Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிவனுக்குரிய விரதங்களில் எது சிறந்தது?

?சிவனுக்குரிய விரதங்களில் எது சிறந்தது?

- அம்பரீஷ், காரைக்குடி

பிரதோஷ விரதம்தான் சிறந்தது. உலகத்தைக் காத்த சிவ பெருமான், ஆலகால விஷத்தை உண்டு ஆனந்த நடனமாடிய அந்த நேரத்தில், சிவபெருமானையும் நந்தியையும் வழிபட்டால், எல்லா தோஷங்களும் விலகும். ``பிரதோஷ விரதம் பிறதோஷம் நீக்கும்’’ என்பது பழமொழி.

?எல்லா புராணங்களும் வேத வியாசர் இயற்றியதா?

- கல்பனா ராமதாஸ், சென்னை.

அப்படிச் சொல்வது உபச்சார வார்த்தை. விஷ்ணு புராணம், வியாசரின் தந்தையான பராசர மகரிஷி தனது சீடரான மைத்ரேயருக்கு உபதேசித்தது. ஸ்ரீ மத் பாகவதம், வியாசரின் புதல்வரான சுகப்பிரம்ம மகரிஷி, பரீக்ஷித்து மகாராஜாவுக்கு உபதேசித்தது. `வியாசர்’ என்ற சொல்லுக்கு ``தொகுத்தவர்’’ அல்லது ``பிரித்து முறைப்படுத்தியவர்’’ என்று பொருள். வியாச பகவான் பல மகரிஷிகளைத் தூண்டி பல புராணங்களை எழுத வைத்தார், பின் தொகுத்தார் என்று சொல்லலாம். புராணங்கள் மக்களிடையே பரவியதில் சூத முனிவருக்குக் (சூத பௌராணிகர்) பெரும் பங்கு உண்டு. நைமிசாரண்யத்தில் கூடிய சௌனகர் முதலான முனிவர்களுக்கு, வியாசரின் சீட மரபில் வந்த சூத முனிவரே பெரும்பாலான புராணங்களை எடுத்துக் கூறினார் என்று புராணங்களே குறிப்பிடுகின்றன.

?ஒருவர் நன்கு படித்தவர், கல்வியாளர் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

- ஜெயந்தி கண்ணன், ராமநாதபுரம்.

ஒருவர் நன்கு படித்தவர், கல்வியாளர், அறிவாளி என்றால் அதைத் தெரிந்து கொள்வதற்கு சாத்திரத்தில் சில அடையாளங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. முதலில் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரிப்பதோ அல்லது பட்டங்களைப் பெறுவதோ அல்ல; ஒரு மனிதனின் குணநலனில் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றமே, உண்மையான கல்விக்கு அடையாளம் என்பதை நம் சான்றோர்கள் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர்.

``வித்யா ததாதி விநயம்’’ என்னும் வடமொழிப் பழமொழி கூறுவது போல, உண்மையான கல்வி ஒருவனுக்கு முதன்முதலில் அடக்கத்தையும், பணிவையும்தான் தரும். மரம் கனிகள் காய்க்கக் காய்க்கக் கீழ்நோக்கி வளைவது போல, அறிவு வளர வளர மனிதன் தலைக்கனம் குறையப் பெறுவான். திருவள்ளுவரும் உண்மையான கல்வியாளனின் பண்புகளைப் பல குறள்களில் சுட்டிக் காட்டுகிறார்;``இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்’’மெய்யறிவு உடைந்த சான்றோர்களின் சொற்கள் அன்பும், இனிமையும், கள்ளமின்மையும் கொண்டதாகவே இருக்கும். அவர் எல்லோரிடமும் இனிமையாகவும் மதிப்புடனும் பழகுவார். யாரையும் அவமானப்படுத்த மாட்டார்.

தான் அறிந்தது சொற்ப அளவே என்பதை உணர்ந்து ``கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’’ என்ற எண்ணத்தோடு எப்போதும் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையோடு இருப்பார். வெளிப்படையான பட்டங்களும், ஆரவாரப் பேச்சுக்களும் ஒருவரைப் `படித்தவர்’ எனக் காட்டலாம். ஆனால், அடக்கம், இன்சொல் பிறர் மனம் புண்படாமல் மதிக்கும் பண்பு, ஆகியவையே ஒருவரைச் `சான்றோர்’ அல்லது `உண்மையான கல்வியாளர்’ என அடையாளம் காட்டுகின்றன.

?எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் நம்புவதுதான் ஆன்மிகமா?

- ஆர்.வி.தினேஷ்குமார், காட்பாடி.

ஆன்மிகம் என்றால் குரு சொல்வதையோ அல்லது நூல்களில் இருப்பதையோ குருட்டுத்தனமாக நம்புவது என்ற தவறான புரிதல் பலரிடம் உண்டு. ஆனால், எதையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அனுபவித்து உணர்வதே உண்மையான ஆன்மிகம். சாஸ்திரங்களில் ஞானத்தைப் பெறுவதற்கு மூன்று வழிகள் சொல்லப்பட்டுள்ளன;

* சிரவணம்: நல்ல கருத்துக்களைக் கேட்டல்.

* மனனம்: கேட்ட விஷயத்தைச் சிந்தித்து, சந்தேகங்களை எழுப்பி, கேள்வி கேட்டுத் தெளிவடைதல்.

* நிதித்தியாசனம்: தெளிந்த உண்மையை அனுபவத்தில் உணர்தல்.

நசிகேதன் என்ற சிறுவன், எமதர்ம ராஜாவிடமே அஞ்சாமல் ``மரணத்திற்குப் பின் மனிதனுக்கு என்ன ஆகிறது?’’ என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டுத் தான் ஆத்ம ஞானத்தைப் பெறுகிறான். ஆறு சீடர்கள் முனிவரிடம் ஆறு ஆழமான கேள்விகளை முன் வைத்து, அதற்குப் பெறும் பதில்களே இந்த ``பிரச்னோபநிடதமாக’’ உருவானது.பகவத் கீதையே அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்விகளாலும், சந்தேகங்களாலும் உருவானதுதான். கிருஷ்ணர் எங்குமே ``நான் சொல்வதை அப்படியே நம்பு’’ என்று அர்ஜுனனைக் வற்புறுத்தவில்லை.

பகவத் கீதையின் 18-ஆம் அத்தியாயத்தில் (18.63) கிருஷ்ணர் தெளிவுபடுத்துவார்;``நான் சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். இதை நன்றாகச் சிந்தித்துப்பார் (விமர்சனம் செய்). பிறகு உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்’’குருட்டு நம்பிக்கை ஆன்மிகமாகாது; அது மூடநம்பிக்கை. தேடலும், கேள்வியும், சுய சிந்தனையுமே உண்மையான ஆன்மிகப் பயணத்தின் தொடக்கம்.

?பக்தியின் சிறப்பு என்ன?

- மோகன சுந்தரம், சேலம்.

பக்தி என்பது ஏதோ இறைவனிடம் வரங்களை எதிர்பார்ப்பதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ மட்டும் அல்ல; அது மனதைச் சுத்தப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. சாஸ்திரங்களில் பக்தியின் முதன்மைப் பயனாகக் கூறப்படுவது ``சித்த சுத்தி’’ தான். அழுக்கடைந்த கண்ணாடியில் பிம்பம் சரியாகத் தெரியாது; அது போல காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (ஆசை, கோபம், பேராசை, அறியாமை, அகந்தை, பொறாமை) எனும் அழுக்குகள் நிறைந்த மனதில் இறை உணர்வோ அல்லது தெளிவான சிந்தனையோ தோன்றாது.

இடைவிடாத பக்தியினால் மனதிலிருக்கும் இந்த அழுக்குகள் அகன்று, மனம் பளிங்கு போல் தூய்மையடைகிறது. மனம் தூய்மையடையும் போது, அங்கிருந்து பிறக்கும் முடிவுகளும் எண்ணங்களும் சுயநலமற்றதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். பேராசையோடும், அகந்தையோடும் அடையப்படும் வெற்றி அமைதியைத் தராது; மாறாக, மேலும் பதற்றத்தையும் பயத்தையும்தான் தரும்.

