Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சகோதர ஒற்றுமையையும் வளத்தையும் வேண்டும் விரதங்கள்

இந்த இரண்டு விரத காலங்களுமே அடுத்தடுத்தே எப்போதும் வரும். பெண்கள் தங்கள் சகோதரர்களுக்காக விரதமிருந்து கைகளில் நோன்புக் கயிற்றை கட்டிக் கொண்டு அவர்கள் நீடுழி வாழ வேண்டுமென்று வேண்டிக் கொண்டு விரதமிருப்பார்கள். இதற்கென்று உள்ள புராணக் கதைகளை பெரியவர்கள் சொல்லச் சொல்லி கேட்டு விரதத்தை முடிப்பார்கள். ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இதை விமரிசையாக கொண்டாடுவார்கள். சில மாநிலங்களில் இரண்டு நாட்களிலுமே புற்றுக்குச் சென்று புற்றுக்கு பால் நிவேதனம் செய்து, புற்று மண்ணை பிரசாதமாகப் பெற்று வருவார்கள்.

ஆடி மாதத்திலோ அல்லது சில சமயம் ஆவணி மாத இறுதியில் கருட பஞ்சமி, நாகபஞ்சமி, நாக சதுர்த்தி வருகிறது. இந்த விசேஷங்களில் பெரிய திருவடியான கருட னையும், நாகங்களையும் நினைத்து வழிபட வேண்டும். நாக சதுர்த்தி / பஞ்சமி அன்று கிராமத்தில் புற்று மாரியம்மன் கோயில் களுக்குச் சென்று நாகங்களை வழிபடுகின்றார்கள். நாகங்களை வழிபடுவது ஆதிகாலத்திலிருந்து மக்கள் செய்து வரும் வழிபாடு. அதுவும் எளிய மக்களின் வழிபாடு. இந்தக் கட்டுரையில் நாக அல்லது கருட பஞ்சமி , நாக சதுர்த்தியை முன்னிட்டு, நாகங்களின் தலைவனான ஆதிசேஷனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பகவானைப் பிரியாதவன்

பகவான் தன்னோடு பிரியாமல் வைத்துக்கொள்வது இரண்டு பேரை. ஒன்று மகாலட்சுமித் தாயாரை. “ஒரு நொடியும் பிரியாள்” என்பதுபோல, பகவானுடைய திருமார்பிலே எழுந்தருளி இருப்பவள் மகாலட்சுமி. அதனால் தான் பெருமாளுக்கே திருமால் என்று பெயர். திரு இல்லாத மால் இருக்க முடியாது. பகவானுக்கு திருமாமகள் செல்வன், திருவாழ்மார்பன்,ஸ்ரீ நிவாசன் என்றெல்லாம் திருப் பெயர்கள் உண்டு. அதைப்போலவே பகவானைப் பிரியாமல் இருக்கக் கூடிய நித்யசூரிகள் ஒருவர் அனந்தன் என்று அழைக்கப்படும் ஆதிசேஷன்.

விண்ணாடு என்று சொல்லப்படும் பரமபதத்தில் நித்திய கைங்கரியம் செய்யக்கூடிய ஆத்மாக்களை நித்யசூரிகள் என்று அழைப்பார்கள். அதன் வரிசையைச் சொல்லுகின்ற பொழுது அனந்த ,கருட, விஷ்வக்சேனர் என்று சொல்வார்கள். இந்த வரிசையில் முதலாவதாக வருபவர் ஆதிசேஷன் தான்.

முதல் தொண்டன்

தலைவனை சேஷி என்றும், தொண்டனை சேஷன் என்றும் குறிப்பிடும் வழக்கம் வைணவத்தில் உண்டு. பகவானுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பினை சேஷ - சேஷி பாவம் என்பார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இந்த சேஷ - சேஷி பாவம்தான்.கருடன், பகவானுடைய புறப்பாட்டின் போது வருவார். ‘‘பறவை ஏறும் பரம் புருடா” என்று அப்பொழுது பகவானை மங்களாசானம் செய்வார்கள். இது கருடனுக்கு பெருமை. ஆனால், மற்ற நேரத்தில் அவர் பெருமாளுக்கு எதிரிலே, பெருமாள் எப்போது அழைப்பாரோ என்று தயார் நிலையில் கைகூப்பி நிற்பார். இதைத்தான் பல சந்நதிகளில் காண்கின்றோம். பகவானுடைய கருவறைக்கு முன்னாலே கொடிக் கம்பம் இருக்கும். அந்தக் கொடி கம்பத்துக்கு பக்கத்திலே கருடனுக்குத் தனிச் சந்நதி இருக்கும். கருடன் கைகூப்பிய நிலையில் பகவானுடைய ஆணையை எதிர்பார்த்து காத்திருப்பார். ஆனால், பகவானுடைய கருவறைக்குள்ளேயே எப்பொழுதும் பகவானோடு பிரியாத நிலையில் இருப்பவர் ஆதிசேஷன்.

