Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

‘‘எங்கே அது, நரசிம்மம்..?’’

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 119 (பகவத்கீதை உரை)

``ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித

ஸர்வதா வர்தமானோபி ஸ யோகீ மயி வர்ததே (6:31)’’

‘‘எல்லா உயிர்களிலும் இருக்கும் என்னை, ‘பிரம்மம் ஒன்றே’ என்ற நம்பிக்கையில் நிலைத்திருந்து என் நாமங்களைச் சொல் பவனே யோகி. அவன் உலகியல் வாழ்வில் எல்லாவகை அவஸ்தைகளையும் அனுபவிப்பவனாகவே இருந்தாலும், அவன் என்னுடனேயே ஒன்றியவனாக விளங்குகிறான்’’ இருப்பது ஒன்றுதான் என்ற உறுதியான தீர்மானத்தில் இந்த யோகி வாழ்கிறான். பார்க்கும் பொருளெல்லாம் பரந்தாமனே என்ற ஐக்கியம் அவன் மனதில் நிறைந்திருக்கிறது.

பெரியாழ்வார் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்த மலர்களை, மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் ஆண்டாள். ஸ்ரீ வில்லிப்புத்தூர் வடபத்ரசாயிக்கு தந்தையார் அந்த மாலையை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டாள் தினமும் மேற்கொள்ளும் கைங்கர்யம்தான் இது. ஒருநாள், அவ்வாறு தொடுத்து முடித்த மாலையை இரு கரங்களால் மென்மையாகப் பற்றிக்கொண்டு வழக்கமாக அதை வைக்கவேண்டிய பூக்குடலையை நோக்கிச் சென்றாள்.

ஆனால், இதென்ன? ஒவ்வொரு மலரிலிருந்தும் மாயவன் சிரித்து மயக்குகிறானே! மலர் மட்டுமா? வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாமே கண்ணனின் அருள்மிகு தோற்றமாகவே பொலிகின்றனவே, இது என்ன விந்தை! சுவர், தூண், அலமாரி, பாத்திரங்கள், ஆடைகள், அணிகலன்கள் எல்லாமே கண்ணன், கண்ணன்... எப்படி, எப்படி, எப்படி? ஆண்டாள் முகத்தில் வெட்கம் குங்குமத்தை அப்பியது.

நாணம், நடையில் தடுமாற்றத்தை உண்டு பண்ணியது. எங்கெங்கு நோக்கினும் தன்னுடைய கண்ணன்! இத்தனை கண்ணன்களும் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தனை கண்ணன்களுக்கும் நடுவே, தனியாக ஆண்டாள்! வெட்கம் நடையைத் தடுமாற வைக்க, மெல்ல நடந்து வீட்டின் கூடத்திற்கு வந்தாள். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தட்டொளி அருகே சென்றாள். இந்தத் தட்டொளியைப் பார்த்துதான் அவள் தினமும் தன்னை அலங்கரித்து, சீவி சிங்காரித்துக் கொள்வாள்.

அதைக் கடந்து செல்ல முற்பட்ட அவள், தற்செயலாக அதை நோக்க அதிலும் கிருஷ்ணனின் பிம்பம் தெரிந்தது! சட்டென்று நின்றாள். ‘இது என்ன மாயம்! இத்தனை நாள் நான் நேரே நின்றால் என்னை மட்டுமே பிம்பித்த இந்த தட்டொளி இன்றைக்கு என் நாயகன் கிருஷ்ணனைக் காட்டுகிறதே!’ என்று வியந்தாள். அடடா, கிருஷ்ணன்தான் எத்தனை அழகு! இந்தத் தோற்றமே இவ்வளவு அழகு என்றால் இவனுக்கு மாலையிட்டால் மேலும் எத்தனை அழகாகத் தெரிவான்! உடனே தான் கையில் பற்றியிருந்த மாலையை அந்தத் தட்டொளி மீது சாத்தினாள். ஆனால், அது அங்கே தங்காமல் சரிந்தது. அடடா, கீழே விழுந்துவிடப் போகிறதே என்று பதறி அதனை மிருதுவாகப் பற்றிக்கொண்டாள்.