ஆனால், தூய்மையான மனதோடு பக்தியில் திளைப்பவனுக்குக் கிடைக்கும் வெற்றி என்பது மன அமைதி, நிறைவு, மற்றும் நிம்மதியுடன் கூடிய தெளிவை அளிக்கும்.

``தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’’இறைவனின் திருவடிகளைப் பற்றும் பக்தி ஒன்றே மனக் கவலையைப் போக்கித் தூய்மையளிக்கும் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. பக்தியைப் பற்றிக் கூறும்போது, ``எவன் ஒருவன் அனைவரிடமும் சமநோக்கும், அன்பும், தூய்மையான மனமும் கொண்டு விளங்குகிறானோ, அவனே எனக்குப் பிரியமானவன்’’ (அத்தியாயம் 12) என்கிறார்.வெளிப்படையான ஆரவாரங்களைவிட, ஒரு மனிதனின் அகத்தை (மனதை) அமைதிப்படுத்தி, தூய்மைப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் நல்லியல்பு வெளிப்பட வழிவகுப்பதே பக்தியின் சிறப்பும் பலனுமாகும்.

?எல்லாம் நன்மைக்கே என்று பெரியவர்கள் சொல்லுவது சரியா?

- பரத் ரங்கநாதன், தாம்பரம்.

ஒரு வியாபாரி சில பொருள்களை கழுதை மீது வைத்து வியாபாரத்திற்கு சென்றார். நல்ல வியாபாரம். விற்ற பணத்தில் கொஞ்சம் உப்பு மூட்டைகளை வாங்கி, மீதி பணத்தை பத்திரப் படுத்தி ஊருக்கு திரும்பினார். அவருடைய ஊரில் உப்பு கிடைக்காது. வழியில் மழை தொடங்கியது காட்டில் ஒதுங்கினார். உப்பு மூட்டைகள் கரைந்தன. வருத்தத்தோடு இறைவனைத் திட்டினார். அப்பொழுது சில முகமூடிக் கொள்ளையர் வந்தனர். அவர்கள் இவரை மிரட்டி பொருளைப் பறிக்க முயன்றனர். என்ன ஆனாலும் ஆகட்டும் என தைரியமாக நின்றார். உப்பு இழந்த வருத்தம், தைரியத்தைத் தந்தது. அவர்களில் ஒருவன் துப்பாக்கியில் ரவையைப் பொருத்தி சுடுவதற்கு முயன்றான். ஆனால், மழையில் ரவைகள் நனைந்து சுட முடியவில்லை.

அதற்குள் மற்ற வியாபாரிகள் வந்தனர். திருடர்கள் ஓடிவிட்டனர். இப்பொழுது ``என்னை காப்பாற்றுவதற்காகதான் நீ மழையை பொழிந்தாய்’’ என்று இறைவனை நன்றியோடு நினைத்தார்.

நமக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நமது சிற்றறிவால் அந்தத் தருணத்தில் தீர்மானிக்க முடிவதில்லை. நடப்பவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்துடனே நிகழ்கின்றன. அந்தக் காரணம் நமக்கு உடனே புரியாமல் போனால்கூட, இறுதியில் அது நமக்கு நன்மையையே தரும் என்ற `சரணாகதி’ மனப்பான்மையே மனிதனுக்கு மன அமைதியைத் தரும்.

இறைவன் அல்லது இயற்கை நமக்குத் தரும் கஷ்டங்கள் நம்மை அழிக்க அல்ல. மாறாக; நம்மிடம் உள்ள அகந்தையை அழிக்கவும், மனதிற்குப் பக்குவத்தையும் தைரியத்தையும் தரவும் (கதையில் வரும் வியாபாரிக்கு வருத்தமே துணிச்சலாக மாறியது போல) எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் பயன்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவே இந்தக் கதை.

?பேச்சு சிறந்ததா? மௌனம் சிறந்ததா?

- விஸ்வநாதன், வேளச்சேரி - சென்னை.

