Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இந்த வார விசேஷங்கள்

21.3.2026 - சனி

சௌபாக்கிய கௌரி விரதம்

யுகாதி பண்டிகைக்குப் பின் வருகின்ற வளர்பிறை திருதியை அன்று, இதைக் கொண்டாடுவார்கள். அம்பாளை கொண்டாடுகின்ற இந்த பண்டிகையை, மிக எளிமையான பூஜையின் மூலம் நாம் கொண்டாடலாம். கலசத்தை ஆவாகனம் செய்து, அம்பாளை பூஜித்துக் கொண்டாடுவதன் மூலமாக பற்பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். திருமணமான பெண்கள் வாழ்வு சிறக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவும் இந்த விரதத்தைக் கொண்டாடுவார்கள். இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகளெல்லாம் தடை நீங்கி நடக்கும். இது வீட்டிலே கொண்டாட முடியாதவர்கள் இந்த நாளில் ஆலயம் சென்று பெருமாள் ஆலயத்தில் தாயாருக்கும், சிவாலயமாக இருந்தால் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்துவரலாம். இன்றைய மற்றொரு சிறப்பு, மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி பங்குனி உற்சவத்தில் திருக்கல்யாண வைபவம்!

22.3.2026 - ஞாயிறு

தாராதேவி ஜெயந்தி

இன்று நள்ளிரவு தாராதேவி ஜெயந்தி. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர். அதில் இரண்டாவது தேவி, தாராதேவி. தாராதேவி தாய்மையின் வடிவமாகப் போற்றப்படுகிறாள். தாராதேவியை வணங்கினால், ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கிவிடும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம் தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும்.

23.3.2026 - திங்கள்

ஸ்ரீ லட்சுமி பஞ்சமி

பங்குனி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள் சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும் இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன. ஒருவருக்கு திருமகள் அருள் இருக்கின்ற பொழுது அவனுக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும். அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவன் இருளில் தள்ளப்படுவான். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளிவில்லாமல் இருப்பான். தொட்ட காரியங்கள் துலங்காது. எனவே திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்தான் வியாபாரத் தலங்களில் லட்சுமி படம் லட்சுமி எந்திரங்களும் வைத்திருக்கிறார்கள். நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து திருமகளை வரவேற்பதற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருமகளை விரதமிருந்து துதிப்பதுதான் இந்த லட்சுமி பஞ்சமியின் நோக்கம். பூஜை அன்று காலையில் எழுந்து, வீட்டைத் தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட்டு, பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும்.

“ஓம் ஸ்ரீ மகாலட்சுமி ச வித்மஹே

விஷ்ணுபத்ந்யை ச தீமஹி

தந்நோ லட்சுமி, ப்ரசோதயாத்”

- என்ற காயத்திரி மந்திரத்தை தவறில்லாமல் உச்சரித்து, ‘‘இந்த கலசத்தில், மகாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்’’ என்று மனதார பிரார்த்தனைச் செய்து, தூப, தீப, நைவேத்தியங்களைக் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

24.3.2026 - செவ்வாய்

சஷ்டி, நேசநாயனார் குருபூஜை

இன்று சஷ்டி. முருகப் பெருமானுக்கு உகந்த, விரத நாள். அதிகாலையில் எழுந்து நீராடி, கந்தசஷ்டி கவசம் பாடி, விரதமிருந்து, முருகனை வழிபடுவர். இந்த நாளில் ஒருவேளை உணவோ அல்லது பால் பழமோ உட்கொள்வது வழக்கம். இன்று பங்குனி ரோகிணி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிவனேச நாயனார் ஒருவர். காளர் மரபில் அவதரித்தவர். அறுவையார் குலத்தில் (சாலியர்) பிறந்த இவர் சிவனடியார்கள் மீது நேசம் மிக்கவர் என்பதால், இவருக்கு சிவநேசர் என்கின்ற திருநாமம். நெசவுத் தொழிலை செய்து கிடைத்த பணத்தை சிவனடியார்களுக்குச் செலவிட்டு வந்தார். தானே அவர்களுக்கு தேவையான ஆடைகளையும் நெய்து கொடுத்தார். தாம் செய்கின்ற தொழிலின் மூலமாகவே தம்முடைய இறை பக்தியையும் இறையடியார்கள் நேசத்தையும் காட்டமுடியும் என்பதை உறுதியோடு கடைபிடித்தவர் சிவநேசநாயனார். இந்த உள்ள உறுதியால் சிவனருள் பெற்று சிவ ஜோதியில் கலந்தார் அவருடைய குரு பூஜை, இன்று.

