ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 126 (பகவத்கீதை உரை)
``ப்ரத்னாத்யமானஸ்து யோகீ ஸம்சுத்த கில்பிஷ
அநேக ஜன்ம ஸம்ஸித்தஸ்ததோ யா தி பராம் கதிம்’’ (6:45)
‘‘இடைவிடாத, தொடர்ந்த முயற்சிகளால் ஒரு யோகி பாபங்களிலிருந்து மொத்தமாக விடுபட்டு விடுகிறான்; புனிதவானாக மாறுகிறான். ஆனால் இந்த மாற்றம் பல பிறவிகளில் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்தான். இந்தப் பக்குவத்தை அவன் அடைந்துவிட்டானானால் எளிதாக பரகதியையும் அவனால் அடைய முடியும்’’ எந்த ஒரு விஷயத்திலும் சாதனை என்பது என்ன? அது தொடர்ந்த முயற்சிகளின் மற்றும் பயிற்சிகளின் பலன்தானே? மைதானத்தில் நாள் தவறாமல் பயிற்சியில் ஈடுபட்டுவரும் விளையாட்டுவீரன், போட்டிக் களத்தில் வெற்றிவாகை சூடுவதும் அதனால் முடியும்தானே? ஆனால் இதுபோன்ற சாதனைகளுக்கு ஒரு எல்லை இருக்கிறது. அதாவது வயோதிகத்தை எட்டும்வரைதான் உடலின் சக்தி நிலைத்திருக்கும். எந்த காரணத்தாலாவது உடல் ஊனம் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட ஆடுகள சாதனைக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
ஆனால், மனம் சார்ந்த, அறிவு சார்ந்த பயிற்சிகளுக்கு பங்கம் ஏற்படவே முடியாது. நடுநடுவே ஏற்படக்கூடிய தடைகளால் சாதனைபுரியும் நாட்கள் நீடிக்கலாமே தவிர, முடியாது என்பதே இல்லை. ஒரு யோகியைப் பொறுத்தவரை அந்த நீட்டிப்பு, அடுத்தடுத்த ஜன்மங்கள் என்கிறார் கிருஷ்ணன். ஒரு சாதகனுடைய வாழ்க்கையில் இதுபோன்ற இடையூறுகளை உண்டாக்குவது அவனுடைய அகங்காரமேதான்.
சுய விளம்பரம், சுய பாராட்டு என்று வெளிப்படையாக இல்லாமல், தன்னை மிகவும் எளிமையானவனாகக் காண்பித்துக் கொள்ள விரும்புவதும், அத்தகையதே. சற்றே பிரபலமான ஒருவன், ஏற்கெனவே பிரபலமாகியிருக்கும் நபரிடம், ‘‘நானெல்லாம் உங்கள் கால் தூசிக்கு சமம். உங்களுடைய உயரத்தை அண்ணாந்து பார்க்க மட்டுமே செய்யும் குள்ளச் சாமானியன் நான்’’ என்று தன்னை மிகவும் தாழ்த்திக் கொள் கிறான் என்றால், அவனிடம் பணிவு மட்டும் இல்லை; அந்தப் பிரமுகர் தன்னைப் புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது என்று அர்த்தம்.
‘‘சார், என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? நான் வெறும் குப்பை. காற்றடித்தது, கோபுரத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டேன். உங்களைப்போல வருமா?’’ என்று பதிலுக்குச் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு! இதனை ‘அபவித்திர அகங்காரம்’ என்று வர்ணிப்பார்கள். இத்தகைய ‘அகங்காரம்’, வளர்ச்சிக்கு, சாதனை புரிவதற்கு, ஒரு தடைக்கல். தான் சொல்லித்தான் அந்தப் பிரமுகர் இத்தனை புகழோடு இருக்கிறார் என்பதை அவருக்கே சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்குத் தன் நிலை தெரியாதா என்ன? ஆகவே பரஸ்பரம் முதுகு சொறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இது புகழ்ச்சிக்கு அடிமையாவதால்தானே?
