வள்ளுவன் வாக்கானது ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளி ல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதாகும். பொருள் என்ற குபேரன் நம்முடன் இல்லை எனில், இவ்வுலகம் நமக்கானது இல்லை என்பதே பொருள்.
எல்லோருக்கும் தனம் தரக்கூடிய ஸ்தானம் இரண்டாம் பாவகமாக உள்ளது. சிலருக்கு இரண்டாம் பாவகாதிபதி உள்ள ராசியே பணம் தரக்கூடியதாக இருக்கிறது. எப்படி இருப்பினும் தனம் வரக்கூடிய அல்லது தனம் தரக்கூடிய ஒரு வஸ்துவை நாம் குபேரன் என்று அழைக்கிறோம்.
அந்த குபேரன் எப்படி இருப்பார் என்பதே அனைவரின் சிந்தனையாக இருக்கும். அந்த குபேரன் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொன்றாக பிரபஞ்சம் தனித்து வைத்துள்ளது. நமது வழிபாட்டிற்குரிய குபேரன் வேறு வடிவத்தில் இருக்கிறார். நமது தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள குபேரன் வேறாக உள்ளார்.
உலகில் உள்ள குபேர ஸ்தான ஸ்தலங்கள்?
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் என்ற இடம் தினமும் வணிக ரீதியாக சுற்றுலா, ஹோட்டல், கேசினோ என்ற விளையாட்டின் மூலம் அதிக பொருளாதாரத்தை ஈர்க்கும் இடங்களாக உள்ளது. அதே போன்று, சவுதி அரேபியா வியாபாரம் மற்றும் தொழில் ஆகியவற்றின் மூலம் அதிக பொருளாதாரத்தை ஈர்க்கும் இடங்களாக உள்ளது. இந்தியாவில், இன்றும் தினந்தோறும் தனத்தை மக்களால் வாரி வழங்கக்கூடிய தெய்வீகத்துடன் கூடிய திருத்தலங்களில் ஒன்று திருப்பதி. சில மக்களுக்கு தனத்தை கொண்டு அங்கு வழங்கினால் தனம் வருகிறது. ஆகவே, அங்கு உண்டியலில் காணிக்கையாக தனத்தை வாரி வழங்குகிறார்கள்.
இது போலவே, மும்பை பங்கு சந்தை உள்ள இடம், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஆகியவை வர்த்தக தொடர்பான பண பரிவர்த்தனை அதிகமாக உள்ளன.ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படும் ரோம் நகரமும் தினந்தோறும் சுற்றுலா, வழிபாடு, கேசினோ என்ற சூதாட்டம் மூலம் அதிக தனத்தை ஈர்க்கக்கூடிய ஸ்தல அமைப்புகளாக உள்ளது.இதுபோல் உலகில் இன்னும் ஏராளமான இடங்கள் தனம் ஈர்க்கும் இடங்களாக உள்ளது.
அதற்கென இயற்கை தனியமைப்பை விதித் திருக்கிறது. அந்த அமைப்புகள் இருப்பவர்களால் மட்டுமே அந்த தனத்தை ஈர்க்கமுடியும்.இவ்விடங்கள் ஒரு ராசிக்குட்பட்டு அந்த ஸ்தலங்களுக்கு பண ஸ்தானங்களாக இயங்குகின்றன.
தனிப்பட்ட நபருக்கு குபேரன் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்?
இப்படி ஒவ்வொரு ஜாதகருக்கும் தனம் தரும் குபேரன் கடவுளாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், இடமாக இருக்கலாம், சிந்தனையாக இருக்கலாம், எழுத்தாக இருக்கலாம், பேச்சாக இருக்கலாம், பாடலாக இருக்கலாம், செயலாக இருக்கலாம், தொழிலாக இருக்கலாம், சிலருக்கு விளையாட்டால் குபேரன், சிலருக்கு கேளிக்கைகளால் குபேரன்.
யாசகம் வாங்குபவர்களுக்கும் கூட அந்த யாசகப் பாத்திரம் குபேரன்தான். ஒரு அரசியல்வாதிக்கு அவருடைய வாக்குதான் குபேரன், ஒரு ஓவியனுக்கு அவனுடைய தூரிகைதான் குபேரன், ஒரு நடிகனுக்கு ரசிகன்தான் குபேரன் இவ்வாறு ஒவ்வொருவருக்கும் குபேரன் வெவ்வேறாக இருக்கிறது.
குபேரன் பணம் மட்டுமே தருவாரா?
சிலருக்கு குபேரன் என்ற பணம் வரும் பொழுதே பிரச்னை வரும், சிலருக்கு பணம் வரும் என்றால் கவி வரும். சிலருக்கு பணம் வரும் பொழுது சண்டை போடக்கூடிய மூர்க்கமான கோபம் வரும். சிலருக்கு பணம் வரும் பொழுது நோய் வரும். சிலருக்கு வரும் பொழுது புகழ் வரும். யாருக்கு தனத்துடன் குபேரன் என்ன தந்துவிட்டு செல்வார் என்பதை தனிப்பட்ட சுய ஜாதகம் முடிவே சொல்லும்.
ராசிகளின் அடிப்படையில் உங்களின் குபேர ஸ்தானங்கள்
*மேஷ ராசிக்கு ரிஷப ராசியும், மீன ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*ரிஷப ராசிக்கு மேஷ ராசியும், மிதுன ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*மிதுன ராசிக்கு ரிஷப ராசியும், கடக ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*கடக ராசிக்கு மிதுன ராசியும், சிம்ம ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*கன்னி ராசிக்கு சிம்ம ராசியும், துலாம் ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*துலாம் ராசிக்கு கன்னிராசியும், விருச்சிக ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*விருச்சிக ராசிக்கு துலாம் ராசியும் தனுர் ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*தனுசு ராசிக்கு விருச்சிக ராசியும், மகர ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*கும்ப ராசிக்கு மகர ராசியும், மீன ராசியும் குபேர ஸ்தானங்கள்.
*மீன ராசிக்கு கும்பராசியும், மேஷ ராசியும் குபேர ஸ்தானங்கள்.
இந்த குபேர நாதர்கள் எப்படி உள்ளார்கள் எந்த கிரகத்துடன் இணைந்துள்ளார்கள் என்பதை பொறுத்து குபேரன் இயங்குகிறார் என்பதே இயற்கையின் சூட்சுமம்.
குபேர ஸ்தானங்களில் உள்ள தேவதைகளை வழிபடுவதால், நிச்சயம் நன்மைகள் உண்டு. இந்த தேவதைகள் தன ஆகர்ஷண ஈர்ப்பை செய்கின்றது என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. உங்களின் குபேர நாதர்கள் யார் என்பதை நீங்கள்தான் உணர்வீர்கள்.
ஒவ்வொரு ஜாதகருக்கும் உள்ள குபேர நாதர்கள் அவர்களின் தனிப்பட்ட ஜாதகம் முடிவு செய்கின்றது. குபேர தேவதைகள் யார் என்பதை உங்கள் ஜாதகம் தெரிவிக்கும்.
குபேரனை சந்திப்போம்.



