ஒரு நாள் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆழமான உண்மையை மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்க நினைத்தார். அதற்காக அவர் எந்தப் புத்தகத்தையும் திறக்கவில்லை; எந்தப் பெரிய உரையையும் நிகழ்த்தவில்லை. அதற்குப் பதிலாக ஒரு எளிய கேள்வியை மட்டும் கேட்டார். அந்தக் கேள்வி சிறியதாக இருந்தாலும், அதன் பதில் மனித வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் உணர்த்தக்கூடியதாக இருந்தது. ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து,
``இந்த உலகிற்கு நாம் பிறக்கும்போது என்ன கொண்டு வருகிறோம்?’’ என்று கேட்டார். சில மாணவர்கள் யோசித்தனர். சிலர் அமைதியாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரு மாணவன் எழுந்து,
``ஐயா, நாம் இந்த உலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. வெறுங்கையோடுதான் பிறக்கிறோம்’’ என்று பதிலளித்தான். அந்தப் பதிலைக் கேட்ட ஆசிரியர், புன்னகைத்தார்.
பிறகு ஆசிரியர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டார்;
``அப்படியானால், இந்த உலகைவிட்டு செல்லும்போது என்ன கொண்டு போகிறோம்?’’ என்றார். அந்த மாணவன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு,
``அதுவும் இல்லை ஐயா. இந்த உலகைவிட்டுப் போகும்போதும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது’’ என்று பதிலளித்தான். அந்தப் பதில் ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அப்போது ஆசிரியர் அமைதியாக மாணவர்களை நோக்கி,
``வரும்போதும் எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் இந்த இரண்டிற்கும் இடையில் கிடைக்கும் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம் உண்மையான அடையாளம். நாம் சம்பாதிக்கும் பணம், வீடு, நிலம், பதவி, புகழ் எல்லாம் இந்த உலகிலேயே தங்கிவிடும். ஆனால், நாம் செய்த நன்மைகள், நாம் பகிர்ந்த அன்பு, நாம் காட்டிய கருணை, நாம் விட்டுச் செல்லும் நல்ல பெயர் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்’’ என்றார். அந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அந்த நாளிலிருந்து அவர்கள் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் பொருட்களைச் சேர்ப்பது அல்ல, நல்ல மனிதராக வாழ்வதுதான் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால் ஒவ்வொரு நாளையும் அன்போடும், நேர்மையோடும், பிறருக்கு உதவும் மனப்பான்மையோடும் வாழவேண்டும் என்பதை உணர்ந்தனர். இறைமக்களே, வாழ்க்கையில் பணம் அவசியம்தான். ஆனால் பணமே வாழ்க்கை அல்ல. செல்வம் நமக்கு வசதியைத் தரலாம்; ஆனால் மனநிம்மதியைத் தருவது நல்ல மனமும் நல்ல செயல்களும்தான். ஒருவரின் உயர்வு அவர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதில் இல்லை; அவர் எத்தனை பேரின் கண்ணீரைத் துடைத்தார், எத்தனை பேரின் வாழ்க்கையில் வெளிச்சமாக இருந்தார் என்பதில்தான் இருக்கிறது.
நாம் இந்த உலகைவிட்டு சென்ற பிறகு மக்கள் நம்மைப் பற்றி பேசுவது நம்முடைய சொத்துகளைப் பற்றியல்ல; நம்முடைய குணத்தைப் பற்றித்தான். அதனால் பிறர் மனதைப் புண்படுத்தாமல், முடிந்தவரை உதவி செய்து, உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி. பொருள் சேர்ப்பதைவிட, மனிதர்களைச் சேர்ப்பதே சிறந்த செல்வம்.
``உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்’’ (1 தீமோத்தேயு 6:7,8) என்று இறைவேதம் கூறுகிறது.
பூமியில் சேர்த்த செல்வம், ஒருநாள் மறைந்துவிடும்; ஆனால் அன்பால் செய்த நன்மையும், நீதியோடு வாழ்ந்த வாழ்க்கையும், தேவனுக்குப் பிரியமான இதயமுமே என்றென்றும் நிலைத்திருக்கும்.
- அருள்முனைவர்.பெ.பெவிஸ்டன்.



