இவ்விதழ் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக, ஆடி மாத திருவிழாக்கள் திருமால் ஆலயங்களில் நடைபெறுவதை கண்முன் நிறுத்தி, இதயம் நிறைய செய்தது. மேலும், தெளிவு பெறுவோம் பகுதி, பல வினாக்களுக்கு விடை அளித்து தீர்வு கிடைக்க துணை நிற்பது இதழுக்கு ஈடு சேர்ப்பதாகும். மேலும், இதழில் A to Z வரை அனைத்து பக்க தகவல்கலும் படிக்க படிக்க சுவாரஸ்யத்தை கூட்டியது. அதே போல், பேரருள் பொழியும் பேழை வழிபாடு பற்றிய தொடர், ஆரம்பமே படு அமர்க்களமாக இருந்தது! பாராட்டுக்கள்.
- ராமகிருஷ்ணன், எரகுடி.
கோயில்கள் பற்றிய விபரம் மட்டும் அல்லாது ஆன்மிகம் தொடர்பான பல விளக்கங்களை அளிப்பதில் நமது இதழ் முதன்மையானது என்றால் மிகையில்லை. அந்த வகையில் இந்த இதழில் வெளியாகியுள்ள ‘அசுரர்களுக்கு ஏன் அமுதம் கிடைக்கவில்லை?’ என்ற கட்டுரை அரிய ஆன்மிக உண்மைகளை எடுத்துரைப்பதாக இருந்தது. படிக்கும் எங்களின் ஞான கண்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுவதாய் இருந்தது நன்றிகள்.
- சுந்தரராஜன், ஸ்ரீ ரங்கம்.
`அம்மன் கோயில் விசேஷங்களும் ஆடி மாதச் சிறப்பும்!’ என்பதை முத்துக்கள் முப்பதாக்கியதால், சீசனுக்கேற்ற ரீசன் மழையே பொழிந்து மனதைக் குளிர்வித்தது. சக்தி வழிபாட்டுக்கும் ஆடி மாதத்துக்கும் உள்ள தொடர்புகளை அணி சேர்த்து அழகுடன் தந்துள்ள தொகுப்பு என்பதால், ஆத்மா ராகம் இசைத்துக் கொண்டாடியது.
- என்.ஜானகிராமன், நெல்லை.
``உளச்சோர்வை அகற்றுங்கள்’’ என்னும் தலையங்கத்தைக் கண்டேன். தியானத்தை பற்றி, மக்களுக்கு தெளிவாக கூறியது அருமை. தியானத்தின் மீது ருசி கொள்ளுங்கள், அதன் நற்பலன்களை உடனே அறிந்துக் கொள்வீர்கள் என்றும் கூறிய தலையங்கம் அருமையோ அருமை. அதே போல், பல புரியாத விஷயங்களை புரியவைத்தது முத்துக்கள் முப்பது. அதாவது தாயும் நீரும் ஒரே தத்துவத்தின் இருவடிவங்கள் என்றுகூறும் போது, அடாடா... என நினைக்க செய்தது.
- வண்ணை கணேசன், சென்னை.
எப்போதும் சந்தோஷமாக வாழ எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற தேஜஸ்வி பதில், கவியரசர் கண்ணதாசனின் மயக்கமா? கலக்கமா? பாடலின் இடைவரிகளான ``உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’’ என்பதை நினைவூட்டியது.
- ஸ்ரீ காந்த், பிச்சாண்டார் கோயில் - திருச்சி.
``ஆடி பொறந்தாச்சு, ஆதிபராசக்தியின் அழகிய புகைப்படம் எங்கள் வீடு தேடி வந்தாச்சு’’ ஆடியில் பூஜிக்க, நீங்கள் வழங்கிய அம்மனின் வண்ணப்புகைப்படம் வெகு அற்புதம். மேலும், புரி ஜகந்நாதரின் ரத யாத்திரைக்காக, ``ஜகத்தைக் காக்கும் புரி ஜகந்நாதர்’’ என்னும் கட்டுரை வெளியாகின. அக்கட்டுரை, அழகுமிகு ஆலயத்தின் மகத்துவங்களை தொகுத்து வழங்கப்பட்டது, ஆனந்த பூரிப்பில் ஆழ்த்திவிட்டது. அது மட்டுமா. சண்முகவடிவு என்ற பக்தை, திருப்புகழ் பாடிய போது, கீழே உமிழ்ந்த தாம்பூலத்தை தன் ஆடையில் தாங்கிக்கொண்ட முருகப் பெருமானின் லீலைகளை விவரித்த பரசுராமனின் கட்டுரை மிக அற்புதம். நன்றியும் பாராட்டுக்களும்.
- சத்தியநாராயணன், சென்னை.
எங்கள் பூஜையறையில், நாங்கள் பூஜிக்க ஏதுவாக லேமினேஷன் செய்யப்பட்ட அம்மன் படத்தை வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- காசி யோக அக்ஷயா, கோவை.
ஆடி அம்மன்கள் தரிசனமும், முகப்பு அட்டையில் அழகிய அம்மன் படமும், இணைப்பாக வழங்கிய அம்மனின் வண்ணப்படமும், புரி ஜகந்நாதர் கோயில் பற்றிய தகவல்களும் பிரமாதமாக இருந்தது. அருள் தரும் ஆன்மிக பணித் தொடரட்டும்.
- எஸ்.சீனிவாசன், மேற்கு மாம்பலம் - சென்னை.
``பேரருள் பொழியும் பேழை வழிபாடு’’ என்னும் கட்டுரையை கண்டேன். ஏழு தலங்களின் பெயர்களை கண்டேன், திருமலைராயன்பட்டினம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயிரம் காளியம்மன் பேழையிலிருந்து எழுந்தருளி தரிசனம், மற்றும் சிவநெறிச் செல்வராம் செங்குந்தரின் கனவில் தோன்றினாள் போன்ற பல அரிய விஷயங்களை எங்களுக்கு தந்தது வரப்பிரசாதம். மேலும் அடுத்த பகுதிக்காக காத்து இருக்கிறேன் நன்றி.
- கோ.செல்வமுத்துகுமார், சிதம்பரம்.