பேச்சும் மௌனமும் ஒன்றோடொன்று முரண்படுபவை அல்ல; அவை மனித வளர்ச்சியின் வெவ்வேறு படிகள். பேச்சு தொடக்கம் என்றால், மௌனம் அதன் நிறைவு. பேச்சு என்பது கருத்துக்களைப் பரிமாறவும், உலகியல் அறிவைப் பெறவும், மனித உறவுகளைப் பேணவும் அவசியமான ஒரு கருவி. ஆனால், பேச்சில் எல்லை உண்டு; அது வெளிப்புற உலகத்தை மட்டுமே எட்டக்கூடியது. மௌனம் என்பது வெறும் ``பேசாமல் இருப்பது’’ மட்டும் அல்ல; அது ``மனதின் அமைதி’’ அது உள்நோக்கிய பயணத்தின் இறுதி நிலை.

கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் பெற்ற உபதேசமாக இதைக் குறிப்பிடுவார்;

``செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்

சும்மா இரு, சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே’’

``சும்மா இரு’’ என்பது சோம்பேறியாக இருப்பது அல்ல; மனம் எந்தவித அலைபாய்தலும் இன்றி, அகந்தையும் பேச்சும் அடங்கி இறை உணர்வில் ஒன்றியிருப்பதாகும்.

இந்து தத்துவத்தில், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி குருவாக அமர்ந்து உபதேசிக்கும் காட்சி இதற்குச் சிறந்த உதாரணம். அவர் சீடர்களுக்கு மௌன வியாக்யானம் (மௌனத்தின் மூலமாகவே) மூலம் பிரம்ம ஞானத்தை உணர்த்தினார் என்பார்கள்.

ரமண மகரிஷி; ``மௌனம் என்பது இடையறாத பேச்சு என்பார். சொற்கள் பிரிவினையை உருவாக்கும்; மௌனம் அனைத்தையும் ஒன்றிணைக்கும். பேச்சு என்பது அறிவின் வெளிப்பாடு; மௌனம் என்பது ஞானத்தின் பூரணம். உலகியல் வாழ்க்கைக்குப் பயனுள்ள பேச்சு தேவை என்றாலும், ஆத்மார்த்தமான அமைதிக்கும் பரம்பொருள் உணர்விற்கும் மௌனமே இறுதியான சான்றாக அமைகிறது.

?சாதாரண அபிஷேகத்திற்கும், ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்கிறார்களே அதற்கும் என்ன வேறுபாடு?- ரமேஷ், திருச்சி.

சாதாரண நாட்களிலோ அல்லது பிற விசேஷ நாட்களிலோ செய்யப்படும் அபிஷேகத்திற்கும், `ஜேஷ்டாபிஷேகம்’ என்பதற்கும் மிக முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன.சாதாரண அபிஷேகம் என்பது தினமும் அல்லது மாதந்தோறும் வரும் விசேஷங்களில் (பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி போன்றவை) இறைவனை மகிழ்விக்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் செய்யப்படுவது.

ஜேஷ்டாபிஷேகம் என்பது தெய்வத் திருமேனிகளுக்கும் (குறிப்பாக உலோகம் / பஞ்சலோகத்தினால் ஆன உற்சவ மூர்த்திகளுக்கு) மற்றும் தங்க / வெள்ளிக் கவசங்களுக்கும் செய்யப்படும் `பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அபிஷேகம்’ ஆகும். வருடம் முழுவதும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு கவசங்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பர். இதனால் திருமேனிகளில் லேசான சேதங்களோ அல்லது தேய்மானங்களோ ஏற்பட வாய்ப்புண்டு.

ஜேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே உற்சவர்களின் தங்க / வெள்ளிக் கவசங்கள் முழுமையாகக் களையப்படும். புனித நீர், மூலிகைகள் மற்றும் இயற்கை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மூர்த்திகளின் திருமேனிகள் சுத்திகரிக்கப்படுகின்றன. கவசங்களில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின் மீண்டும் அணிவிக்கப்படுகிறது.தமிழ் மாதங்களில் ஆனி மாதம் (ஆஷாட / ஜேஷ்ட மாதம்) பகல் நேரம் மிக நீளமாக இருக்கும் மாதமாகும். ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் (கேட்டை நட்சத்திரத்திற்கு வடமொழியில் `ஜேஷ்டா நட்சத்திரம்’ என்று பெயர்) இந்த அபிஷேகம் நடைபெறுவது மிகவும் விசேஷமானது.

தேஜஸ்வி