Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம் எண்ணங்களும், சிந்தனைகளும் என்ன செய்கிறது?

என்றென்றும் அன்புடன் 19

மனதின் அலைகளே எண்ணங்கள். நமது உணர்வுகள், கருத்துக்கள், நினைவுகள், கற்பனைகள் மற்றும் தீர்மானங்களின் வெளிப்பாடுகள். ஒரு நொடிக்கு ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகின்றன. இந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?

நமது ஆழ்மனதிலிருந்து எழும் எண்ணங்கள். நாம் பார்க்கும், கேட்கும், உணரும் விஷயங்களிலிருந்து உருவாகும் எண்ணங்கள். கடந்தகால அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் சமூகத் தாக்கங்கள்.

இந்த எண்ணங்கள் வெறும் கற்பனைகள் அல்ல; அவை சக்தி வாய்ந்தவை. ஒரு விதை எப்படி ஒரு பெரிய மரமாக வளருமோ, அதேபோல் ஒரு சிறிய எண்ணம் கூட ஒரு பெரிய செயலாக, ஒரு பெரிய மாற்றமாக உருவெடுக்க முடியும்.

எண்ணங்களே நம்மை ஆளுகிறது, அதன் பிடியில் சிக்கி அதை ஒன்றும் செய்ய முடியாமல், புதுப் புது பாடங்களை கற்பித்துக்கொள்கிறோம். நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் என்று பலவாறு அதைப்பற்றி பேசுகிறோம்.இந்த இருமை நம்மை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும். எண்ணங்கள் என்பதே எதிர்மறைதான். எதுவெல்லாம் நம்மை நம் சுயத்தில் இருந்து தள்ளி வைக்கிறதோ அவை அனைத்தும் நம் எதிரிகளே.

எண்ணங்களை தவிர்க்க முடியுமா?

தியானத்தின் மூலம் எண்ணங்கள் அற்று இருக்க முடியுமா ?

தியானத்தில் உட்கார்ந்தால் பல லட்சக்கணக்கான எண்ணங்கள் வந்து குவியும்.

தியானம் ஞானிகளுக்கும் சாதுக்களுக்கு மட்டுமே சாத்தியமா ?

இதுபோன்று பல கேள்விகள் நம்மிடம் உள்ளது.தியானம் அனைவருக்கும் சாத்தியம். நாம் நமக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடும்பொழுது, ஏதோ ஒரு கலையில் (பாட்டோ, ஓவியமோ, கோலம் போடுவதோ) மூழ்கும் பொழுது நம் மனது அதைப்பற்றிக் கொள்ளும். எண்ணங்கள் நின்று போகும்.

அந்த நிலையில் உன்னதமான படைப்புகள் வெளிவரும்.பல நாடுகளில் டீ குடிப்பதையே தியானமாக கொண்டாடுகிறார்கள்.நம் நாட்டில் ஆன்மிகம், எண்ணங்களற்று இருக்க பல்வேறு வழி முறைகளைவகுத்துக் கொடுத்திருக்கிறது. ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு கொள்ளையனாக வாழ்ந்து வந்தார். வால்மீகி ஒருமுறை நாரதரிடம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் அவரைத் தடுத்து நிறுத்தி திருட்டைக் கைவிடச் சொன்னார்.‘‘என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். என்னால் இந்தத் தொழிலை கைவிட முடியாது” தீர்மானமாகச் சொன்னான்,அந்தக் கொள்ளையன்.‘‘நீ அபகரிக்கும் பொருட்களை வாங்கி கொள்ளும் உன் குடும்பம். இதனால் வரும் பாவத்தில் பங்கு கொள்வார்களா?”நாரதர் பெரும் தூண்டிலை போட்டார்.

அந்தக் கேள்விக்கு கொள்ளையனிடம் பதில் இல்லை.அவன் குடிலுக்குச் சென்று, நாரதர் கேட்ட கேள்வியை தன் குடும்பத்தாரிடம் கேட்கவும் கேட்டான். கொள்ளையடிப்பதிலும் கொலை செய்வதிலும் தன்னுடன் சேர அவர்கள் தயங்குவதைக் கண்டு, அவன் மனம் விட்டுப் போனது.செய்வது அறியாது காடுகளில் திரிந்தபடி இருந்தான். நாரதரைச் சந்தித்தான்.‘‘நீங்கள் கேட்ட கேள்வியை என் குடும்பத்தாரிடம் கேட்டேன், அவர்கள் என்னை கைவிட்டனர். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.”நாரதரும், ‘‘உனக்கு அந்த மரத்தை பிடிக்குமா?’’

