Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அடுத்தவர் யார் என நமக்கு தெரியாது

ஒரு சிறுவன் ஒரு முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்தான். அப்போது அந்தக் கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம், “இந்த உலகிலேயே இவன்தான் மிகவும் முட்டாள். அதை இப்போதே உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்றார். பின்னர் ஒரு கையில் 5 ரூபாய் நாணயத்தையும், மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு அந்தச் சிறுவனை அழைத்து, “உனக்கு எது வேண்டும்?” என்று கேட்டார்.

சிறுவன் 2 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டு சென்றான். இதைப் பார்த்த கடைக்காரர் பெருமையாக, “பார்த்தீர்களா? இவன் ஒருபோதும் முன்னேறப் போவதில்லை” என்றார்.

இதே சம்பவம் தினமும் தொடர்ந்தது. சிறுவன் ஒவ்வொரு முறையும் 2 ரூபாயையே எடுத்துச் சென்றான்.

ஒருநாள் அந்த வாடிக்கையாளர் சிறுவனைப் பின்தொடர்ந்து சென்று, “உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? ஒவ்வொரு முறையும் 5 ரூபாயை விட்டுவிட்டு ஏன் 2 ரூபாயை மட்டும் எடுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே, “நான் ஒருநாள் 5 ரூபாயை எடுத்து விட்டால், அதன் பிறகு அவர் என்னிடம் இந்த விளையாட்டை விளையாடவே மாட்டார். இப்போது அவர் தினமும் என்னை முட்டாள் என்று நினைத்து 2 ரூபாய் கொடுக்கிறார். அதனால், அவர் என்னை முட்டாள் என்று நினைப்பதே எனக்கு லாபம்!” என்றான்.

இந்தக் கதையின் உண்மையான பாடம் என்னவென்றால், மற்றவர்கள் நம்மைப்பற்றி வைத்திருக்கும் மதிப்பீடு எப்போதும் நம்முடைய உண்மையான திறமையை நிர்ணயிப்பதில்லை. சில நேரங்களில் அமைதியாக இருப்பது அறியாமை அல்ல; உடனடியாக பதில் சொல்லாமல் இருப்பது பலவீனம் அல்ல; மற்றவர்கள் நம்மை குறைத்து மதிப்பிடுவதைப் பார்த்து கோபப்படாமல் இருப்பது தோல்வியும் அல்ல. வாழ்க்கையில் எல்லாவற்றையும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் நம்முடைய அறிவை வெளிப்படுத்தாமல் இருப்பதிலேயே பெரிய அறிவு இருக்கிறது.

உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதைவிட, தேவன் நம்மைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார் என்பதே முக்கியம். மனிதர்கள் வெளிப்புறத்தைப் பார்த்து தீர்ப்பு வழங்கலாம்; ஆனால் தேவன் இருதயத்தையும் நோக்கத்தையும் அறிந்திருக்கிறார். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நம்முடைய மதிப்பை நிரூபிக்க முயற்சித்துக்கொண்டே இருந்தால், வாழ்க்கையின் முக்கியமான இலக்குகளைத் தவறவிட நேரிடும்.

ஆகவே, ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை; ஒவ்வொரு அவமதிப்பிற்கும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. நம்முடைய வாழ்க்கையே ஒருநாள் நமக்காகப் பேசும்.

வேதாகமம் கூறுகிறது: “மனுஷன் முகத்தைப் பார்க்கிறான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” - 1 சாமுவேல் 16:7. மனிதர்கள் நம்முடைய தோற்றத்தையும், நிலைமையையும், வெளிப்புறச் செயல்களையும் வைத்து நம்மை மதிப்பிடலாம். ஆனால் தேவன் நம்முடைய இருதயத்தையும் உண்மையான நோக்கத்தையும் அறிந்திருக்கிறார்.

எனவே, யாராவது உங்களை குறைத்து மதிப்பிட்டால் உடனே, அவர்களுக்கு உங்களை நிரூபிக்க ஓடாதீர்கள். சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்; பொறுமையே சிறந்த ஆயுதம்; காலமே சிறந்த சாட்சி.

உங்கள் மதிப்பை மனிதர்களிடம் நிரூபிப்பதைவிட, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழுங்கள். இன்று உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் நாளை உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளலாம். மனிதர்களின் மதிப்பீட்டால் உங்கள் மதிப்பு குறைவதில்லை; தேவனுடைய பார்வையில் நீங்கள் யார் என்பதே உங்கள் உண்மையான அடையாளம்.

- அருள்முனைவர் பெவிஸ்டன்.