Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன் பக்கத்தில் இருப்பது யார்

ஒருநாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.தீடீரென காரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னால் சென்று அமருங்கள். நீங்கள் தூங்கி வழிவதை பார்த்தால் எனக்கும் தூக்கம் வருகிறது என்றவுடன் நண்பர் முனகிக் கொண்டு பின் இருக்கையில் வந்து அமர்ந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.நான் தூக்கம் வராமல் ஓட்டுநர் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய தத்துவத்தை எளிதாக சொல்லிவிட்டு தன் பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார், இந்த ஓட்டுநர். ஆம், அவர் சொன்னது மிகப் பெரிய விஷயம்தான்.நம் குணம், சிந்தனை, செயல் போன்றவை பல நேரங்களில் நம்மைச்சுற்றி இருப்பவர்களை பொறுத்தே அமைகிறது. தேனீக்கள் போல நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் நண்பர் பக்கத்தில் இருக்கும்போது, நம்மை அறியாமலே நம் உடலில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்கிறது.உருப்படியாக ஒரு வேலையும் செய்யாமல், என்ன செய்து என்ன ஆகிவிடப் போகிறது என சதா புலம்பிக்கொண்டு வீணாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பவர் பக்கத்தில் இருக்கும்போது, நாமும் சோம்பேறியாக இருக்க ஆசைப்படுகிறோம்.

இந்த காரணத்திற்காக தான் வாகனம் ஓட்டும்போது தூங்குபவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள ஓட்டுனர்கள் விரும்புவதில்லை.ஒரு குறுநாடகத்தில், கதாநாயகன் தான் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வெகுதூரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறுவார்.அந்த வீட்டின் சொந்தக்காரர், தொழில் செய்யும் இடத்தின் அருகில் வசிக்காமல் ஏன் இவ்வளவு தூரத்தில் வந்து தங்குகிறீர்கள். உங்களுக்குத் தேவையில்லாத பண விரயம் மற்றும் உடல் அலைச்சல் ஏற்படுமே என்று கேட்டார்.அதற்கு அந்த கதாநாயகன் இந்த இடத்திலதான் பெரும் பணக்காரர்கள் வசிக்கிறார்கள். நானும் அவர்களைப் போலவே பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இங்கு இருந்தால் தான் தினமும் அவர்களைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.நான் சும்மா இருக்க நினைத்தாலும், அவர்களை பார்க்கும்போது அவர்களை போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவேன். அதனால்தான் பணத்தையும், உடல் அலைச்சலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த குடியிருப்பில் குடியேற விரும்புகிறேன் என்று பாமரத்தனமாகச் சொல்வார். எவ்வளவு பெரிய உண்மை அது!நம் வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ எதிர்மறை எண்ணம் கொண்ட சிலரைப் பிடித்தோ பிடிக்காமலேயோ சந்திக்க நேரிடும். அவர்களிடம் கவனமாக இருங்கள். உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்சம் சுறுசுறுப்பு கூட அவர்களால் கெட்டுவிடும்.

(தொடரும்)