Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தியானத்திற்கு உகந்த ஆசனம் எது? எப்படி அமர வேண்டும்?

?தியானத்திற்கு உகந்த ஆசனம் எது? எப்படி அமர வேண்டும்?

- கல்யாணராமன், திண்டுக்கல்.

பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில் தியானத்திற்குரிய சிறந்த ஆசனம் எது என்பதை விளக்கி இருக்கிறார். பத்மாசனம்தான் மிகச் சிறந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ரையில் ஒரு பாயை விரித்துத் துணியைப் பரப்பி அமருங்கள். வலது பாதத்தை எடுத்து இடது துடையிலும், இடது பாதத்தை எடுத்து வலது துடையிலும் வைத்துக் கொள்ளுங்கள். இது வயிற்றின் அடிப்பகுதியை மெதுவாக அழுத்த வேண்டும். தலை, கழுத்து, ஆகியவற்றை நிமிர்த்தி, முதுகைச் செங்குத்தாக வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் பத்மாசனம். ஆசனம் மன உறுதியை வெளிப்படுத்துவதைப் போல, உடம்பையும், உறுதியாக்கி நேராகச் சீராக வைக்கிறது. மன உறுதி, அமைதி, கவனம் ஆகியவற்றையும் இது கட்டுப்படுத்துகிறது.

தாமரை என்பதும் பத்மம் என்பதும் ஒன்றே. தாமரைக்குத் தூய்மையின் தனிச் சிறப்பு உண்டு. தாமரை மலர்ந்து விரிவதைப் போலத் தியானத்தின்போது நமது மனமும் விரிவடைகிறது. நமது ஆன்மிக மையங்களான சக்கரங்கள் அதனால் தாமரைக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. சகஸ்ர சக்கரத்தில் அமர்ந்துள்ள கடவுள் நமது மனத்தில் ஒளியைப் பரப்புகிறார். சூரிய வெளிச்சத்தில் தாமரை மலருவதைப்போல, இந்த ஒளியில் நமது உள்ளம் மலர்ச்சி அடைகிறது. சேற்றிலிருந்து எழுந்தாலும் தாமரை நல்ல நீர்ப் பரப்பில் மிதப்பதைப்போல, உலகத்தின் ‘ஆசாபாசங்களில் அழுந்தி வாழ நேர்ந்தாலும் மனம் தியானத்தின் போது தூய்மையில் மிதந்து மலருகிறது. சூரியனை நோக்கி நிமிர்ந்து மலரும் தாமரையைப் போல, மனமும் கடவுளை நோக்கி வழிபட்டு மலர்ச்சி அடைகிறது.

?கர்மவினை என்று சொல்லுவதும், தலைவிதி என்று கூறிக் கொள்வதும் ஒன்றுதானா? விதிப்பயன் என்று எல்லாவற்றையும் விட்டுவிடுவது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவுமா?

- சிவராஜ்குமார், திருவாரூர்.

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் நமது பூர்வஜென்ம கர்மவினை அடிப்படையை அமைக்கிறது என்பது இந்துமதம் கூறும் தத்துவம். இது சித்தாந்த பூர்வமான உண்மையும் ஆகும். இதன்படியே நமது முயற்சிகளும், முன்னேற்றமும் அமைகின்றன. கடந்த பிறவியில் செய்தது இந்தப் பிறவியின் செயல்களையும், இந்தப் பிறவியில் செய்வது அடுத்த பிறவியில் நடப்பதையும் தீர்மானிக்கின்றன. இறப்போ, பிறப்போ இந்தச் சுழற்சியை மாற்றுவதில்லை. இதைப் புரிந்து கொண்டு விட்டால், நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கு நாமே பொறுப்பாளி என்பதை உணர்ந்து கொள்வோம். கடவுளையோ, நமது பெற்றோரையோ, நாம் வாழும் சமூகத்தையோ நிந்திக்க மாட்டோம். நாம் இன்று எப்படி இருக்கின்றோம் என்பதையும், நாம் அடுத்த பிறவியில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு நல்ல எண்ணங்களும் அதற்குரிய நல்ல முயற்சிகளும் இருந்தால், நாம் நமது எதிர்காலத்தை நல்ல விதமாக உருவாக்கிக் கொள்ளலாம். அது தலைவிதிப்பயன் என்று சலிப்படைவதல்ல. நம்முடைய நோக்கமும். முயற்சியும் நல்லதாக இருந்தால், வெற்றி கிடைக்காவிட்டாலும், நாம் கலங்க வேண்டியதில்லை. கிடைக்காததைக் கர்மவினை அடிப்படையிலும் கிடைத்ததை மேலும் முன்னேறுதற்குரிய அடிப்படையாகவும் கொள்ளுவதற்கு அது உதவும். வெளியே கிடைப்பது எதுவானாலும், உள்ளூர முன்னேற்றம் கிடைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.