இதை ஆழ்வாருடைய இந்தப் பாசுரம் எடுத்துக் காட்டும்.

சென்றால் குடையாம் இருந்தால்

சிங்காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்

புணையாம் மணிவிளக் காம்

பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு.

(முதல் திரு .53)

எம்பெருமான் நந்தவனங்களிலோ மற்ற இடங்களிலோ உலா வருகின்ற பொழுது அவன் திருமேனி மீது மழையோ வெயிலோ படாதபடி ஆதிசேஷன் குடைபோல் தன் ஆயிரம் தலைகள் விரித்து நின்று கொண்டு இருப்பாராம்.

சற்று அமரலாம் என்று எம்பெருமான் நினைத்தால்போதும். ஒரு சிம்மாசனமாக தன்னை அமைத்துக் கொள்வாராம். சரி, சற்று நேரம் நிற்கலாம் என்று நினைத்தால் அவனுடைய மென்மையான தாமரைத் திருப்பாதங்களில் கல் மண் குத்தி விடுமே என்று அவனுக்கு கீழே பாதுகையாக இருப்பாராம். சரி, சற்று படுப்போம் பகவான் நினைக்கும் பொழுது, “இதோ பாய் விரித்து விட்டேன், படுத்துக் கொள்ளுங்கள்” என்று திருப்பள்ளி மெத்தையாக இருப்பாராம்.

சரி ஏதாவது ஒன்றைப் பார்ப்போம் என்று நினைக்கின்ற பொழுது வெளிச்சம் காட்டுகின்ற விளக்காக இருப்பாராம். இடுப்பிலே சாத்திக் கொள்வதற்கு பரிவட்டம் (ஆடை) தேடுகின்ற பொழுது, என்னை கட்டிக்கொள்ளுங்கள் என்று அந்த பரிவட்டமாகவும் இருப்பாராம். சரி பாற்கடலில் சற்று சுற்றி வருவோம் என்று நினைத்தால், “தெப்பமாக மிதந்து கொண்டிருக்கிறேன், என் மீது ஏறிக்கொண்டு சுற்றி வாருங்கள்” என்று தெப்பமாக இருப்பாராம். பகவான் சுகமாக சாய்ந்து கிடக்கும் போது, தலையணையை தேட வேண்டாம், என்னையே கட்டிக்கொள்ளுங்கள் என்று தலையணை போல மிருதுவாக இருப்பாராம். இப்படி எல்லாக் காலத்திலும், எல்லா நிலையிலும், ‘‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று பெருமாளை விட்டுப் பிரியாமல் அவருக்குத் தொண்டு செய்வதே தொழிலாகக் கொண்டவர் என்பதால் இவருக்கு ஆதிசேஷன் என்று பெயர்.

பகவானின் வாகனம் கருடன். படுக்கை அனந்தன் என்னும் ஆதிசேஷன். இந்த இருவரும் கச்யப முனிவரின் பிள்ளைகள். ஒருவருக்கு ஒருவர் சகோதர உறவு கொண்டவர்கள். அதனால் தான் கருட பஞ்சமியும் நாக சதுர்த்தியும் இணைந்து கொண்டாடப்படுகிறது.பிரம்மோற்சவத்தில் பல்வேறு வாகனங்களில் பகவான் பவனி வருவார். கஜ வாகனம், அஸ்வ வாகனம், கருட வாகனம், என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஆரோகணம் செய்து திருவீதி உலா கண்டருள்வார் . ஆனால் திருமலை பிரம்மோற்சவத்தில் மட்டும் பகவான் இருமுறை சேஷ வாகனத்தில் ஆரோகணித்து வீதி வலம் வருவார். இதனை சின்ன சேஷ வாகனம், பெத்த சேஷ வாகனம் என்று சொல்வார்கள். இந்தப் பெருமை ஆதிசேஷனுக்கு மட்டுமே உண்டு.

இன்னும் ஆதிசேஷனைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இந்த அளவில் நிறுத்திக் கொள்வோம். ஆதிசேஷனைப் பற்றி பகவானைப் பற்றுவோம். அதுதான் முறை.

“ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே, விஷ்ணு வல்லபாய தீமஹி,

தன்னோ சேஷ ப்ரசோதயாத்”

என்று சொல்லுங்கள் .இந்த மந்திரம், பயத்தைப் போக்கவும், ஆதிசேஷனின் அருளைப் பெறவும் பயன்படும்