?திரை போட்டு இருக்கும்போது சுவாமியை வழிபடலாமா?
- அமுதா, திருச்சி.
கூடாது. பிரகாரத்தைக்கூட அப்பொழுது வலம் வரக்கூடாது. ஒரு இடத்தில் உட்கார்ந்து தியானம் பண்ணலாம். திரையைத் திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்யலாம். இது சம்பந்தமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன். தியாகராஜ ஸ்வாமிகள் திருமலைக்கு சுவாமி தரிசனத்திற்காகச் செல்லுகின்றார். அவர் சென்ற வேளையில் திரை போட்டிருக்கிறது. அந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அற்புதமான ஒரு கீர்த்தனையை இயற்றுகின்றார். அதுதான் கௌளிபந்து ராகத்தில் அமைந்த தெரதீய கராதா என்ற கீர்த்தனை. இதற்கு என்ன பொருள் தெரியுமா? அந்தத் திரை (வெளித்திரை) விலகுவது இருக்கட்டும்; என்னுடைய மனதிலே ஒரு திரை இருக்கிறதே, அது இறைவனை மறைக்கிறது. அந்த திரை விலகி உன்னுடைய காட்சி கிடைக்காதா? என்று அர்த்தம். திரை போட்டிருக்கும் பொழுது மனதில் உள்ள இறைவனும் காட்சி தர மாட்டான்; கருவறையில் உள்ள இறைவனும் காட்சி தர மாட்டான் என்பது இதில் உள்ள தத்துவம்.
?வங்கார தோசை என்றால் என்ன?
- ராமகிருஷ்ணன், சென்னை.
நம்முடைய ஆலயங்களிலே காஞ்சிபுரம் இட்லி, திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருக்கண்ணபுரம் முனியோதரன் பொங்கல் என பல்வேறு விதமான நிவேதனங்கள் உண்டு. அதைப் போல வங்கார தோசை என்பது ஒரு பணியாரம். திருநெல்வேலிக்கு பக்கத்திலே நம்மாழ்வார் அவதாரம் செய்த ஆழ்வார் திருநகரி இருக்கிறது. அங்கே விசேஷமான நிவேதனம் வங்கார தோசை. இந்தத் தோசையை தினமும் மூலவர் ஆதிநாதருக்குப் படைப்பார்கள். நல்ல கெட்டியான தோசையில் வெல்லக் கரைசலை தடவி ஆப்பம் போல் செய்திருப்பார்கள்.
?துர்தேவதை என்று சிலர் கூறுகிறார்களே, அது என்ன?
- சுபாராவ், வத்திராயிருப்பு.
இந்த உலகில் உள்ள சக்திகள் அனைத்திற்கும் அதற்கு இணையான எதிர் சக்திகள் என்பதுவும் உண்டு. இயற்பியலில் ஆற்றல் மாறாக் கோட்பாடு என்ற விதியையும் நியூட்டனின் மூன்றாம் விதியையும் படித்திருப்போம். அந்த விதிகளை இங்கே பொருத்திப் பாருங்கள். நமக்கு பிரச்னைகளைத் தரக்கூடிய எதிர்மறை சக்திகளை துர்தேவதைகள் என்றும் அந்தப் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கின்ற நேர்மறை சக்திகளை தெய்வங்கள் என்றும் போற்றுகிறோம் என்பதே உங்களுக்கான நேரடியான பதில்.
?மூன்றாம் பிறை பார்ப்பதால் பணக் கஷ்டங்கள் தீருமா?
- அர்த்தி, விழுப்புரம்.
அப்படி எல்லாம் நம்பாதீர்கள்.. என்னதான் பக்தி இருந்தாலும் கொஞ்சம் பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் எல்லாருமே அதைத் தீர்த்துக் கொள்ளும் வழி தேடாமல், மூன்றாம் பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தால் முடியுமா? நடக்குமா? ஆனாலும், இது எதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அமாவாசை என்பது இருட்டு. குழப்பம். அதிலிருந்து மெல்லிய கீற்று போல் ஒரு வெளிச்சம் தென்படும் நாள் மூன்றாம் பிறை நாள். ஒரு குழப்பமான மனநிலையில் மூன்றாம் பிறையைப் பார்க்கும் பொழுது உள்ளுக்குள், நம்முடைய பிரச்னையை தீர்க்கின்ற சின்ன வெளிச்சம் கிடைக்கும். அதற்கான குறியீடுதான் மூன்றாம் பிறையைப் பார்ப்பது.


