?ஜாதகத்தை வைத்து முற்பிறவி, அடுத்த பிறவி என்று கணிக்க முடியுமா? இது ஜோதிடத்தில் சாத்தியமா?
- வண்ணை கணேசன், சென்னை.
ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் என்பது பூர்வ ஜென்ம கர்மா எப்படி உள்ளது என்பதை மட்டும்தான் சொல்லும். அதாவது பாவ புண்ணியத்தின் அளவினை மட்டும்தான் அறிந்துகொள்ள முடியும். இதைத்தான் ‘பதவீ பூர்வ புண்யானாம்’ என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனை விடுத்து முற்பிறவியில் இந்த ஜாதகர் இப்படி பிறந்தார், இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கிறார், அடுத்த பிறவியில் இப்படிப் பிறப்பார், ராஜபோக சுகத்தினை அனுபவிப்பார் என்று சொல்வதெல்லாம் மிகமிக அரிய விஷயமாகும்.ஜோதிடம் என்பது வானவியல் சார்ந்த அறிவியலே. உண்மையான ஜோதிடத்தில் இதுபோன்ற கருத்துக்களுக்கு இடமில்லை. இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
முதலில் அடிப்படையான ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். ஒருவன் மனிதனாகப் பிறவி எடுத்திருக்கிறான் என்று சொன்னாலே அவன் முற்பிறவியில் பாவத்தைவிட அதிகமாக புண்ணியம் செய்திருக்கிறான் என்றுதான் பொருள். இந்த உலகத்தில் லட்சோபலட்சம் உயிரினங்கள் இருக்கும்போது, அத்தனை பிறவிகளையும் தாண்டிதான் மனிதப்பிறவி என்பதை அடைந்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
இதைத்தான் ஔவையார், அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார். கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியில் புண்ணிய கர்மாக்களை அதிகமாகச் செய்து மறுபிறவி இன்றி மோட்சம் பெறுவதற்கான வழியினைத் தேட வேண்டும்.
?அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள் எத்தனை காலம் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும்?
- பி.கனகராஜ், மதுரை.
ஆயுட்காலம் என்பது முடிவடைவதற்கு முன்னதாக ஒரு விபத்தின் மூலமாகவோ கொலை அல்லது தற்கொலையின் மூலமாகவோ உயிர் இழந்தவர்களை அகால மரணம் அடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களுடைய ஆன்மா சாந்தி அடைவதற்கும், பித்ருலோகம் சென்றடைவதற்கும் நம்முடைய சாஸ்திரத்தின்படி நாராயணபலி முதலான கர்மாக்கள் உண்டு. இந்த நாராயணபலி முதலான கர்மாவினை இறந்த உடன் செய்ய இயலாது. இறந்தவரின் அஸ்தியை தனியாக எடுத்து வைத்து ஆறுமாத காலம் கழித்து தர்ப்பசம்ஸ்காரம் செய்து அதன்பின் நாராயணபலி உள்ளிட்ட கர்மாவினைச் செய்து கர்மகாரியத்தைச் செய்து முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மாவானது பித்ருலோகத்தைச் சென்றடையும்.
ஆக, அகால மரணம் அடைந்தோரின் ஆவியானது குறைந்த பட்சமாக ஆறுமாத காலத்திற்கு இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆறுமாதம் ஆன பின்பு மேலே குறிப்பிட்ட நாராயணபலி உள்ளிட்ட கர்மாக்களை செய்யாவிடில், தொடர்ந்து அந்த ஆன்மாவானது போக்கிடம் இன்றி இங்கேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். இதனால் அவரது பரம்பரை என்பது பாதிப்பிற்கு உள்ளாகிறது.
?சகடை யோகம் பற்றி விளக்கவும்?
- என்.ஜெயக்குமரன், திருநெல்வேலி.
ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து 6, 8, 12ல் சந்திரன் நின்றால் அதனை சகடை யோகம் என்று சொல்வார்கள். சகடை என்றால் சக்கரம் என்று பொருள். இதுபோன்ற அமைப்பினை உடைய ஜாதகர் வாழ்வினில் சக்கரம் போல் ஓய்வின்றி சுழன்றுகொண்டே இருப்பார். ஒரு சிலருக்கு இந்த அமைப்பு நிம்மதியற்ற வாழ்வினையும் குரு சந்திரன் வீட்டில் உச்சம் பெற்று சந்திரன் தனுசு ராசியில் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்தால், இதே அமைப்பு திடீர் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். பொதுவாக சகடை யோகம் என்பதை ஜோதிடர்கள் தோஷமாகவே பார்க்கிறார்கள். மற்ற பாவகங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் புதன் மற்றும் சுக்ரனின் அமர்வு நிலை சாதகமாக இருந்தால், ஜாதகர் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருந்தாலும் அதற்குரிய பலனையும் சம்பாத்யத்தையும் அடைவார் என்றே பலன் சொல்ல வேண்டும்.
?மாடிப்படிக்கு என்று தனியாக வாஸ்து உள்ளதா?
- மாலதி ரகுநாதன், சென்னை.
இதனை வாஸ்து என்று சொல்வதைவிட, மாடிப்படி அமைய வேண்டிய இடம் மற்றும் அதன் அமைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுவான விதி என்று பார்க்கும்போது, மாடிப்படிகள் தெற்கு நோக்கி ஏறுவது போல் அமைக்கக் கூடாது. நம்முடைய இந்திய தேசத்து புவியியல் அமைப்பின்படி, பெரும்பாலும் வடக்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவது போல மாடிப்படிகளை அமைக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், கிழக்கு நோக்கி ஏறுவது போல அமைக்கலாம். அதேபோல, வீட்டின் வடகிழக்கு மூலையில் பாரம் ஏறக்கூடாது என்பதால், அந்த மூலையிலும் மாடிப்படிகளை அமைப்பது கூடாது. இவை அனைத்தும் பொதுவான விதிகளே. அந்தந்த மனையின் அமைப்பு மற்றும் வீட்டின் அளவுகளுக்கு ஏற்றவாறு இந்த விதிகளில் மாற்றம் என்பது உண்டாகும்.
?கெட்ட கனவுகள் வராமலிருக்க சொல்ல வேண்டிய இறை மந்திரம் என்ன?
- அயன்புரம். சத்தியநாராயணன்.
ஆஞ்சநேயரைத் தியானம் செய்து, ‘அஞ்சிலே புத்திர் பலம்’ எனும் சுலோகங்களில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் படுத்தால், கெட்ட கனவுகள் வராது. அப்பாடல்கள்:
``அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்’’
``புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்’’
``அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்ஸம்
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே’’
?சுண்டுவிரலின் கீழ் மச்சம் போன்ற அடையாளம் இருந்தால் அது எதைக் குறிக்கிறது?
- அமுதவள்ளி, திருச்சி.
வலது கையா, இடது கையா என்பதைப் பொறுத்து பலன் மாறுபடும். ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இருந்தால் நற்பலன்கள் நடக்கும். மாறி இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான பலன்கள் நடக்கும். பொதுவாக சுண்டுவிரல் அல்லது அதனை ஒட்டிய கீழ்ப்பகுதியில் மச்சம் இருந்தால் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்கள் என்பதாக பலன் சொல்லப்படுகிறது. கல்வி அறிவு நிரம்பியவர்களாகவும் மற்றவர்களால் அறிவாளிகள் என்று போற்றப்படுபவர்களாகவும் இருப்பார்கள். நல்லறிவு காரணமாக அவர்களின் தோற்றம் ஒருவித கம்பீரத்தன்மையுடன் இருக்கும். கற்றோர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பார்கள். தொழில்முறையில் மக்கள் தொடர்பிலும் மார்க்கெட்டிங் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். நவகிரஹங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், வித்யாகாரகன் ஆகிய புதனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.



