணவம் மற்றும் மாயையின் வடிவம். தெற்குத் திசை நோக்கி ஆடும் கூத்தின் மூலம், இறைவன் பக்தர்களின் அறியாமையை அழித்து, ஞானத்தை வழங்குகிறார். வடக்கு நோக்கி இருக்கும் பக்தர்கள் இறைவனின் தெற்கு நோக்கிய முக தரிசனத்தைப் பெறும்போது, அது ‘முக்தி அளிக்கும் தரிசனம்’ என்று போற்றப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது. தெற்கிலிருந்து வடக்காக அல்லது வடக் கிலிருந்து தெற்காக நிகழும் ஆற்றல் ஓட்டத்தைக் குறிக்கிறது.தெற்கு நோக்கி நின்றாடும் நடராஜரின் வடிவம் பிரபஞ்ச சுழற்சி மற்றும் ஆற்றல் சமநிலையைக் குறிப்பதாக ஆன்மிக அறிஞர்கள் விளக்குகின்றனர். ‘‘மரணத்தையும் அறியாமையையும் வென்று, உயிர்களுக்கு அஞ்சேல் (பயப்படாதே) என்று அபயக் கரம் காட்டி முக்தி அளிப்பதற்காகவே” நடராஜர் தெற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

?பெண் பாவம் பொல்லாதது என்று ஏன் சொல்லுகின்றார்கள்?

- ஸ்ரீ நிவாசன், காஞ்சிபுரம்.

பெண் பாவம் மட்டுமல்ல ஆண்பாவமும் பொல்லாதது தான்.பாரம்பரியமாக ஏன் பெண்களின் பாவத்தை (சாபத்தை அல்லது மனக்குறையை) மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பொல்லாததாகவும் கருதினார்கள் என்றால் காரணம் உண்டு. பழந்தமிழ்ச் சமூகத்திலும் சரி, உலக வரலாற்றிலும் சரி, பெண்கள் நீண்டகாலமாகப் பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதிகாரமோ உடல் பலமோ இல்லாத ஒரு பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி, அவளது ஆழ்மனதிலிருந்து மிகக் கடுமையான வேதனையாகவும் கண்ணீராகவும் வெளிப்படும். ‘‘எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்” என்ற கூற்றுப்படி, தங்களைத் தற்காத்துக் கொள்ள வழியற்ற பெண்களின் கண்ணீரும் மனக் குமுறலும் அநீதி இழைத்தவர்களை வம்ச வழியில் பாதிக்கும் என்ற சமூக அச்சத்தின் காரணமாக இப் பழமொழி உருவாக்கப்பட்டது.

ஆண் பாவமும் பொல்லாதது தான் என்பதற்கு தத்துவக் காரணம் சொல்கிறேன்.ஆன்மீக மற்றும் கர்ம வினைக் கோட்பாட்டின்படி பாதிப்புக்கு பாலினம் இல்லை: பாவமோ, அநீதியோ, சாபமோ ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி - யாரொருவர் மனதார வேதனைப்பட்டுக் கண்ணீர் விட்டாலும் அது அநீதி இழைத்தவரைப் பாதிக்கும். கர்மா என்பது உயிர்களின் மனவே தனையைக் கணக்கிடுகிறதே தவிர, உடலின் பாலினத்தைப் பார்ப்பதில்லை.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் ஒற்றைக் கண்ணீர் மதுரையை எரித்தது ‘‘பெண் பாவத்தின்” உச்சக்கட்ட வெளிப்பாடாகக் காட்டப்பட்டாலும், நீதி தவறிய பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து ‘‘யானோ அரசன், யானே கள்வன்” என்று கூறி அரியணையிலேயே உயிர் துறந்தான். அங்கு ஒரு பெண்ணின் அறச்சீற்றமும், ஒரு ஆணின் மனசாட்சியின் உறுத்தலும் ஒரே நேர்கோட்டில் நீதியை நிலைநாட்டின.

‘‘பெண் பாவம் பொல்லாதது” என்பது எளியாரை அடக்க நினைக்கக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்ட ஒரு சமூக எச்சரிக்கை. ஆனால், ஆன்மீக மற்றும் அறநெறி உண்மை என்னவென்றால் ‘‘யார் மனதையும் புண்படுத்துவது பொல்லாததே; ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதன் விளைவு ஒன்றுதான்.”

?வீட்டில் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும் என்கிறார்களே, உண்மையா?

- வாசுதேவன், ரெய்ச்சூர்.

உண்மைதான். தண்ணீர் என்பது மகாலட்சுமியின் அம்சம். தண்ணீரை ஆப: என்றும் அப்பு என்றும் குறிப்பிடுவார்கள். தெலுங்கு மொழியில் அப்பு என்ற வார்த்தைக்கு கடன் என்று பொருள். ஆக, தண்ணீரை அளவுக்கதிகமாக செலவழித்தால் பொருட்செலவு என்பதும் அதிகமாகி வீட்டில் தரித்திரம் என்பது தாண்டவமாடத் தொடங்கிவிடும். எக்காலத்திலும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. அப்படி தண்ணீரை வீணாக்குபவர்கள் இல்லத்தில் தரித்திரம் வந்து சேரும் என்ற கருத்து உண்மைதான்.

?குபேர மூலை என்றால் என்ன? வீட்டில் அது எங்கே இருக்க வேண்டும்?

- கோபால்தாஸ், விழுப்புரம்.

வீட்டின் வடக்கு பாகத்தை குபேர மூலை என்று அழைப்பார்கள். எட்டு திசைகளில் வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என்பதால் அவரது பெயரில் அந்த திசையானது குபேர மூலை என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் வடக்கு திசையில் ஒரு அறை அமைந்திருந்தால் அந்த அறைக்குள் பணம் மற்றும் நகைகளை சேமித்து வைக்கும் அலமாரியை வைத்துக்கொள்வது நல்லது.

தேஜஸ்வி