அடுத்தடுத்து எத்தனை தரம் முயன்றாலும் கிருஷ்ணன் பிம்பமாக, மயக்கும் புன்னகையுடன் நின்றிருக்க, மாலை மட்டும் ஒவ்வொரு முறையும் சரிந்து விழுந்து கொண்டே இருந்தது! பளிச்சென்று ஒரு யோசனை. அந்த மாலையைத் தானே போட்டுக் கொண்டால், இனி மாலை சரியாதே! உடனே தான் தொடுத்த அந்த மாலையைத் தானே சூடிக்கொண்டாள். இப்போது பிம்பத்தைப் பார்த்தாள். அட! கிருஷ்ணன், மாலையோடு அழகான கிருஷ்ணன்...! தன் பிம்பமே மாலைசூடிய கண்ணனாக மாறிய அதிசயம்! நெகிழ்ந்துபோனாள் ஆண்டாள். அப்படிச் செய்ததில் கண்ணனும் மகிழ்ந்ததாகவே அவள் பாவித்தாள்.

ஒரு யோகியின் நிலை ஆண்டாளைப் போன்றதுதான். எங்கும் எதிலும் பிரம்ம ஸ்வரூபத்தை காணும் பேரின்பம் பெற்றவன் அவன். மகாகவி பாரதியாரும் இந்த அனுபவத்தை அடைந்திருக்கிறாரே! காக்கைச் சிறகின் கறுப்பில் நந்தலாலாவைக் கண்டவர் அவர். மரங்களின் பச்சையில் அவன் மேனி வண்ணம்; கேட்கும் எல்லா ஒலியும் அவன் கீதமே; தீக்குள் விரலை வைத்தால் அந்த வெம்மையில் கிருஷ்ணனின் மெய் ஸ்பரிசம்… என்று எங்கும், எதிலும் அவருக்கு கண்ணனே தோன்றினான். அவரே ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்றும் வியந்து போற்றினார். அவரைப் பின்பற்றி அவருடைய சீடரான பாரதிதாசன், ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடிப் பரவசமுற்றார்.

‘‘ஒரு யோகி எல்லாவற்றிற்கும் மூலப்பொருள் பிரம்மம் ஒன்றே என்று அறிந்தவனாவான். எங்கும், எதிலும், யாரிடத்தும் அவன் பிரம்மத்தையே காண்கிறான். இத்தகைய பிரம்ம பாவத்திலேயே அவன் நிலைத்திருப்பதால், அவன் கொள்ளும் இணக்கமெல்லாம் இறை வணக்கமாகிறது. ‘ஸர்வதா’ என்று சொல்லப்பட்டிருப்பதால், தியானம், விவகாரங்கள், விச்ராந்தி தருணங்களில்கூட அவன் பிரம்ம ஸ்மரணையாகவே இருக்கிறான். இதுவே ஜீவன் முக்தன் நிலை’’ என்கிறார், சுவாமி சித்பவானந்தர்.

ஆதிசங்கரரின் பிரதான சீடர், பத்ம பாதர். குருவின் மீது கடுகளவும் குறையாத மரியாதையையும், சரணாகதி கோட்பாடும் கொண்டவர். ஒருசமயம் கங்கை நதியின் அந்தக் கரையில் இருந்த ஆதிசங்கரர், என்ன காரணத்துக்காகவோ, அவரை அழைத்தார். குருவின் எத்தகைய ஏவலுக்கும் சேவை சாதிக்கத் தயாராக இந்தக் கரையில் இருந்த பத்மபாதர், உடனே சட்டென்று கங்கையில் இறங்கினார். இறங்கியவர் ஆற்றின் மேல் அனாயசமாக நடக்கத் தொடங்கினார்.

இவருடைய குரு பக்தியைக் கண்டு வியந்த கங்கை, அக்கரையிலிருக்கும் குருவை அடையும் அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, அவருடைய பாதங்கள் படும் நீர்ப் பரப்பில் ஒவ்வொரு தாமரை மலராக நீட்டி, கமல பாலம் அமைத்துக் கொடுத்தாள். தன் வயம் இழந்திருந்த பத்மபாதர், அந்த மலர்கள் மீது பாதம் பதித்து எதிர்க்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்.

