Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருமணத்தின்போது மஞ்சள் ஆடைகள் அணிவதன் சிறப்பு என்ன?

?திருமணத்தின்போது மஞ்சள் ஆடைகள் அணிவதன் சிறப்பு என்ன?

- பார்வதி, சென்னை.

இப்பொழுது மஞ்சள் ஆடைகளை திருமணத்தில் அணிவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. பொதுவாகவே மஞ்சள் என்பது மங்கலத்தைக் குறிக்கும் வண்ணம். திருமணத்திற்கு மட்டுமல்ல, வைதீகச் சடங்குகளின் போதும், ஹோமங்கள் செய்யும் போதும், யாத்திரைகள் செய்யும் போதும், மஞ்சள் ஆடைகளை அணியும் வழக்கம் இருக்கிறது. மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, ஆற்றல் மற்றும் நேர்மறையை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான, ஒளிரும் நிறமாகும். படைப்பாற்றல், நம்பிக்கை, அறிவு மற்றும் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது. தமிழர் கலாச்சாரத்தில், மஞ்சள் நிறம் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

?ஆலங்குடி தவிர குருவினுடைய தலங்கள் வேறு இருக்கின்றதா?

- கந்தசாமி, ராமநாதபுரம்.

நிறையத் தலங்கள் இருக்கின்றன. சூரியனார் கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே சூரியனுக்கு நேர் எதிரில் குரு பகவான் காட்சி தருகின்றார். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. திட்டை, வசிஷ்டேஸ்வரர் எனும் குரு பரிகாரக் கோயில். தமிழகத்திலேயே குருபகவான் மூலவருக்கும் அம்பாளுக்கும் நடுவே `ராஜகுரு’வாக தனிச் சந்நதியில் அருள்பாலிக்கும் ஒரே அபூர்வ தலம் இதுவாகும். மதுரை உசிலம்பட்டி அருகே திடியன்மலை என்று ஒரு தலம் இருக்கிறது. அங்கே காசியில் இருந்து சிவலிங்கமும் குருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன.

14 சீடர்களுடன் அங்கே குருபகவான் காட்சி தருகின்றார். சகாதேவன் குரு பகவானிடம் இங்கேதான் ஜோதிட சாஸ்திரத்தை கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயில் உள்ளது. பெருமாள் கோயிலாக இருந்தாலும், இங்கு குரு பகவான் தனது சுய உருவமான சாந்த வடிவில் தனிச் சந்நதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

காஞ்சி அருகே பிள்ளையார் பாளையம் என்கிற இடத்தில் காயாரோகனேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. குருகோயில் என்கிறார்கள். விழுப்புரம் முன்னுரில் குருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது. பொதுவாகவே தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் அவர் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். இப்படிப் பல கோயில்கள் குருபகவானுக்கு இருக்கின்றன.

?பூதனையை கண்ணன் கொன்றுவிட்டதாக பாகவதத்தில் வருகிறது. பூதனை வதமா? மோட்சமா?

- சுரேஷ், திருச்சி.

பகவான் கண்ணன், ஸ்பரிசம் பட்டபின் அது வதமாக இருக்குமா? மோட்சம்தான். ஜகத்குருவான கிருஷ்ணர், தீங்கிழைக்க வந்த அரக்கி என்று பார்க்காமல், தமக்கு முதன்முதலில் பாலூட்டிய `தாய்’ என்ற ஸ்தானத்தை அளித்தார். அவளது பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரு தாய்க்கு என்ன நற்கதி (மோட்சம்) கிடைக்குமோ, அதே உன்னத நிலையை கிருஷ்ணர் அவளுக்கு வழங்கினார். ஆன்மிகத் தத்துவப்படி, பூதனை என்பது நம் மனதில் இருக்கும் `அஞ்ஞானம்’ (அறியாமை மற்றும் மாயை) என்ற நச்சுக் குறியீடு. இறைவன் நம் மனதிற்குள் நுழைந்து அந்த அறியாமை என்ற நச்சை உறிஞ்சி அழித்துவிடுவார். அறியாமை அழியும் போது (வதம்), அங்கே ஆன்மா விடுதலை பெறுகிறது (மோட்சம்).