அவனும் பிடிக்கும் என்பதுபோல் தலை அசைத்தான்.நாரதர், ‘‘அதன் அடியில் அமர்ந்து, அதன் பெயரை சொல்லியபடி இரு. ‘‘மரா, மரா” என்று சொல். அதுவே வழி காட்டும்.”அவர் இதைச் சொல்லிவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தார்.எதையும் தீவிரமாக இருப்பவனையே அது தேர்ந்தெடுக்கும்.நாரதர் வார்த்தையை உள் வாங்கிய பின் அதை அந்தக் கொள்ளையன் பல வருடங்கள் அசையாமல் சொல்லியபடி இருந்தார். மனது வார்த்தையை பற்றிக்கொண்டது. மனம் நின்றதால், எண்ணங்கள் நின்றது. பெரும் சக்தி அவருக்குள் இறங்க அவர் பாத்திரமானார். அவர் உடலைச் சுற்றி எறும்புப் புற்றுகள் வளர்ந்து, அந்தப் புற்றை கடந்து சென்ற முனிவர்கள் அந்த புற்றை அகற்றினர். பின்னர், அவர் வால்மீகத்திலிருந்து (எறும்பு) வெளிவந்ததால் அவருக்கு வால்மீகி என்ற பெயர் வழங்கப்பட்டது.

ராமாயணம் என்னும் பெரும் காவியம் அவர் மூலமாக எழுதப்பட்டது.எண்ணங்களை தவிர்க்கவில்லை என்றால் அடுத்த பெரும் சுழற்சி நம்மைப் பற்றும். அதுவே ‘அளவுக்கு அதிகமான சிந்தனை’ (Over thinking)யாக மாறும். சில சமயங்களில், நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிராகத் திரும்பி, நம் மன அமைதியைக் குலைத்து, சரியான முடிவுகளை எடுக்க விடாமல் தடுக்கும்.

அளவுக்கு அதிகமான சிந்தனை என்றால் என்ன?

அளவுக்கு அதிகமான சிந்தனை என்பது, ஒரு விஷயத்தைப் பற்றித் தேவைக்கு அதிகமாக சிந்திப்பது ஆகும். இது பெரும்பாலும் கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களாகவும், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளாகவும் வெளிப்படும். ஒரு முடிவை எடுத்த பிறகும் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்திப்பது, சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவது, எதிர்மறையான விளைவுகளையே கற்பனை செய்வது போன்றவை இதன் அறிகுறிகள். இது நம் மனதை ஒரு சுழற்சிக்குள் சிக்கவைத்து, செயல் திறனைக் குறைக்கிறது.

மகாபாரத்தில் யயாதிக்கு இளம் வயதிலேயே முதுமை வந்து விடுகிறது. ஆனால், அவர் தனது இளமையைத் துறக்க மனமில்லாமல், தனது மகன்களிடம் இளமையைக் கேட்கிறார். அவரது இளைய மகன் புரு தனது இளமையைத் தியாகம் செய்ய முன் வருகிறான். யயாதி இளமையைப் பெற்று, பல ஆண்டுகள் இன்ப வாழ்க்கையை அனுபவிக்கிறார்.ஆனால், எவ்வளவு அனுபவித்தாலும் அவரது ஆசை தீரவில்லை. ‘‘ஆசைகளுக்கு முடிவே இல்லை” என்பதை அவர் உணர்ந்த பிறகும், மீண்டும் மீண்டும் சிற்றின்ப நாட்டத்திலேயே மூழ்கி, தனது இளமையைத் தொடரவே விரும்புகிறார். தனது இளமையைத் திரும்பப் பெற வேண்டும். இன்னும் அனுபவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம், ஒருபோதும் அவரைத் திருப்தி படுத்தவில்லை.

தனது கடந்த கால அனுபவங்களைப் பற்றியும், எதிர்காலத்தில் என்னென்ன இன்பங்களை இழக்கப் போகிறோம் என்பதைப் பற்றியும் அவர் அளவுக்கு அதிகமாகச் சிந்தித்ததாலேயே, அவரால் அந்த நிமிடத்தில் வாழ முடியவில்லை. இறுதியில், அவர் தனது தவறை உணர்ந்து, தனது இளமையைப் புருவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, வனவாசம் செல்கிறார்.அளவுக்கு அதிகமான சிந்தனை திருப்தி இன்மையை தரும்.நம் பிரச்னைகள் சிந்தனையால் உருவாக்கப்பட்டவை.