25.3.2026 - புதன்

சந்தான சப்தமி

திதிகளில் ஏழாவது திதி புனிதமானது. சப்தமி என்று பெயர். சூரிய வழிபாட்டிற்கு சிறப்பானது. பங்குனியில் வளர்பிறை சப்தமி திதி சந்தான சப்தமி என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் சூரிய பகவானையும், மகாலட்சுமியையும் வணங்கினால், சந்தான விருத்தி உண்டாகும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கண் நோய்கள் தீரும்.

25.3.2026 - புதன்

திருக்குறுங்குடி

மகாகும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பி திருக்கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் (மஹாகும்பாபிஷேகம்) 2026 - ஆண்டு, மார்ச் 25 - ஆம் தேதி இன்று காலை 9.20க்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. 114 வருடங்களுக்கு பிறகு ராயகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது சிறப்பு. திருக்குறுங்குடி திவ்ய தேசம், திருநெல்வேலி மாவட்டத்தில் வானமாலை திவ்ய தேசத்திற்கு அருகாமையில் உள்ளது. வாமன க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படும் இது நம்பியாறு (நம்பி நதி) கரையிலும், மஹேந்திர கிரி மலையின் அடிவாரத் திலும் உள்ளது. அழகிய நம்பி ராயர் என்ற திருநாமத்தோடு 5 விதமான வடிவங்களில் காட்சியளிக்கிறார். பிரதான மூர்த்தி (பெருமாள்) நின்ற நம்பி ஆவார். அவரது இடதுபுறத்தில், மேலும் 2 சந்நதிகள் உள்ளன.

இங்கு கிடந்த நம்பி (உறங்கும் நம்பி) மற்றும் இருந்த நம்பி ஆகியோர் காணப் படுகின்றனர். பிரதான கோயிலுக்கு வெளியே, ஒரு தனி கோயிலில், திருப்பாற்கடல் நம்பி (க்ஷீராப்திநாதன் - வாமன நம்பி) இருக்கிறார். மஹேந்திர கிரியின் (மஹேந்திர மலை) உச்சியில் மலை மேல் நம்பிக்கு தனி சந்நதி உள்ளது. சந்நதிக்கு அருகில் அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளது. மூலவர் எம்பெருமான் வர்ண கலபத்தில் (வண்ண வடிவம்) காணப்படுகிறார். இக்கோயிலில் சிவனுக்கும் இடம் உண்டு. திருமங்கை ஆழ்வார் அவரை ‘‘பக்கம் நின்றார்’’ (நின்ற நம்பியின் பக்கத்தில் நின்றவர்) என்று பாடுகிறார். நம்மாழ்வார் தனது பாசுரங்களில் நம்பி எம்பெருமானின் தெய்வீகத் தோற்றத்தை அனுபவித்தார். திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் நம்பி எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கை ஆழ்வார் முத்தி பெற்ற தலம் இது

26.3.2026 - வியாழன்

கணநாத நாயனார் குருபூஜை

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் கணநாத நாயனார். அந்தணர் குலத்தில் பிறந்தவர். சீர்காழியில் ஆளுடைப் பிள்ளையார் அவதரித்த திருஞான சம்பந்தரிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர். சிவனடியார்களிடம் உருகி உருகி அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவார். எப்போதும் வாயில் சிவநாமம் ஜெபித்துக் கொண்டு சிவ சிந்தனையோடு இருப்பார். சீர்காழி தோணியப்பரிடம் அகலாத அன்பு கொண்டவர். இந்த அன்பின் காரணமாக நல்லதோர் சிவ வாழ்வு வாழ்ந்து சிவஜோதியில் கலந்தார்.

26.3.2026 - வியாழன்

அசோக அஷ்டமி

சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச் சோலையிலே சிறை வைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளைச் சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம். அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன.

அப்பொழுது சீதை, அசோக மரங்களை நோக்கி, “என்ன வரம் வேண்டும்?” என கேட்டார். “அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது. எனக்கேட்க, சீதாதேவியும், ``மருதாணிமரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம் விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது’’ என்று வரமளித்தாள். ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அறைத்து கைகளில் பூசிக் கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும். பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம்.மூன்றுமுறை வலம் வரலாம்.