ஆமாம், இது ‘நான்’லிருந்து விலக முடியாத அவஸ்தை. இப்படித் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவரால், எப்படி யோகப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட முடியும்? ஆன்மிகத்தில் அனுசரிக்கப்படும் நவவிதமாக பக்தி செலுத்துதலில் இறுதியான ‘சரணாகதி’ தானே உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது? ஸ்ரவணம் (கேட்டல்), கீர்த்தனம் (இசைத்தல்), ஸ்மரணம் (நினைத்தல்), பாதசேவனம் (திருவடி தொழுதல்), அர்ச்சனம் (வழிபாடு), வந்தனம் (வணங்குதல்), தாஸ்யம் (அடிமை செய்தல்), ஸக்யம் (நட்பு கொள்ளுதல்) ஆகிய எட்டு வகை பக்திகளைவிட மிக உயர்ந்ததாகக் கருதப்படுவது, ஒன்பதாவதான ‘ஆத்ம நிவேதனம்’ என்ற பூரண சரணாகதிதான்.
அதாவது ‘நான் நானல்ல, எல்லாம் அவனே’ என்று பாவிக்கும் ஆன்ம உணர்வு. முந்தைய எட்டுவகை பக்தி முறைகளிலும் ‘நான்’ ஒளிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சரணாகதத்தில் அந்தச் சுயநலம் இல்லை. கல்வி கற்பவன் அறிஞனாகக் கருதப்படுகிறான்; செல்வம் சேகரிப்பவன் செல்வந்தனாக அறியப்படுகிறான். ஆனால் அறிஞன் மற்றும் செல்வந்தன் நிலைகளுக்கு வரம்பு எது, ஏது? எவ்வளவுதான் கற்றாலும் அது கைம்மண்ணளவுதானே! எவ்வளவுதான் செல்வம் சேர்த்தாலும், அதுவும் கைப்பிடி அளவுதானே!
உச்சபட்சநிலையை அடையத்தான் எத்தனை காலம் கல்வி கற்க வேண்டியிருக்கிறது; சொத்துகளைச் சேகரிக்க வேண்டியிருக்கிறது! அதிக பட்சமாக மரண காலம்வரைதானே இந்த முயற்சிகளுக்கும் பலன் கிட்டும்? அதற்குப் பிறகு? அடுத்த ஜன்மத்தில், விட்ட இடத்திலிருந்து கல்வி கற்பதோ, செல்வம் சேகரிப்பதோ இயலுமா? ஆனால், ஞானத்தைத் தேடும் பயிற்சியைத் தொடரமுடியும் என்பதுதான் கிருஷ்ணனின் அறிவுரை.
தன்னைப் பண்படுத்திக்கொள்ளும் ஒரு யோகியாலேயே இந்த ஜன்மாந்திர தொடர்பை நீடித்துக் கொள்ள முடியும். அதுவும்கூட ஒரு ‘சாசுரேஷனு’க்கு வந்துவிடும்போது, பிறவி வழி அடைபட்டு, பரகதியை அடைந்து ‘வாழ்க்கை’யை நிறைவு செய்து கொள்ள முடியும். இத்தகைய யோகியிடம் அகங்காரம் இருக்கவே இருக்காது. மனித இயல்பாகவே அது ஒவ்வொருவருக்குள்ளும் தோன்றக்கூடியதுதான் என்றாலும், நீடித்த பயிற்சியால், ஏதாவது ஒரு பிறவியில் அது முற்றிலும் நீங்கிவிட்ட தன்மை உருவாகும். அப்போது ஒருவன் யோகியாகிறான்.
கல்விச் செருக்கும், செல்வச்செருக்கும் ஒருவனை தலை நிமிர்த்தவே செய்யும். அது தன் சாதனைகளைத் தானே பாராட்டிக் கொள்ளும் சுய பெருமை. அதே சமயம், அடுத்தவரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் கீழ்மையும்கூட! கற்ற கல்வியும், சேர்த்த செல்வமும் நிமிர்த்திவிடும் தலையில் கனம் கூடுவதும் தன்னிச்சையாக ஏற்பட்டுவிடுவதுதான். இத்தனைக்கும் கல்வியின் அம்சங்களான படித்தல், எழுதுதல் போன்ற ஆரம்ப பயிற்சிகளில் ஈடுப்படும்போது தலைகுனிகிறது - எப்போதும் பணிவாகவே இரு என்று உணர்த்துவதைப் போல. ஆனால் படித்ததன் பலன் பட்டமாகவோ வேறு சிறப்பாகவோ தலையில் அணிவிக்கப்படும்போது பணிவு பறந்து விடுகிறது; சுயம் கனமாகத் தங்கிவிடுகிறது!
