Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் குடும்பத்தில் சண்டை வருவது ஏன்?

?ஒருவர் நாற்காலியில் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டிருந்தால் தரித்திரம் பிடித்துவிடும் என்று சொல்கிறார்களே, இது உண்மையா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

இது ஒழுக்கமின்மையின் வெளிப்பாடாகவும், தான் என்கிற அகந்தையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எதிரே அமர்ந்திருப்பவர்களை அலட்சியப்படுத்துவதாக இந்தச் செயல் புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற புரிதல்கள் ஒரு மனிதனின் வளர்ச்சியை தடைசெய்யும் என்பதால், தரித்திரம் பிடிக்கும் என்று சொல்லிவைத்தார்கள். அதனால்தான் நாற்காலியில் அமர்ந்துகொண்டு காலை ஆட்டக் கூடாது என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

?குருசந்திர யோகம் என்றால் என்ன?

- பி.கனகராஜ், தூத்துக்குடி.

யோகம் என்றால் இணைவு என்று பொருள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரஹங்களை இணைத்துக் குறிப்பிடுவதற்கு யோகம் என்று பெயர். ஜாதகத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருந்தால், அதனை குருசந்திரயோகம் உடைய ஜாதகம் என்று பெருமையாகச் சொல்வார்கள். இது நற்பலனைத் தரும் யோகமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த இரண்டு கிரஹங்களும் 6, 8, 12 ஆகிய பாவகங்களில் இணைந்திருந்தால் நற்பலனுக்கு பதிலாக எதிர்மறையான பலன்தான் கிட்டும். ஆக, யோகம் என்பது எந்த பாவகத்தில் கிரஹங்கள் அமர்ந்துள்ளன என்பதை வைத்துத்தான் அதற்குரிய பலனைத் தீர்மானிக்கும்.

?இது நமக்கு எத்தனை பிறவி என்று ஓலைச்சுவடிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியுமா?

- வண்ணை கணேசன், சென்னை.

முடியாது. இதனைத் தெரிந்துகொள்ள ஓலைச்சுவடிகள் எதற்கு? அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறது ஔவையின் தமிழ். இந்த உலகில் லட்சோபலட்சம் ஜீவராசிகள் என்பது உண்டு. முதலில் தாவரங்களாக அதனைத் தொடர்ந்து புழு பூச்சிக்களாக பிறவி எடுக்கிறோம். ஊர்வன, பறப்பன, மிருகங்கள் என வரிசையாய் பிறவி எடுத்து ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த நற்செயலின் பலனாகத்தான் மனிதனாய் பிறவி எடுத்திருப்போம். மனிதப் பிறவிக்கு முன்னதாய் எண்ணிலடங்கா பிறவிகளை எடுத்து, இந்த உலகில் வாழ்ந்திருக்கிறோம் என்பதே நிஜம். அத்தனையையும் தாண்டி, கிடைத்தற்கரிய இந்த மனிதப்பிறவியை எடுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்துதான் ஞானிகளும் மகான்களும் மறுபிறவி இல்லா நிலை வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தனையை வைக்கின்றனர்.

?ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் குடும்பத்தில் சண்டை வருவது ஏன்?

- கு.து.லிங்கமணி, மார்த்தாண்டன்பட்டி.

சண்டை வந்தால்தான் அது குடும்பம். ஊடலும் கூடலுமே தம்பதியர்க்கு அழகு. ஜோதிட விதிகளின்படி லக்ன பாவகம் என்பது நம்மைப் பற்றியும் நம்முடைய குணநலனைப்பற்றியும் பேசும். இந்த லக்ன பாவகத்திற்கு நேரெதிர் பாவகமாகிய ஏழாம் பவாகம், அதாவது நம்முடைய லக்னம் விழுந்த புள்ளியில் இருந்து நேரெதிரே 180வது பாகையில் விழுவதுதான் நம்முடைய களத்ர பாவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த களத்ர ஸ்தானம் என்பதுதான் நம்முடைய வாழ்க்கைத்துணையின் குணநலன் பற்றி பேசும். ஆக ஜோதிடவிதிகளின் படிகூட நம்முடைய குணநலனுக்கு நேரெதிரான குணநலன்களைக் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்று வகுத்து வைத்திருக்கிறார்கள். அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நேரெதிர் துருவங்கள்தான் ஒன்றையொன்று ஈர்க்கும் திறனை உடையது என்பது விதி. இதைத்தான் ஊடலும் கூடலுமே தம்பதியர்க்கு அழகு என்று தமிழ் இலக்கியங்கள் உரைக்கின்றன. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு உள்ளன்புடன் கூடிய புரிதல் இருந்தால், பிரிவு என்ற பேச்சிற்கே இடமில்லை.

