Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராமருக்குக் காவலாய் நிற்கும் வியாசராஜர் அனுமன்!

கும்பகோணம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்

சென்ற இதழ் தொடர்ச்சி...

திருவாசியுடன் அமைந்த அனுமன்

கும்பகோணம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலின் அனுமனுக்கு மேலும் சிறப்பு என்னவென்றால், ஒரே சிலா ரூபத்தில், அனுமனுக்கு மேலே ``அஸ்மானகிரி’’ என்று சொல்லக்கூடிய ``திருவாசி’’ அமைந்திருப்பதுதான். திருவாசி என்னும் பெயரை இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால், ``பிரபை’’ என்று சொல்லலாம். மிக தத்ரூபமாக பிரபை அமைந்திருக்கிறது. இந்த பிரபை எதற்காக அனுமாருக்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதன் சுவாரஸ்ய பின்னணி உள்ளது.

அனுமார், எப்போதும் அதர்வண வேதத்தை பாராயணம் செய்யக் கூடியவர். தன்னோடு ராமபிரான் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதால், மரியாதை நிமித்தமாக கீழே அனுமன் அமர்ந்துக் கொள்ளாது, நின்றுக் கொண்டே பாராயணம் செய்வாராம். ராமரின் மீது இத்தகைய அன்பும், பக்தியையும் கொண்ட அனுமனுக்கு, மரியாதை செய்யும் விதமாக, இந்த திருவாசியை (பிரபை) அமைத்திருக்கிறார்கள். இதனை அமைத்தவர் யார்? வேறு யாராக இருக்க முடியும்? மகான் ஸ்ரீ வியாசராஜர்தான்.

குருபக்தி

கோயில் உள்ளே இருக்கக்கூடிய அனுமனை, வெளியே பிரதிஷ்டை செய்தால் பக்தர்களின் தரிசனத்திற்கு ஏதுவாக இருக்குமே என்கின்ற யோசனையில், அனுமனை வெளியில் பிரதிஷ்டை செய்ய, அப்போது கோயிலில் பூஜை செய்துகொண்டிருந்த தன் பெரியப்பாவிடம், சுதர்சன பட்டர் ஆலோசித்துள்ளார். இந்த அனுமன், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்தது. அதனை மாற்றி அமைக்க நமக்கு துளிக்கூட அதிகாரமில்லை என்று கூறிவிட்டாராம். அத்தகைய குருபக்தி அவரிடத்தில் இருந்திருக்கிறது. தெற்கு முகமாக அனுமன் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதே போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களில், தலையில் குடுமி, காதில் குண்டலம், தலைக்கு மேல் வால் சென்று, வாலில் சிறிய மணி, கையில் சௌகந்திகா புஷ்பம் காணப்படும். இந்த அனுமனுக்கும் அவை காணப்படுகின்றன.

வடைமாலையின் சிறப்பு

இந்த அனுமனை வேண்டிக் கொண்டால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையும், அறிவில் மேன்மை அடைய கல்வியையும் தருகிறார். குறிப்பாக, கடல் தாண்டி சென்று கல்வி, வேலை, ஆகியவற்றியில் ஈடுபட்டுவரும் அன்பர்களுக்கு, அரணாக இருந்து அனுமன் வழிகாட்டுகிறார். அனுமன் ஜெயந்தி அன்று 108 வடமாலை சாற்றப்படுகிறது. அன்றைய தினம் அனுமனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும். இங்கு சாற்றப்படும் வடமாலை, மெதுவடை போல் இல்லாமல், தட்டை போல் மொறுமொறுப்பாக இருக்கும். 15 நாட்களுக்கும் மேல் கெட்டுபோகாமல் இருக்கும். மகான் ஸ்ரீ வியாசராஜருக்கு பின், தங்களின் குடும்பம்தான் வழிவழியாக அனுமனுக்கு பூஜைகளை செய்து வருகின்றோம் என்று பூரிப்போடும், பெருமையோடும் சுதர்சன பட்டர் தெரிவித்தார். அதோடு, அங்கு வீற்றிருக்கும் ராமர் பற்றியும் ராஜகோபாலஸ்வாமி பற்றியும் பேசத் தொடங்கினார்.

அச்சு அசலாக ஒரே திருமேனி

மன்னார்குடியில் இருக்கக்கூடிய ராஜகோபால ஸ்வாமியை போலவே, இக்கோயிலில் உள்ள ராஜகோபால ஸ்வாமியின் திருவுருவமும் காணப்படுகிறது. பல இடங்களில் ராஜகோபாலஸ்வாமி அருளினாலும், மிக முக்கியமாக மூன்று இடத்தில் சேவை சாதிக்கிறார். ராஜகோபாலஸ்வாமி என்று சொன்னாலே மன்னார்குடிதான். ஆகையால், முதலில் மன்னார்குடி. இரண்டாவது, கும்பகோணத்தில் உள்ள இக்கோயில். மூன்றாவது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில், மாணிக்க வாசகர் இருப்பார். அவர் அருகில் இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். ஆனால், அது மாணிக்கவாசகர் இல்லை. அது ராஜகோபால ஸ்வாமிதான் என்று சிலர் கூறுகிறார்கள். எது எப்படியோ.. திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் இருக்கக்கூடிய ராஜகோபாலஸ்வாமியும் கணக்கிற்கு வருகிறார். மன்னார்குடியில் ராஜகோபாலஸ்வாமி கோயிலை கட்டி ``அச்சுத நாயக மன்னர்தான்’’, இக்கோயிலையும் கட்டியுள்ளார். ``காசி ராஜன்’’ என்கின்ற ஒரு அமைச்சரின் மேற்பார்வையில், இந்த கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மன்னார்குடி கோயிலில் இருக்கும் ராஜகோபாலரையும், இந்த கோயிலில் இருக்கும் ராஜகோபாலரையும் ஒரே ஸ்தபதிதான் செய்திருக்கிறார். ஆகையால்தான், இரு ராஜகோபாலரும் ஒரே அளவு, ஒரே எடை, ஒரே வடிவமைப்பு. இதுபோல், வேறு எங்கும் காணமுடியாது.

