Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீங்கள் தீர்மானிப்பதும் உங்களைத் தீர்மானிப்பதும்

ஜோதிடத்தில் ஏழாம் பாவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனை. முதல் ஆறு பாவங்கள் ஒரு தனிமனிதனின் சுய வளர்ச்சியை (Personal Growth) குறிப்பவை என்றால், ஏழாம் பாவம் முதல் மீதமுள்ள ஆறு பாவங்கள் அந்த மனிதன் இந்த உலகத்தோடும், பிறரோடும் கொள்ளும் தொடர்பைக் குறிப்பவை. ஒவ்வொரு பாவத்தின் சிறப்பையும் அமைப்பையும் அதன் நேர் ஏழாம் பாவத்தைப் பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். லக்னம் என்பது ``நீங்கள்’’ (Self). அதற்கு நேர் எதிராக இருக்கும் ஏழாம் பாவம் ``பிறர்’’ (Others). லக்னம் உங்களைப் பற்றிச் சொன்னால், ஏழாம் பாவம் நீங்கள் உலகிற்கு எப்படித் தெரிகிறீர்கள் மற்றும் உலகம் உங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதைச் சொல்லும்.

கணித ரீதியாக, லக்னத்திற்கு 180° பாகையில் ஏழாம் பாவம் அமைவதால், இது ஒரு தராசு போல வாழ்க்கையைச் சமப்படுத்துகிறது. ஏழாம் பாவம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான காரணங்களில், ஒன்று முதல் ஆறு பாவங்களின் விளைச்சலாக ஏழாம் பாவம் திகழ்கிறது. 1 முதல் 6ம் பாவம் வரை: உடல்வாகு, தனம், தைரியம், சுகம், புத்தி, மற்றும் எதிர்ப்புத்திறன் (சத்ரு / ரோகம்). ஆகிய விஷயங்களைப் பேசுகிறது.

7ம் பாவம் இந்த அனைத்துத் தகுதி களையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஒரு சமூக உறவை (திருமணம் அல்லது தொழில் கூட்டாண்மை) எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதைக் காட்டும் களம் என்பதை மறந்து விடக்கூடாது.

திருமண வாழ்க்கைக்கு ஏழாம் பாவம் முக்கியம். வாழ்க்கைத் துணையின் குணம், தோற்றம் மற்றும் அவருடனான நெருக்கம் போன்றவற்றை ஆராயும் இடம். ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாய் / வியாழனும் ஏழாம் பாவத்தோடு தொடர்புடையவர்கள். இதை போலவே கூட்டுத் தொழில், நண்பர்கள் அல்லது தொழில் கூட்டாளிகளுடன் (Partners) உங்களுக்கு இருக்கும் இணக்கம். பொதுத் தொடர்பு, மக்கள் மத்தியில் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் வெளியூர் / வெளிநாட்டுப் பயணங்களையும் ஏழாம் பாவம் குறிப்பிடும். ஜோதிட ரீதியாக 2 மற்றும் 7ம் இடங்கள் ``மாரக ஸ்தானங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. ``வாழ்க்கைத் துணை அமையும் இடத்தில்தான் ஆயுளின் ரகசியமும் அடங்கியிருக்கிறது’’ ஏனெனில், 8ம் பாவம் ஆயுள் என்றால், அதற்கு 12ம் இடமான 7ம் பாவம் ஆயுள் விரயத்தைக் குறிக்கும்.

அதனால்தான் ஏழாம் பாவம் வலுவாக இருப்பது நீண்ட ஆயுளுக்கும், நிம்மதியான வாழ்விற்கும் அவசியம். ஒரு ஜாதகத்தில் லக்னம் (1ம் பாவம்) பலவீனமாக இருந்து, ஏழாம் பாவம் பலமாக இருந்தால், அந்த நபர் தன் துணையின் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ வாழ்வில் பெரிய நிலையை அடைவார். சுருக்கமாகச் சொன்னால், லக்னம் என்பது ``நான்’’, ஏழாம் பாவம் என்பது ``நாம்’’.

``நான்’’ என்பது முழுமையடைய ``நாம்’’ என்ற உறவு தேவைப்படுகிறது. அதனால்தான் ஏழாம் பாவம் மிக முக்கியம். ஜோதிடத்தில் ``பாவத் பாவம்’’ (Bhavat Bhavam) என்ற கோட்பாடு மிக முக்கியமானது. ஒரு பாவத்தில் இருந்து எத்தனையாவது இடத்தில் மற்றொரு பாவம் இருக்கிறதோ, அதன் அடிப்படை யில் அந்த உறவுகளின் அல்லது விஷயங்களின் நிலையை நாம் அறிய முடியும். லக்னத்திற்கும் (1ம் பாவம்) ஏழாம் பாவத்திற்கும் உள்ள தொடர்பு, அப்படியே மற்ற பாவங்களுக்குப் பிரதிபலிக்கும்.