இந்த பத்மபாதருக்கு பரந்தாமனின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மரை பிரத்யட்சமாக தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. வர்ணனையாகச் சொல்லப் பட்ட, ஓவியமாக காணப்பட்ட நரசிம்மரை அப்படியே உயிரோடும், உடலோடும் காண வேண்டும் என்ற பக்தி தவிப்பில், அவர் தவத்தில் ஆழ்ந்தார். அந்தக் காட்டுவழியே போய்க் கொண்டிருந்த வேடன் ஒருவன் அவர் காற்றையே நாசியால் புசித்துக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டிருந்ததைக் கண்டான். அவருடைய அந்தக் கோலம் அவனுக்குப் புதுமையாகப் பட்டது.

அவருடைய தியான நிலையைக் கலைக்கக் கூடாது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே அவரை நெருங்கி, ‘‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். நானும் வெகு நேரமாக கவனிக்கிறேன், நீங்கள் ஆடாமல், அசையாமல் கற்சிலைபோல அமர்ந்திருக்கிறீர்களே?’’ என்று கேட்டான்.தன் தவத்துக்கு ஏற்பட்ட இடையூறை மென்மனதுடன் ஏற்றுக் கொண்ட பத்மபாதர், ‘‘நான் நரசிம்மரை தரிசிக்கும் நோக்கத்துடன் அவருக்காக தவமிருந்து காத்திருக்கிறேன்’’ என்று பதிலளித்தார்.

‘‘யார் அவர்?’‘‘மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவர். சிம்மத் தலையும், மனித உடலும் கொண்டவர்’’ வேடன் திடுக்கிட்டான். அப்படி ஒரு பிறவி இருக்க முடியுமா? அவனும் காட்டில் எத்தனையோ வகை மிருகங்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் இது என்ன புதுமாதிரி…? மிருகம் அல்லது மனிதன்? ஆனாலும் அவனுக்கும் அவரைக் காண வேண்டும் என்ற புது உற்சாகம் பிறந்தது. அதோடு, அவ்வாறு தான் கண்டுபிடித்து அழைத்து வந்தால் இந்த முனிவர் மிகவும் சந்தோஷப்படுவார் என்று வெகுளியாகக் கருதினான். உடனே அவரிடம், ‘‘சும்மா ஓரிடத்தில் அமர்ந்து கொண்டால் கிடைக்குமா? காடெல்லாம் சுற்றித் திரிந்தால்தான் காணமுடியும்’’ என்று அவரை மறைமுகமாக கேலி செய்தான்.

‘‘ஆனாலும் கவலைப் படாதீர்கள். இன்று மாலைக்குள் அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறேன்’’ என்று உறுதியளித்து விட்டுச் சென்றான். பத்மபாதர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார். தான் கண்டு பிடிப்பது மட்டுமல்லாமல், நரசிம்மரைக் கொண்டு வந்து சேர்ப்பிக்கவும் செய்வானாமே! ஆனால் வேடன் சளைக்கவில்லை, அயர்ச்சி கொள்ளவில்லை. தனக்குத் தெரிந்த இடங்கள், அதற்கு முன் சென்றிராத பகுதிகள் எல்லாவற்றிற்கும் சென்று நரசிம்மரைத் தேடினான். எதிர்ப்பட்ட மிருகங்கள் எல்லாம் அவனுடைய கண்ணில் பட்டாலும், அவனுடைய கருத்தில் பதியவில்லை.

அவனுடைய ஒரே நோக்கம், இலக்கு, தேடுபொருள் எல்லாம் நரசிம்மர்தான். தாகத்தைப் பொருட்படுத்தவில்லை; பசியையும் உணரவில்லை. தேடு, தேடு, தேடு… கொஞ்சம் கொஞ்சமாக பகல் விடை பெற்றுக் கொள்ள, மாலை நேரம் கருமையாகத் தன் வரவைத் தெரியப்படுத்தியது. வேடன் நொந்துபோனான். ‘‘ஏ நரசிம்மமே, நீ இருக்கிறாயா, இல்லையா? அந்த முனிவனின் தவம் பொய்யா? அல்லது நான் தேடுவதுதான் பொய்யா? தென்படமாட்டாயா?’’ என்று உரத்துக் கத்தினான்.