ராஜகோபாலர் மீது சூரிய ஒளி

அதே போல் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இக்கோயிலின் ராஜகோபாலசுவாமி மீது இயற்கையாகவே ஒளியானது வீசுவது போல், கட்டிட அமைப்பை அக்காலத்தில் கட்டியுள்ளார்கள். சூரிய ஒளி, கோயில் மூலஸ்தானத்தின் வரை படர்ந்து இருக்கும். அதாவது சூரிய ஒளியானது மூலஸ்தானத்தில் இருக்ககூடிய ராமர் மற்றும் ராஜகோபாலர் மீது படுகிறது. 1960-ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் மின்சாரம் என்பது பெரும்பாலும் கிடையாது. அப்போது வரை மூலவரின் மீது இயற்கையாக ஒளி வீசுவதை பக்தர்கள் கண்டு தரிசிப்பார்கள்.

மேலும், 1964-ஆம் ஆண்டு, ஊர் முழுவதும் மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அப்போது இந்த கோயில் மூலஸ்தானத்திற்கு மட்டும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. காரணம் மூலஸ்தானம், மிக பெரிய படிகளை கொண்டு உயரத்தில் சந்நதி இருப்பதால், பாதிப்பு ஏற்படவில்லை.

மன்னார்குடி போலவே 18 நாட்கள் உற்சவம்

இக்கோயிலில், சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று ஸ்வாமிக்கு விசேஷ அலங்காரங்கள் சாற்றப்பட்டிருக்கும். வைகாசி மாதத்தில் வசந்தோற்சவம் ஐந்துநாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. ஆவணி மாதத்தில் ஏழு நாட்கள் பவித்தோற்சவம். புரட்டாசி மாதம், நவராத்திரி ஏழு நாட்கள் ஆகியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், சரஸ்வதி பூஜை அன்று சுவாமி புறப்பாடு ஆவார். திருக்கார்த்திகை உற்சவம், தனுர்மாதம் (மார்கழி) 30 நாட்களும் உற்சவம், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் என வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இங்கு மூலவர் ஸ்ரீ ராமபிரானுக்கு ஸ்ரீ ராமநவமி அன்று சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

இதில் சிறப்பு என்ன வென்றால், மன்னார்குடியில் எப்படி ராஜகோபாலஸ்வாமிக்கு 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறதோ.. அதே போல், 2013-ஆம் ஆண்டு முதல் இக்கோயிலிலும் 18 நாட்கள் உற்சவங்கள் நடைபெறுகின்றன. அச்சு அசலாக, மன்னார்குடியில் 18 வாகன புறப்பாட்டினை போலவே இங்கும் புறப்பாடாகின்றன. அதாவது, மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமிக்கு கருடசேவை எனில், இங்கும் கருடசேவை நடைபெறும். அங்கு அனுமன் வாகனம் என்றால், இங்கும் அனுமன் வாகனம். அங்கு வெண்ணெய்த்தாழி என்றால், இங்கும் வெண்ணெய்த்தாழி நடைபெறும்.

பிரசாதங்கள்

புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் ஆகியவை பிரசாதமாக செய்து நிவேதித்து, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கோயிலுக்கு சென்று, விளக்கேற்ற நாம்தான் வெளியில் விற்கப்படும் விளக்கினை வாங்கிச் செல்லவேண்டும். ஆனால், இக்கோயிலில் விளக்கேற்ற திரி, எண்ணெய், விளக்கு ஆகியவற்றை கொடுத்து, விளக்கேற்ற சொல்கிறார், கோயில் பட்டர். 2009-ஆம் ஆண்டு முதல் சுதர்சன பட்டர் பூஜைகளை மேற்கொண்டு வருகிறார். முன்பே இவரிடத்தில் தெரிவித்தால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல், அனுமனுக்கும், ராஜகோபாலருக்கும் அபிஷேகம் செய்து அருள்பெறலாம். கடைகளில் வாங்காத, சுத்தமான பால், தயிர், நெய் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் நடைபெறுகின்றன.

கைங்கர்யம்

கடந்த 2013-ஆம் ஆண்டில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, இந்தாண்டு (2026) கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிடப்பட்டது. ஆனால், போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் பணிகள் தடைபட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டில், ``மகாமகம்’’ வருகிறது. அதற்குள்ளாவது கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்பது சுதர்சன பட்டரின் விருப்பம்.

மேலும், கோயில் அருகிலேயே 150 சதுரடியில் சிறிய இடம் உள்ளது. இங்கு யாகசாலை அமைத்தும், உற்சவ வாகனங்களை நிறுத்தி வைக்கவும் கூடாரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல், 18 நாட்கள் நடைபெறுகின்ற உற்சவ விழாவிற்கும் உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு: 99406 55506.

கோயில் திறந்திருக்கும் நேரம்: கோயில் பட்டரை தொடர்புக்கொண்டு, தகவல் கொடுத்த பிறகு செல்லலாம்.

எப்படி செல்வது?: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து தோப்பு தெருவில் உள்ள இக்கோயிலை அடைய இரண்டே கிலோ மீட்டர்தான். ஆனால், ஆட்டோவில்தான் பயணிக்க முடியும்.