Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மறுமை எதற்காக?

காரைக்குடியில், இரண்டு பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

அந்தக் குற்றவாளிக்கு இப்போது வயது 52. அதிகப்படியாக இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகள் வாழ்வார் என்றே வைத்துக் கொள்வோம். மீதியுள்ள 100 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை எப்படி நிறைவேற்ற முடியும். ஆனால் நீதியின் தேட்டம் அவருடைய குற்றச் செயல்களுக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். அதுதான் நீதி. வாழ்நாளோ அதிகபட்சம் 100 ஆண்டுகள்தாம்.

இங்கேதான் இஸ்லாம் கூறும் மறுமைக் கொள்கையை எண்ணிப் பார்க்க வேண்டும். மறுமையில் அவரவர் செய்த குற்றங்களுக்குரிய தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள். அங்கே மரணம் என்பதே இல்லை. தண்டனையை முழுமையாக அனுபவித்துதான் ஆகவேண்டும்.

“ஐயோ. பூமியில் வந்த மரணமே எங்களின் இறுதி மரணமாக இருந்திருக்கக் கூடாதா?” என்று குற்றவாளிகள் கதறுவார்கள் என்று இறுதி வேதம் கூறுகிறது.மறுமை என ஒன்று இருந்தால்தான் மனிதர்களின் செயல்களுக்கு முழுமையாக நீதி செலுத்த முடியும். அதனால்தான் மறுமை மீதான நம்பிக்கையை மார்க்கம் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது. இஸ்லாம் அறிவுபூர்வமான, நீதிசார்ந்த வாழ்வியல் அமைப்பாகும்.

மறுமையில் இறைவனின் திருமுன் (சந்நிதானத்தில்) எந்தக் குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது. பாவிகளின் வினைப் பட்டியல் - செயலேடு அவர்களின் இடக்கையில் வழங்கப்படும். “நீ செய்தவற்றை நீயே படித்துப் பார்” என்று சொல்லப்படும்.

இறுதி வேதம் குர்ஆன் கூறுகிறது:

“வினைப் பட்டியல் முன்னால் வைக்கப்பட்டு விடும்.

“நீங்கள் பார்ப்பீர்கள்: அவ்வேளை குற்றம் புரிந்தோர் தமது வாழ்க்கைப் புத்தகத்தில் உள்ளவற்றைக் கண்டு அஞ்சிக் கொண்டிருப்பார்கள்.

மேலும் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்:

“அந்தோ...எங்கள் துர்பாக்கியமே! இது என்ன பதிவேடு! எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே.”

தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதைக் காண்பார்கள். மேலும் உம் அதிபதி எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்க மாட்டான்.” (குர்ஆன் 18:49)

இறைவனின் பிடி மிகவும் கடுமையானது என உணர்ந்து இறைவனுக்குப் பணிந்து வாழ்வோம்.

மறுமை விசாரணை உறுதி. ஆகவே அனைத்து விதமான தீமைகளிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் விலகி இருப்போம்.

இந்த வார சிந்தனை

“அந்த நாளில் இவர்களின்(பாவிகளின்) எந்த சூழ்ச்சியும் இவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது. இவர்களுக்கு உதவி செய்திட யாரும் வரமாட்டார்கள்.”(குர்ஆன் 52:46)

- சிராஜுல்ஹஸன்