1ம் பாவம் உங்கள் உடல், குணம், உயிர் என்றால் 7ம் பாவம் துணையின் உடல், குணம், உயிர் முதலியவற்றைக் குறிக்கும்.

2ம் பாவம் உங்கள் தனம், குடும்பம், வாக்கு என்றால் 8ம் பாவம் (7க்கு 2) துணையின் தனம், குடும்பம், வாக்கு முதலியவற்றைக் குறிக்கும்.

3ம் பாவம் உங்கள் தைரியம், இளைய சகோதரம் என்றால் 9ம் பாவம் (7க்கு 3) துணையின் தைரியம், இளைய சகோதரம் முதலியவற்றைக் குறிக்கும்.

4ம் பாவம் உங்கள் தாய், சுகம், வாகனம், வீடு என்றால் 10ம் பாவம் (7க்கு 4) துணையின் தாய், சுகம், வாகனம் முதலியவற்றைக் குறிக்கும்.

5ம் பாவம் உங்கள் புத்தி, பூர்வ புண்ணியம், குழந்தை என்றால் 11ம் பாவம் (7க்கு 5) துணையின் புத்தி, லாபம், ஆசைகள் முதலியவற்றைக் குறிக்கும்.

6ம் பாவம் உங்கள் கடன், நோய், எதிரி என்றால் 12ம் பாவம் (7க்கு 6) துணையின் கடன், நோய், விரயம் முதலியவற்றைக் குறிக்கும். உங்களின் 2ம் பாவம் உங்களின் வருமானம் மற்றும் பேச்சைக் குறிக்கிறது. அதே போல், ஏழாம் பாவத்திற்கு 2ம் இடமாக வரும் 8ம் பாவம், உங்கள் துணையின் (மனைவி / கணவன்) வருமானம் மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியைக் குறிக்கும். இதனால்தான் ஜாதகத்தில் 8ம் பாவம் வலுவாக இருந்தால் திருமணத்திற்குப் பிறகு துணையின் மூலம் சொத்துக்கள் சேருவது, வரதட்சணை அல்லது உயில் மூலம் சொத்து வருவது (In-laws property), துணையின் குடும்பம் வசதியாக இருப்பது போன்ற பலன்கள் நடக்கும்.

ஜோதிடத்தில் ஒரு பாவம் என்பது தனித்து இயங்குவதில்லை.

``மிரர் இமேஜ்’’ (Mirror Image) போல, நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதன் பிரதிபலிப்பு உங்கள் துணையின் மூலமாக வெளிப்படும். உதாரணமாக, உங்கள் ஜாதகத்தில் 10ம் பாவம் (தொழில்) வலுவாக இருந்தால், அது உங்கள் துணையின் 4ம் பாவமாக (சுகம்) வருவதால், உங்கள் கடின உழைப்பு உங்கள் துணைக்கு நல்ல வசதியான வாழ்வைத் தரும்.

பிரபஞ்சம் எப்படி ஒரு மாபெரும் வலைப்பின்னலால் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம்.

``ஒருவருடைய வாழ்வு மற்றவருடைய கையில்தான் இருக்கிறது’’ என்ற பிரபஞ்ச விதியை இந்த பாவத் பாவம் கோட்பாடு அழகாக விளக்குகிறது. லக்னத்திற்கு 8ம் பாவம் என்பது உங்கள் ஆயுள். அதற்கு நேர் எதிரே உள்ள 2ம் பாவம் உங்கள் துணையின் (7ம் பாவத்தின்) ஆயுள் ஸ்தானம் ஆகும்.

*உங்கள் 8ம் பாவம்: உங்களின் ஆயுள் + துணையின் தனம் (7க்கு 2).

*உங்கள் 2ம் பாவம்: உங்களின் தனம் + துணையின் ஆயுள் (7க்கு 8).

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஆழமான உண்மை என்னவென்றால், ``உங்கள் கையில் இருக்கும் பணம் (2ம் பாவம்), உங்கள் துணையின் ஆயுளுக்கு (7க்கு 8) மறைமுக பலத்தை அளிக்கிறது. அதேபோல் உங்கள் துணையின் செல்வாக்கு (8ம் பாவம்), உங்களின் ஆயுளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுகிறது’’ ஒரு பாவம் கெடும்போது, அது சம்பந்தப்பட்ட மற்றொரு பாவத்தின் ``ஏழாம் பார்வையை’’ அல்லது ``ஆயுளை’’ பாதிக் கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் ``தாரம் சரியாக அமைந்தால்தான் ஆயுள் கூடும்’’ என்று கூறினார்கள். உங்கள் 2ம் பாவம் (வாக்கு, குடும்பம்) அமைதியாக இருந்தால், உங்கள் துணையின் ஆயுள் (7க்கு 8) பலப்படும். இந்த அண்டவெளி ஒரு கண்ணாடி மாளிகை போன்றது. நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே பிரதிபலிக்கிறது. ஏழாம் பாவத்தின் சூட்சுமத்தை இன்னும் ஆராய்வோம்.