சரஸ்வதி என்று சொல்லும்போதே எல்லோரின் நினைவிற்கு வருவது, வெண்மையான ஆடை, வெண்மையான ஆபரணங்கள். இயற்கை சூழ்ந்த இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய சொரூபமாகும்.
சரஸ்வதி என்கிற வார்த்தையில் சரஸ் என்றால் நீர்நிலைகளை குறிப்பதாகும். அதனால்தான் நாமே சரஸ்வதியின் படத்தைப் பார்க்கும்போது ஒரு நீர் நிலைக்குப் பக்கத்திலே இருப்பது போன்றிருக்கும். சரஸ்வதி என்கிற பெயரே நீர்நிலையில் வசிப்பவள் என்று பொருளாகும். நீர்நிலையில் வசிப்பது எதைக் குறிக்கிறது?
எங்கு நீர்நிலை இருக்கிறதோ அங்கு இயற்கை மிகமிக ரம்மியமாக இருக்கும். அன்னப் பறவை, மான், பச்சைப்பசேலென்று வயல்வெளி இருக்கும். பறவைகளும், உயிரினங்களும் இருக்கும். எனவே, எங்கு நீர் இருக்கிறதோ அங்கு இயற்கை தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதைப்போல, சரஸ்வதி என்கிற பொருளே இயற்கை தன்னை முழுவீச்சில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதேயாகும். இயற்கையின் முழு வீச்சை காண்பிக்கக் கூடிய அம்பிகையின் சொரூபமே சரஸ்வதியாகும்.
இந்த சரஸ்வதி என்கிற வார்த்தையானது, நமக்கு எப்படி நம்முள் வெளிப்பாடு கொள்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முள் இருக்கிற இயற்கையான அறிவை விருத்தி செய்யக் கூடிய தன்மையை இது காட்டுகிறது. Source of knowledge எதுவெனில் அது nature ஆகும்.
இயற்கை என்பது அவ்வளவு சாதாரணமானதா? இந்த இயற்கையிடமிருந்துதான் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொள்கிறோம். இது நம்மையும் அறியாமல் நடக்கிறது. பேசுவது, கேட்பது, நடப்பது, பார்ப்பது… என்று எல்லாவற்றினுள்ளும் இயற்கையின் தாக்கம் இருக்கும். இதுமட்டுமல்ல ஞானத்தை அடையும் வரையிலுமே இயற்கையோடுதான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். அதுவே நம்மை ஞானத்திடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
அதெப்படி கொண்டுபோய்ச் சேர்க்கும்? இதற்கு ஏதேனும் பிரமாணம் உண்டா?
உண்டு. ஸ்ரீ மத் பாகவதத்தில் ஞான சொரூபியாக இருக்கக் கூடிய தத்தாத்ரேயரிடம் யது மஹாராஜா என்று உங்களுக்கு குரு யார் என்று கேட்கிறார்.
தத்தாத்ரேயர் குருவிற்கெல்லாம் குருவாக விளங்குபவர். ஆனால், தனக்கு குருவாக இயற்கையிலுள்ள இருபத்து நான்கு வஸ்துக்களைத்தான் காண்பித்துக் கொடுக்கிறார். இந்த இருபத்து நான்கு விஷயங்களின் மூலமாகவே நான் கற்றுக்கொண்டேன். இவை எல்லாமுமேதான் என் ஞானத்திற்குக் காரணம் என்று சொல்கிறார்.
இதை நாம் மிக முக்கியமாக பார்க்க வேண்டும். ஏனெனில், சொல்பவர் சாதாரணர் அல்ல. ஞானசொரூபியாக இருக்கக் கூடியவர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தன்னுடைய வம்சமான யது மஹாராஜாவின் குரு என்று தத்தாத்ரேயரை குறித்து உத்தவரிடம் பேசுகிறார்.
அப்படிப்பட்ட இயற்கையை பிரக்ருதி என்பார்கள். இந்த பிரக்ருதியினுடைய வடிவாக இருக்கக் கூடியவளே சரஸ்வதி தேவியாவாள். மஹாலட்சுமி அஷ்டோத்திரத்தில் முதல் நாமாவே… பிரக்ருதியை நமஹ… என்பதே ஆகும்.
இப்போது சரஸ்வதி என்கிற பெயரானது external அர்த்தத்தில், வெளிப்புறமாக அறிவை, ஞானத்தை எப்படி அருளுகிறாள் என்று பார்த்தோம்.
இப்போது இதே சரஸ்வதியானவள், நமக்குள் internal ஆக எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும்.
சரஸ்வதி என்றால் நீர்நிலையில் வசிப்பவள் என்று பார்த்தோம்.
இதேபோன்று நம்முடைய சரீரத்திலேயே ஒரு நீர்நிலை இருக்கிறது. நம்முடைய நாக்குதான் அந்த நீர்நிலையாகும். இந்த நாக்கானது எப்போதும் ஈரமாக இருந்து கொண்டே இருக்கும். இந்த நாவில் அவள் வசிப்பதால் அவளுக்கு சரஸ்வதி என்று பெயர். அதனால்தான் தமிழில் சரஸ்வதியை நா - மகள் என்று சொல்கிறோம்.
நாக்கில் வசித்தல் என்றால் என்ன?
இந்த நாக்குதான் நம்முடைய அறிவின் வெளிப்பாட்டிற்கு மிக முக்கிய காரணம். நாம் அறிவைப் பெறுவதற்கும் இதுதான் காரணம். ஒருவர் அறிவாக இருக்கிறார். வித்வத்தோடு இருக்கிறார் என்றால் அவரை நாவன்மை மிக்கவர் என்று சொல்கிறோம்.
ஒருவருடைய அறிவு என்பது நாக்கின் மூலமாகத்தான் வெளிப்படும். அதேபோல் அறிவைப் பெறுவதற்கும் இந்த நாக்கின் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.
சாதாரண கல்வியிலிருந்து குருவின் உபதேசங்கள், மந்திரங்கள் வரை எல்லாமே வாய் மூலமாக நாக்கின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறோம்.
நாக்கு என்கிற சரஸில் வசிப்பதால் அவளை சரஸ்வதி என்கிறோம்.


