Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கோயில்களில் ஏன் பலிபீடம் அமைக்கப்படுகிறது?

?சுவாமிக்கு ஆரத்தி எடுக்கும்போது கற்பூரம் ஏற்றிக் காட்டவேண்டுமா? திரிகளின் மூலமாக காட்ட வேண்டுமா?

- சு. ராமலிங்கம், திருச்சி.

கற்பூரம் என்று பச்சைக் கற்பூரத்தைத்தான் சாஸ்திரம் குறிப்பிடுகிறது. தற்போது நாம் ஏற்றிக்கொண்டிருக்கும் கெமிக்கல் கற்பூரத்தை அல்ல. இறைவனுக்கு தூப, தீப, நைவேத்ய, தாம்பூல உபசாரங்களைச் செய்த பின் நீராஜனம் என்கிற உபசாரம் உண்டு. இந்த நீராஜனம் என்பதைத்தான் நீங்கள் ஆரத்தி என்று குறிப்பிடுகிறீர்கள். தூபம் என்றால் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியை ஏற்றிக் காண்பிப்பது. தீபம் எனும் உபசாரத்தின்போது நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு நெய்யில் ஊறவைத்த திரிகளை ஏற்றி அதனை இறைவனுக்கு காண்பிக்க வேண்டும். அந்த தீப ஒளியில் நாம் இறைவனை தரிசிக்க வேண்டும். நைவேத்யம் மற்றும் தாம்பூல உபசாரங்களைத் தொடர்ந்து நீராஜனம் என்று வரும்போது பச்சைக் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தியைக் காண்பிக்க வேண்டும். அந்த ஒளி வெள்ளத்தில் நாம் இறைவனை தரிசிக்க வேண்டும்.

?இப்போது அகல்விளக்கு மண்ணால் செய்யாமல் பீங்கானில் வருகிறது. இதில் விளக்கு ஏற்றலாமா?

- வண்ணை கணேசன், சென்னை.

ஏற்றலாம். பீங்கான் என்பதும் சைனா க்ளே என்று அழைக்கப்படும் மண்ணால் செய்யப்படுவதுதானே. அதுவும் மண்ணால் செய்யப்பட்டதே என்பதால் புனிதத்தன்மை பெற்றுவிடுகிறது. மண்ணால் செய்யப்பட்டது என்பதால் பீங்கான் விளக்கிலும் விளக்கினை ஏற்றி வைத்து வழிபடலாம்.

?ஆலயங்களில் இறைவனை வணங்கும்போது தலைக்கு மேலே இரு கைகளையும் தூக்கி வணங்கலாமா?

- சு. ஆறுமுகம், கழுகுமலை.

தலைக்கு மேலே இரு கைகளையும் தூக்கி வணங்குவது என்பது ஆண்டவா நீயே கதி என்று இறைவனிடத்தில் நாம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டோம் என்பதற்கான அடையாளம். அப்படித்தான் வணங்கவும் வேண்டும். இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நாம் அப்படி வணங்கும்போது நமக்குப் பின்னால் நிற்பவர்கள் இறைவனை தரிசிக்க இயலாமல் மறைக்கும் விதமாக அமையக்கூடாது என்பதே.

?கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து காக்கவல்ல இறை ஸ்லோகம் எது?

- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

பொதுவாக சூரியனை வணங்குவதன் மூலம் கடுமையான வெயில் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் பின்வரும் ஸ்லோகம் மிகவும் பயன் தரும்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசனம் ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்

?மனிதனுக்கு எல்லாம் விதிப்படிதான் நடக்குமா?

- த. நேரு, வெண்கரும்பூர்.

நிச்சயமாக. சந்தேகமே வேண்டாம். விதியை மதியால் வெல்லலாம் என்றாலும் அவ்வாறு வெல்வதற்குக் கூட விதி என்பது நமக்கு துணை நிற்க வேண்டும். எல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டது. அதன்படிதான் நாமும் நடந்து கொண்டிருக்கிறோம். நமக்கான பலனும் நடந்துகொண்டிருக்கிறது.

?கோயில்களில் ஏன் பலிபீடம் அமைக்கப்படுகிறது?

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

நம்முடைய ஆணவம், அகங்காரம், தான் என்ற மமதை அனைத்தும் ஆண்டவனின் சந்நதியில் பலியிடப்படுகிறது என்பதன் அடையாளமே பலிபீடம். அந்த பலிபீடத்தைத் தாண்டி நாம் கீழே விழுந்து வணங்கும்போது மேற்சொன்ன துர்குணங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து காணாமல் போகிறது.

?முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பது ஏன்?

- சு.பாலசுப்ரமணியன்,ராமேஸ்வரம்.

இந்த உலகம் என்பது சதா இயங்கிக் கொண்டே இருப்பது. இந்த அண்டமும் சுழன்று கொண்டிருக்கிறது. அண்டவெளியில் நவகிரஹங்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. சூரியன் என்பது ஒரு விண்மீன். அது நீள்வட்டப்பாதையில் சுற்றுவதில்லை என்று அறிவியல் சொன்னாலும் சூரியன் என்பது ஒரு நெருப்புப்பந்து, அது தான் இருக்கும் இடத்திலேயே அதி வேகமாக தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது என்ற கூற்றை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. இப்படி இந்த உலகத்தில் எல்லாமே இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. இந்த இயக்கம் என்பது இறைசக்தியால்தான் உண்டாகிறது. அறிவியல் ரீதியாக இதுதான் உண்மை எனும்போது இந்த இயக்கம் எப்பொழுது துவங்கியது, எப்பொழுது முடிவிற்கு வரும் என்று யாராலும் கணிக்க இயலாதுதானே. அவ்வப்போது யுகங்கள் வேண்டுமானால் மாறிக் கொண்டிருக்கலாமே தவிர இயக்கம் என்பது ஒருபோதும் நிற்காது. இந்த பூமி கூட நீள்வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம், அந்த நீள்வட்டப்பாதையின் துவக்கம் எது, முடிவு எது என்று எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது அல்லவா, அதுபோலத்தான் இறைவன் என்பவனும் முதலும் முடிவும் இல்லாதவன் அவனுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை என்று ஞானியர் உரைக்கிறார்கள்.

?அன்றாடம் இரவு தூக்கத்தில் கனவுத்தொல்லை வந்துகொண்டு இருக்கிறது. அத்துடன் எடுத்த காரியத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு பரிகாரம் கூறுங்களேன்.

- என்.எல்.பிச்சைமுத்து, செங்கை.

தூர்வா துஸ்வப்ன நாசினீ என்கிறது உபநிஷத். தூர்வா என்றால் அறுகம்புல் என்று பொருள். விநாயகருக்குப் பூஜிக்கப்பட்ட அறுகம்புல்லை தலைமாட்டிற்கு அருகில் வைத்து உறங்கும்போது தேவையற்ற கனவுகள் என்பது வராது. அத்துடன் பூஜிக்கப்பட்ட அறுகம்புல்லைப் பெறும்போது விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்வதால் காரியத்தடை என்பதும் நீங்கிவிடும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.