இஸ்லாமிய வாழ்வியல்
உலகம் ஓர் ஒளிக்காகக் காத்திருந்தது. அவனி ஓர் அருட்கொடைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அன்று அரபுலகம் மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழு பூமிப் பந்தும் எப்படி இருந்தது?
மூடப்பழக்க வழக்கங்கள் மலைமுகடேறி முழங்கிக் கொண்டிருந்தன. இறைமறுப்பும் இணைவைப்பும் இதயங்களில் கோலோச்சிக் கொண்டிருந்தன. மறுமையை மக்கள் மறந்தே விட்டார்கள். மங்கையரின் துயரமோ சொல்லுந்தரமன்று. பிறந்தது பெண் குழந்தை என்று தெரியவந்தால் உயிரோடு புதைத்து வந்தார்கள். குலப் பெருமையும் சாதிச் செருக்கும் சமர்புரிந்து கொண்டிருந்தன. குலச்சண்டை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. எங்கெங்கும் மது...! ‘இத்தனை ஆண்டு பழமையான மது எங்கள் வீட்டில் உள்ளது’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். திருமணம் குறித்து எந்த வரையறையும் இல்லை. ஓர் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடுமின்றி மணமுடிக்கலாம். விதவைகளும் அநாதைகளும் ஆதரவின்றிக் கண்ணீர் வடித்தார்கள். வலுத்தவன் வைத்ததுதான் சட்டம். இளைத்தவன் வாய் திறக்க முடியாது. அடிமைகள் விலங்குகள் போல் நடத்தப்பட்டார்கள். மனித உரிமைகள் குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் எங்கு நோக்கினும் அந்தகார இருள்...!!
இந்தச் சூழலில்தான் அந்தப் பேரொளி பிறந்தது...! அந்த ஒளி பிறந்தபோது இறை மறுப்பின் - இணைவைப்பின் கோட்டைகள் அதிர்ந்தன. அந்தகார இருள் ஆட்டம் கண்டு ஓட்டம் எடுத்தது.
அந்தப் பேரொளி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ரபீஉல் அவ்வல் மாதம் ஒன்பதாம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571, ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ஆம் தேதி) பிறந்தார்கள்.
(ஆதாரம்: ‘ரஹீக்’, பக்கம்75) குழந்தையைப் பெற்றெடுத்ததும் அன்னை ஆமினா அந்த நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்கு (நபிகளாரின் பாட்டனார்) தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியுடன் தம் பேரனைக் கஅபா இறை ஆலயத்திற்குத் தூக்கிச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்திக் குழந்தைக் காகப் பிரார்த்தித்தார். அங்கேயே குழந்தைக்கு ‘முஹம்மத்’ என்று பெயர் சூட்டினார்.
அன்றைய அரபுநாட்டு வழக்கப்படி ஹலீமா எனும் செவிலித் தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தூய்மையான கிராமத்துச் சூழலில் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்காகவும் நல்ல அரபு மொழிப் பயிற்சிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஹலீமா வீட்டில் குழந்தை முஹம்மத் வளர்ந்துவரும்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வரலாற்றாசிரியர்கள் சிலர் நபி(ஸல்) அவர்களின் நான்காவது வயதில் இந்த அதிசயம் நடந்ததாகப் பதிவு செய்துள்ளார்கள்.
அந்த நிகழ்ச்சி குறித்து நபித்தோழர் அனஸ்(ரலி) கூறுவதாவது: நபிகளார் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வருகை தந்து, நபியவர்களை மயக்கமுறச் செய்து, நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு ‘இது உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும்’ என்று கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார்... நபியவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.” (ஸஹீஹ் முஸ்லிம், ரஹீக்) குழந்தை முஹம்மத் இவ்வாறு சிறுவயதிலிருந்தே இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் வளர்ந்துவந்தது. தம் நாற்பதாம் வயதில் இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் நிகழ்த்திக் காட்டிய புரட்சிகள் அனைத்தும் வரலாற்று ஏடுகளில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறைத்தூதர் இந்த அவனிக்கு வந்த நாள் உலகம் ஒளிபெற்ற நாளாகும்.
இந்த வார சிந்தனை
“(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.” (குர்ஆன் 21:107)
- சிராஜுல்ஹஸன்.