?மடாதிபதிகள் கையில் தண்டம் வைத்திருப்பதன் சூட்சுமம் என்ன?

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

மடாதிபதிகள் என்று சொல்வதைவிட சந்நியாசிகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். சந்யாசியின் முக்கியமான அடையாளச் சின்னங்களில் தண்டமும் ஒன்று. அத்வைத சித்தாந்தத்தின்படி ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றே என்ற பிரம்ம ஞானத்தின் குறியீடாக இந்த தண்டம் என்பது பார்க்கப்படுகிறது. இந்த தண்டமானது குருபரம்பரையின் சக்தி ஆகவும், வேததர்மத்தின் அதிகாரமாகவும் சந்நியாச தீட்சையின் சின்னமாகவும் பார்க்கப் படுவதால், அதனை தரையில் வைக்காமல் மிகவும் மதிப்புடன் வைத்திருப்பார்கள். ஒரு அரசனுக்கு செங்கோல் இருப்பது போல, சந்நியாசிக்கு தண்டம் என்பது அமைந்திருக்கிறது. தன்னைத்தானே அடக்குபவனே உண்மையான அரசன் என்கிற உயர்ந்த சூட்சுமம் அதன் பின்னணியில் உள்ளது. துறவு, ஒழுக்கம், ஞானம், தர்ம ரீதியில் ஆன அதிகாரம், ஆத்மநிஷ்டை ஆகியவற்றின் சின்னமாக அந்த தண்டம் அமைந்திருப்பதால், அதனை சந்நியாசிகள் தங்கள் கரங்களில் வைத்திருக்கிறார்கள்.

?ஆண்கள் அடி பிரதட்சணம், பெண்கள் அங்கபிரதட்சணம் செய்யக்கூடாது என்கிறார்களே, ஏன்?

- ம.ஸ்ரீகிருஷ்ணா, மயிலாடுதுறை.

ஆண்கள் அடிபிரதட்சணம் செய்யக் கூடாது என்று சொல்வதைவிட, செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வதே சரியாக இருக்கும். பெண்களின் மனம் இலகுவானது. அவ்வாறு அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனின் பால் தங்கள் மொத்த கவனத்தையும் செலுத்தும் ஒருவிதமான பயிற்சியே அடிபிரதட்சணம் என்பது. அங்கபிரதட்சணம் என்று வரும்போது, உடம்பின் மொத்த பாகங்களும் தரையில் படும்படியாக படுத்து உருண்டு சுற்றிவரும் முறை ஆகும். அவ்வாறு பெண்களின் அங்கங்கள் இந்த பூமியில் படக்கூடாது என்பது சாஸ்திரவிதி. பெண்களையும் தெய்வங்களாகவே உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதுதான் நம்முடைய பண்பாடு.

அதனுடைய வெளிப்பாடுதான் இந்த விதிமுறை. நமஸ்கரிக்கும் போதுகூட பெண்கள் சாஷ்டாங்க (நெடுஞ்சாண்கிடையாக) நமஸ்காரத்தைச் செய்யக் கூடாது. ஆண்கள் சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்ச அங்க நமஸ்காரமும் மட்டுமே செய்ய வேண்டும். பெண்கள் நமஸ்கரிக்கும்போது அவர்களின் மேல்நெற்றி, இரண்டு கரங்கள், மற்றும்இரண்டு கால் முட்டிகள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டுமே தரையில் இருக்கின்ற வகையில் இறைவனை வணங்க வேண்டும். இதே விதியை பின்பற்றித்தான் பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்திச் சொல்கிறார்கள்.

ஆனால், இது கோயிலுக்கு கோயில் மாறுபடும். சரி, தவறு என்று சொல்ல இயலாது. பக்தியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.