சிந்தனை ஒரு பிரச்னைக்குத் தீர்வாகத் தோன்றினாலும், அதுவே அடுத்த பிரச்னையை உருவாக்குகிறது. மார்க்கண்டேயர் சிவபெருமானின் தீவிர பக்தர். அவருக்கு ஆயுள் பதினாறு ஆண்டுகள் மட்டுமே என்று விதி இருந்தது. இந்த உண்மை தெரிந்திருந்தும், மார்க்கண்டேயர் தனது வாழ்நாளைப் பற்றியோ, மரணத்தைப் பற்றியோ அளவுக்கு அதிகமாகச் சிந்தித்து கவலைப்படவில்லை. மாறாக, அவர் தனது பக்தியிலும், சிவபெருமானின் மீதான நம்பிக்கையிலும் முழுமையாக மூழ்கினார்.

மரணநாள் நெருங்கியபோது, எமதர்மராஜன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்தான். ஆனால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, முழு நம்பிக்கையுடன் சிவபெருமானை வேண்டினார். அவரது பக்தியைக் கண்டு சிவபெருமான் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்து, மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார். வாழ்க்கையில் சவால்கள் வரும்போது, அளவுக்கு அதிகமாகச் சிந்தித்து கவலைப் படுவதை விட, நம்பிக்கையுடன் நமது கடமைகளைச் செய்து, நிதானமாகச் செயல் படுவது, நமக்கு வெற்றியைத் தேடித்தரும்.

ஒரு ராஜா தனது அரண்மனைக்கு ஒரு யானையைக் கொண்டு வருகிறார். அந்த யானையை ஒருபோதும் பார்த்திராத சில குருடர்களை அழைத்து வந்து, யானையைத் தொட்டுப் பார்த்து அது எப்படி இருக்கும் என்று விவரிக்கச் சொல்கிறார். ஒரு குருடர் யானையின் காலைத் தொட்டு, ‘‘யானை ஒரு தூண் போல இருக்கிறது” என்கிறார்.மற்றொருவர் அதன் வாலைத் தொட்டு, ‘‘யானை ஒரு கயிறு போல இருக்கிறது” என்கிறார்.இன்னொருவர் அதன் தும்பிக்கையைத் தொட்டு, ‘‘யானை ஒரு பாம்பு போல இருக்கிறது” என்கிறார்.

மற்றொருவர் அதன் காதைத் தொட்டு, ‘‘யானை ஒரு முறம் போல இருக்கிறது” என்கிறார்.இன்னொருவர் அதன் உடலைத் தொட்டு, ‘‘யானை ஒரு சுவரைப் போல இருக்கிறது” என்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தொட்ட பாகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, யானை இப்படித்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பி விவாதிக்கிறார்கள். முழு யானையையும் பார்க்க முடியாததால், அவர்களின் பார்வை குறுகியதாக இருந்தது.நாம் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, பெரும்பாலும் நமது தனிப்பட்ட அனுபவங்கள், நம்பிக்கைகள், மற்றும் பயங்களின் அடிப்படையில் மட்டுமே சிந்திப்போம்.

ஒரு பிரச்னையின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு, அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்து, முழுப் படத்தையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இதனால், தவறான முடிவுகளுக்கு வந்து, தேவையற்ற கவலைகளை வளர்த்துக் கொள்கிறோம். முழுமையான பார்வையைப் பெறாமல், ஒரு விஷயத்தைப் பற்றியே ஆழமாகச் சிந்திப்பது, நம்மைத் தவறான திசைக்கு இட்டுச் செல்லும்.

நாம் ஒரு விஷயத்தை ‘இருப்பது போல்’ பார்க்காமல், நமது சிந்தனையின் வடிகட்டி வழியாகப் பார்க்கிறோம். இதுவே நம் மன அமைதியைக் குலைக்கிறது. நாம் எண்ணங்கள் வரும் பொழுது ‘சிந்தனையின் இயக்கத்தை’ (Movement of Thought) வெறும் பார்வையாளராகக் கவனிக்க வேண்டும், அதைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முயற்சிக்கக் கூடாது. சிந்தனையை / எண்ணங்களை வெறுமனே கவனிப்பதன் மூலம், அதன் பிடியிலிருந்து விடுபடலாம்.

ரம்யா வாசுதேவன்