Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராசியாதிபதி பொருத்தம் என்றால் என்ன?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது, ராசிப் பொருத்தத்தை அடுத்து ராசிக்குரிய அதிபதிகள் பொருந்துகிறார்களா என்று பார்க்க வேண்டும். இதைத்தான் ராசியாதிபதிப் பொருத்தம் என்பார்கள்.

‘‘எங்க வீட்ல இருக்கறவங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லீங்க. ஆனா, எங்க வீட்டுக்காரருதான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவாரு’’ என்று சொல்கிறோம் அல்லவா அதுபோலத்தான் இதுவும். ராசிகள் தங்களுக்குள் ஒத்துப் போனாலும், அந்த ராசிக்குரிய அதிபதிகள் அந்த வீட்டிற்குரிய தலைவர்கள் எப்படி நட்போடு இருக்கிறார்களா என்று பார்த்து சேர்க்க வேண்டும்.

‘‘முதல்ல ராசிப் பொருத்தத்தை பார்த்தோம். அப்புறம் எதுக்கு ராசியாதிபதி பொருத்தமெல்லாம். அந்தப் பொருத்தமில்லை இந்த பொருத்தமில்லைன்னு சொல்லியே பேச்சுலராகவே இருக்க வச்சிடுவீங்க போலிருக்கே. எத்தனை நாள்தான் பெங்களூர்லயே தனியா சமைச்சு சாப்ட்டு காலம் தள்றது’’ என்கிற அங்கலாய்ப்பும் என் காதில் விழுகிறது.

இந்த ராசியாதிபதி பொருத்தம் சரியாக இருந்து விட்டால், கம்பீரமாகவும், பர்பெக்ட் தம்பதியராகவும் இருப்பார்கள். ‘‘ இந்தம்மாவ கேட்டா அவரு வந்துடட்டுமே... அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடறேனே நாளைக்கு பேசுங்க’’ என்பார். அதாவது அன்பையும் அதிகாரத்தையும் சமமாக பகிர்ந்து கொள்ளும் விஷயத்தை ராசியாதிபதி பொருத்தம்தான் நிர்ணயிக்கிறது. அது கணவரே முடிவெடுக்கற விஷயமாக இருந்தாலும் கூட மனைவியின் பார்வைக்கு கணவர் கொண்டு செல்வார்.

ராசியாதிபதி பொருத்தம் இல்லையெனில், ஒரே வீட்டில் இருக்கற மாதிரி தெரியும், ஆனால், ஒருத்தருக்கு ஒருத்தர் ஒட்டாமலும் அன்யோன்யம் இல்லாமல் இருப்பார்கள். ‘‘அவர் வேலையை அவர் பார்த்துக்கறாரு.. என் வேலையை நான் பார்த்துக்கறேன். நாலு பேர் மத்தியில ஏதோ சிரிச்சு பேசிகிட்டிருக்கோம்’’ என்றிருப்பார்கள்.

ராசியாதிபதி பொருத்தம் இருந்தால் சம்பள கவரை பிரிக்காமல் அப்படியே மனைவியிடம் கொடுப்பார். செலவுக்கு வேண்டுமானால் கேட்டு வாங்கிக் கொள்வார். பொருத்தம் இல்லையெனில் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மீதியை கொடுப்பார். இதுக்குள்ள எல்லா செலவையும் பார்த்துக்கோ என்று நிர்பந்திப்பார். தான் தோன்றித்தனமாக திரிவார். கணவனின் கடன்கள் மனைவிக்கு தெரியாது. மனைவியின் செலவுகள் குறித்து கணவனும் கவலைப்பட மாட்டார்.

‘‘ஏதோ சம்பளத்தை கொடுக்கறாரு. அஞ்சு வருஷமா ஒரே சம்பளந்தான். விலைவாசி ஏறது இறங்கறது எதுவும் தெரியாது. வீட்ல விருத்தி வேணும். அரிசியும் பருப்பும் எப்போவும் இருக்க வேணும்’’ என்று வீட்டினுடைய தான்ய விருத்தியைக் கூட ராசியாதிபதி பொருத்தம்தான் தீர்மானிக்கிறது. இந்த பொருத்தம் சரியாக அமையப்பெற்றால் சிறுக சிறுகச் நகைகள் சேர்த்து விடுவார்கள். பொருள் சேர்க்கை இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் சேமிப்பில் பணம் தங்கும்.

ஒவ்வொரு ஜோதிடரும் தங்களை பார்க்க வருபவர்களின் பரம்பரையையோ, தகுதியையோ, செல்வச் செழிப்பையோ பார்த்துப் பலன் சொல்வதில்லை. ‘‘இவ்ளோ பெரிய பணக்காரரா இருக்காரே. இவருக்கு கஷ்டம் வரும்போல இருக்கே. எப்படி சொல்றது’’ என்று யோசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ‘‘இன்னும் வேலையே கிடைக்கலை ஆனா, இன்னும் மூணு வருஷத்துல சின்ன கம்பெனிக்கு ஓனரா போகப் போகிறாரே இப்படி இவரால ஆக முடியுமா’’ என்று தயக்கத்தோடு அமர்ந்திருப்பதில்லை.

ஜோதிடர் பார்வையில் வெறும் கிரகங்கள்தான் தெரிய வேண்டும். பெயர் கூட சில சமயம் மறந்து விடும். கன்னியா... கடகமா... சொல்லுங்க என்றுதான் சில சமயம் சிலரை நினைவு கூர வேண்டியிருக்கும். அதுபோலத்தான் பொருத்தத்திலும் ராசியைத் தாண்டி ராசிக்கு அதிபதிகளுக்குள் பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே போகலாம். இவர்களை சேர்க்கலாமா என்று போட்டோ கூட வேண்டாம். கிரகங்களே போதும். ராசிக்கு அதிபதிகளுக்குள் ஒத்துப் போனால் பொருத்தம் இருக்கிறது என்று தேர்ந்தெடுக்கலாம்.