மனசு சுத்தமாகிவிட்டது; அதனால் எண்ணம், சொல், செயல் எல்லாமே சுத்தமானதாக வெளிப்படுகின்றன என்பதற்கெல்லாம் ஏது ஆதாரம்? தேடிப் பார்த்தால் மனசுக்குள் ‘நான்’ கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும்! அதை விரட்டுவது நீடித்த பயிற்சியால் மட்டுமே முடியும். யோகத்தின் எல்லா அம்சங்களுமே இந்த ‘நான்’ஐ விரட்டி அடிப்பதாகவே இருக்கின்றன.
இந்த அகங்காரத்தைப் போக்க, அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவே புத்தர் பிட்சை எடுத்து புசித்தார் என்று சொல்வார்கள்.
ஒரு மாமன்னன், கண் வீச்சிலேயே நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் படைத்தவன், எதுவுமே வேண்டாம் என்று பிச்சைக்காரனாக மாறிவிட்ட அந்த அதிசயம், அவர் தன் முந்தைய பிறவிகளில் ஈடுபட்ட ஞானத் தேடலின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். அது, இந்தப் பிறவியோடு நிறைவடைந்துவிடுகிற தேடல்! அவர் பிட்சை கோரிய வீடுகளில், ‘நம்மை ஆளும் மகராஜனுக்கு நாமே பிச்சையிடுவதா!’ என்ற திகைப்புத் துன்பத்தில், மக்கள் தவியாய்த் தவித்தார்கள். புத்தரின் தந்தை மற்றும் உறவினருக்கோ, அவருடைய செய்கை தங்களைக் கேவலப்படுத்துவதாகத் தோன்றியது. ‘என்ன, உன் பையன் பிச்சை எடுக்கிறான்?’ என்று யாராவது கேட்பார்களானால், அது அந்த தந்தைக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும்!
ஆனால் புத்தர் எதையும், யாரையும் பொருட்படுத்தவில்லை. அவருக்கு தனக்குள்ளிருக்கும் ‘நான்’ஐத் துரத்த வேண்டும் என்ற அவஸ்தை! அவரைப் பொறுத்தவரை இதில் வெற்றிபெற்றுவிட்டால் இதுதான் சாதனை, பரிபூரண சாதனை. வீட்டை, உறவை, செல்வத்தை, அதிகாரத்தை, படாடோபத்தை முற்றிலுமாக உதறிவிட்டு வெளியே சென்ற புத்தருக்கு நிறைவேற்ற வேண்டிய இன்னொரு கடமை இருந்தது.
அது, அவருடைய மகன் ராகுலனைப் பற்றியது. அனைத்தையும் துறந்துவிட்டு, பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தன் இல்லம் திரும்பினார். தான் வெளியே அனுபவித்து அறிந்த ‘நல்லறத்’தை, இங்கே இல்லறத்திலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல; மகனுடைய வாழ்க்கையிலும் பூரணத்தை அருள்வதற்காகத்தான்! திரும்பிய அவரை எல்லோரும் கேலி பேசினார்கள். ‘பன்னிரண்டு வருடங்கள் தாக்குப் பிடித்ததேஅதிகம்!’ என்ற ஏளன நகைப்பு! ஒரு மனைவியாக யசோதரையின் கோபமும், ஏமாற்றமும், அவமானமும் சுடுசொற்களாக வெடித்துச் சிதறின. அதோடு வந்தவர் திரும்பப் போக மாட்டார் என்ற தைரிய எதிர்பார்ப்பில், ‘எங்கே வந்தாராம் உன் தந்தையார்? என்ன வேண்டுமாம்?’ என்றெல்லாம் மகனிடம் மறைமுகமாக கேலி பேசினாள்.
‘‘உனக்கு என்று விசேடமாக என்ன கொண்டு வந்திருக்கிறாராம்?’’ என்று அந்த கேலியை அவள் கடுமையாக்கினாள்.சாந்தம் மாறா முகத்தினராக புத்தர் பதில் அளித்தார். ‘‘நான் தரப்போவது பொன்னோ, பொருளோ, அரச வாரிசு அங்கீகாரமோ அல்ல, இதோ என் பிட்சா பாத்திரம். இதையே இவனுக்குத் தருகிறேன்’’ என்று மகன் ராகுலனிடம் பாத்திரத்தை நீட்டினார். யசோதரை வியந்து நோக்க, சற்றும் சலனமில்லாதவனாக ராகுலன், அந்தப் பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டான்.