அப்போது அந்த இருளை மின்னல் கீறியது. அந்த ஒளியில் நரசிம்மர் அவனுக்குக் காட்சி தந்தார். அப்படியே பிரமித்து பேச்சிழந்தான் அவன். உண்மைதான். சிங்கத்தலை, மனித உடல்… அதுவரை தான் கற்பனையும் செய்திருக்க முடியாத அபூர்வ மிருகம் அல்லது மனிதன்! ஆனாலும் உடனே சுதாரித்துக் கொண்டான். ‘‘சரி, சரி, எனக்குக் காட்சி தந்தது போதும். வா, அந்த முனிவர் முன்னால் வந்து நில். அவர் பாவம், உனக்காக வெகு நாட்களாகக் காத்திருக்கிறார்.

அவருக்கும் காட்சி கொடு’’ என்று கேட்டான். நரசிம்மரும் சம்மதித்தார். ஆனால், வேடனுக்கு சந்தேகம். இப்போதைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, போகிற வழியில் எங்காவது ஓடிவிட்டால்? உடனே பக்கத்திலிருந்து கொடிகளை அறுத்து அவர் உடலைச் சுற்றி பலமாகக் கட்டுப் போட்டான். கொடியின் மறு முனையைத் தன் கையில் பிடித்துக் கொண்டு அவரை இழுத்துக் கொண்டு சென்றான்.

தன்னெதிரே வேடன் வந்து நிற்பதையும், கூடவே உயரமான, பருமனான ஏதோ கொடி தாவரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் பத்மபாதர் குழப்பத்துடன் பார்த்தார். ‘‘நரசிம்மர். நீங்கள் கேட்டீர்களே, அதே நரசிம்மர். கண்டுபிடித்துவிட்டேன். இந்தாருங்கள், பாருங்கள், அப்படியே பிடித்துக் கொள்ளுங்கள்’’ என்று உற்சாகமாகச் சொன்னான் வேடன். பத்மபாதருக்கு உயர்ந்து வளர்ந்திருந்த கொடிப் பந்தல்தான் தெரிந்ததே தவிர, நரசிம்மரைக் காண இயலவில்லை.

‘‘எங்கே, எங்கே என் நரசிம்மர்?’’ என்று ஆவல் மிகுத்துக் கேட்டார். ‘‘இந்த வேடனின் முயற்சியில் ஒரு சிறு அளவுக்குக்கூட உன் தவம் ஈடாகாது. அவன் எங்கும், எதிலும், யாரிடத்திலும் என்னையே தேடினான். அவன் பார்த்தவை எல்லாவற்றிலும் நான் இருக்க வேண்டும் என்று ஏங்கினான். ஆகவே அவனுக்கு நான் தரிசனம் கொடுத்தேன். அவனுடைய பக்திக்கும், கொடித்தளைக்கும் கட்டுப்பட்டேன். உன் முன் வந்திருக்கிறேன். ஆனாலும் உன்னால் என்னைக் காணமுடியவில்லை’’ என்று நரசிம்மர் அசரீரியாக பத்மபாதரை கேலி செய்தார். அப்போதே வேடனின் கால்களில் விழுந்தார், பத்மபாதர்.

மேலான பிரக்ஞை உள்ளவர்கள், தாம் காணும் ஒவ்வொருவருக்குள்ளேயும் பரமாத்மாவாக விளங்கும் பரம்பொருளைக் காண்கிறார்கள். இத்தகையவர்களே பரமஹம்சர்கள். பரம்பொருளின் பிரசன்னத்தை அறிவது என்பது தண்ணீருக்காகக் கிணறு தோண்டுவது போலத்தான். பூமியைக் குடைந்து கொண்டே போக வேண்டும். மணல், கற்கள், பாறைகள் என்று பல தடைகள் அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும்.

எல்லாவற்றையும் விலக்கிக் கொண்டே போய், ‘தண்ணீர் கிடைக்க வேண்டும்’ என்பதாகிய வைராக்கியம், கொஞ்சமும் சோர்வடையாமல் வலுப்பெறுமானால், பூமியும் மனம் கசியும். தண்ணீரும் கசிந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஊற்றாகிப் பீறிடும். பரமாத்மா எங்கும் நிறைந்திருக்கிறார். எங்கே தேடினாலும் அவரைக் கண்டு பிடித்து விட முடியும். அதைவிட, எல்லாவற்றிலும் அவர் நிலைகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் முக்கியம்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்