Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூன்று கிணறுகள்

ஒருமுறை ஒரு மனிதன் தோட்டம் போட்டான். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஒரு கிணறு இருந்தால் நல்லதென்று நினைத்தான். அதற்காக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கிணறுவெட்டத் தொடங்கினான்.மிக முயன்று இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்று எதுவும் தென்படவில்லை. அதை அப்படியே நிறுத்தி விட்டான். இரண்டாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்தில்முப்பது முழம் ஆழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணீர் ஊற்றுத் தோன்றவில்லை. ஆயாசத்துடன் அந்த இடத்தில் வெட்டுவதையும் நிறுத்திவிட்டான்.மூன்றாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். மிகவும் பாடுபட்டு அந்த இடத்தில் ஐம்பது முழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணீர் வரவில்லை. அவனுக்கு அலுத்துப்போய்விட்டது. கிணறு தோண்டும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.

ஒருநாள், அனுபவசாலியான ஒரு பெரியவரிடம் தன் முயற்சியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். மூன்று முறை கிணறு வெட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லையென்றும், பூமியில் தண்ணீரே அற்றுப்போய் விட்டதென்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.பெரியவர் அவனை நோக்கினார். ‘‘தம்பி, மூன்று இடத்திலும் நீ வெட்டிய மொத்த ஆழம் எவ்வளவு இருக்கும்?’’ என்று கேட்டார்.‘‘இந்த நூறு முழத்தையும் ஒரே இடத்தில் தோண்டியிருந்தால், எப்படியும் தண்ணீர் தோன்றியிருக்குமே!’’ என்றார் அந்தப் பெரிய மனிதர்.அந்த மனிதன் அசட்டு விழி விழித்தான்.

‘‘தம்பி, நீ மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் தவறில்லை. ஆனால், ஒரே இடத்தில் கருத்தைச் செலுத்தி நீ சலிப்பில்லாமல் தோண்டியிருந்தாயானால், நூறு முழம் ஆழம் ஆவதற்கு முன்னாலேயே கூட நீர் கிடைத்திருக்கும். எப்போதும் விடா நம்பிக்கையுடன் ஒருமுகப்பட்ட முயற்சியிருந்தால் எடுத்த செயல் வெற்றி பெறும்’’ என்றார் அந்தப் பெரியவர்.கடவுளை அடைவதற்காக இன்று ஒரு குரு, நாளை மற்றொரு சாமியார் என்று மாறுவதில் எந்தப் பயனும் இல்லை. அதேபோல நன்றாக ஒரு தெய்வீகப் புத்தகத்தை படித்துவிட்டால் போதும். அதன் வழியே சரியான புத்தகங்கள் நம்மை வந்தடையும். உறுதியான உள்ளத்துடனும் நம்பிக்கையுடன், தொழுது வந்தால் உண்மையை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.