‘‘இதற்காகவா மீண்டு வந்தீர்கள்? உங்கள் ஆன்ம பரிசோதனையை உங்களோடேயே வைத்துக்கொள்ளக் கூடாதா? என் மகனையும் ஏன் பலியாக்குகிறீர்கள்?’’ என்று தாய்மை ஆதங்கத்துடன் அரற்றினா யசோதரை. ஆனால், அதற்குள் தந்தையிடமிருந்து பிட்சா பாத்திரத்தைப் பெற்றுக்கொண்ட ராகுலன், அவர் பக்கம் போய் நின்று கொண்டதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘‘நான் இந்த நோக்கத்துக்காகத்தான் வந்தேன்’’ புத்தர் அமைதியாகச் சொன்னார். எனக்குத் தெரியும். என் மகனாகப்பட்ட இவனும், தன் முந்தைய பிறவிகளில் ஞானத் தேடலில் ஈடுபட்டவன்தான்.
அப்போது என்னுடனேயே பயணித்திருக்கிறான்! இப்போதும் என்னுடனேயே பயணத்தைத் தொடரவிருக்கிறான்’’ யசோதரை, ஒரு சாதாரணப் பெண்மணியாக கணவனை கிறுக்கனோ என்று சந்தேகித்தாள். ஆனால் இத்தனை வருடங்கள் தங்களை விட்டுப் பிரிந்திருந்தவரை, ‘இரக்கமற்றவர், குடும்ப நேயம் இல்லாதவர்’ என்றெல்லாம் மகனிடம் அதுவரை விமரிசித்திருந்தது போக, இப்போது இவனும் அவருடன் சேர்ந்து கொண்டானே! என் விமரிசனங்களும், ஏமாற்றப்பட்ட விரக்தி அலைகளும் இவனைக் கொஞ்சமும் அசைக்கவில்லையா? பிறவியிலேயே பற்றற்றவனாக இவன் ஆகிவிட்டானா? என்ன கொடுமை இது!’’ வெந்து பொருமினாள்.
‘‘அம்மா’’ என்று அழைத்த மகனை ஆவலுடன் ஏறிட்டு நோக்கினாள் யசோதரை. ‘அதுதானே, என்னதான் தந்தையார் வற்புறுத்துகிறார் என்றாலும், தொப்புள் கொடி உறவு அத்தனை சுலபமாகக் காய்ந்து விடுமா என்ன?ஆனால். ‘‘நான் இவருடன் செல்கிறேன்’’ என்று கூறிவிட்டு புத்தருக்கு முன்னால் வீட்டுப் படியிறங்கினான் ராகுலன். புத்த பிட்சுகளோடு ஒருவனானான். புத்தருக்கும், ராகுலனுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும், ஞானம் பெறுவது என்பது, முந்தைய ஜன்மங்களின் தேடல்கணக்குப்படி மூத்தவரின் வயதை எட்டாமலேயே இளையவர் ஞானத்தை அடைய முடியும் என்பதைத்தான் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
இதுதான் ஜன்மாந்திர பந்தம். யோகப் பயிற்சியுடன் கொண்டிருக்கும் ‘உறவை’ விடமுடியாத பந்தம். இது ஒவ்வொருவருக்குமே உண்டானதுதான். புரிந்துகொள்ளதான் மனப்பக்குவம் தேவைப்படுகிறது. ஆனால், அந்தப் பக்குவமும் எந்த வயதிலும் ஏற்படக்கூடியது என்பதும் உண்மை.இருபத்தைந்து வயதிலும் முனைவர் பட்டம் போன்ற கல்வித் தேர்ச்சி பெற முடியும்; எழுபது வயதிலும் அதே தேர்ச்சியைப் பெற இயலும் என்பதைப் போலத்தான் இது. சாதனைகளுக்கு வயது ஒரு பொருட்டே அல்ல; பயிற்சிதான் முக்கியம். இதைத்தான் ‘எல்லா வகையிலும் சுத்தமான ஒருவன், தன் பயிற்சியால், சாதனையால் இறைவனை அடைகிறான்’’ என்று அர்ஜுனனிடம் வலியுறுத்துகிறார் கிருஷ்ணன்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்



