Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வித்யுத் யோகம்

திடீர் பண வரவிற்கு ஜோதிடத்தில் ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒருவர் மிகவும் சாதாரண நிலையில் இருப்பார். திடீரென வீடு, வாகனம், நிலபுலன்கள், ஆபரணங்கள் என மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் மாறுவது மற்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தும். நேர்மையாக வாழ்பவர்கள்கூட நாமும் நேர்மையாக உழைத்துதானே சம்பாத்தியம் செய்கிறோம் நமக்கு மட்டும் ஒன்றும் மாற்றம் நிகழவில்லையே என்ற மனப்புலம்பல்கள் தோன்றும். அவர்களை கண்ட சிலர், அவரைப் போலவே சில காரியங்களை செய்தால், நம் வாழ்விலும் பெரிய மாற்றங்கள் வரும் என செய்து பார்ப்பார்கள். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சும். கிரகங்கள்தான் அவற்றிற்கு காரணம் என்ற எண்ணம் இருந்தால் அவற்றை புரிந்து கொண்டு சாதாரணமாக இருந்துவிடுவார்கள். அப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் யோகத்தை விரிவாகக் காண்போம்.

வித்யுத் யோகம் என்றால் என்ன?

வித்யுத் என்ற வடமொழிச் சொல்லிற்கு மின்னல் / மின்சாரம் என்று பொருள். அதாவது, மின்னல் போன்ற வேகமான யோகம் என்று சொல்லப் படுகிறது. இதற்கு ஒரு ஜாதகத்தில் 11ம் பாவகத்தின் லாப அதிபதி கேந்திரத்தில் ஏதோ ஒரு வீட்டில் உச்சம் பெற்று, சுப கிரகங்களான வியாழன், சுக்கிரனின் பார்வையில் இருந்தால் அதனை வித்யுத் யோகம் என்று சொல்லப்படுகிறது.

வித்யுத் யோகம் ஏற்படும் விதம்

* மேஷ லக்னத்திற்கு 11ம் பாவக அதிபதி சனி பகவான் 7ம் பாவகமாகிய துலாம் ராசியில் உச்சம் பெறுகிறது. அவ்வாறு உச்சம் பெறும் சனி பகவான் கேந்திரம் என்று சொல்லக்கூடிய பாவகத்தில் அமர்வதால், வித்யுத் யோகம் உண்டாகி சிலசங்கடங்களையும் கொடுக்கும்.

* துலாம் லக்னத்திற்கு 11ம் பாவக அதிபதி சூரியன் 7ம் பாவகமாகிய மேஷத்தில் உச்சம் பெறுவதால் வித்யுத் யோகம் உண்டாகிறது. இதிலும் சில யோகங்களுடன் சில பாதகங்களும் உண்டு.

* தனுசு லக்னத்திற்கு 11ம் பாவக அதிபதி சுக்கிரன் 4ம் பாவகத்தில் உச்சம் பெறுகிறது. அதனால் வித்யுத் யோகம் உண்டாகிறது.

* மகரம் லக்னத்திற்கு 11ம் பாவக அதிபதி செவ்வாய் லக்னத்தில் (1ம் பாவகத்தில்) அமர்ந்து உச்சம் பெறுவதால் வித்யுத் யோகம் உண்டாகிறது.

* ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம் லக்னத்திற்கு 11ம் அதிபதி கேந்திரத்தில் உச்சம் பெறுவதில்லை...

வித்யுத் யோகப் பலன்கள்

* வாழ்வின் பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் யோக அமைப்பாகும். அதற்கான மாற்றங்கள் எவ்வாறு அமையும் என்பதை அவரே எதிர்பாராமல் எளிதாக பொருளாதாரத்தை மேம்படுத்துவார்.

* நண்பர்களும், உறவுகளும் அதற்கு தகுந்தார் போன்று வாழ்வை மேன்மையாக்குவதற்கான வழி வகைகளை மேற் கொள்வார்.

* பதிேனாராம் அதிபதி (11ம்) என்பதால் எத்தனை சிக்கல்கள் வந்தாலும், அதனை சமாளிக்கக்கூடிய தகுதியையும் திறமையையும் ஜாதகர் அறிந்து வைத்திருப்பார்.

* வாழ்வின் ஏற்றத்திற்கு தகுந்தாற் போல அவரின் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் இருக்கக்கூடிய சிக்கல்களையும் மாற்றங்களையும் வித்தியாசத்தில் உணர்வார்.

* பதிேனாராம் அதிபதி பலம் பெறுவதால் நோய்கள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து எளிதாக வரக்கூடிய யுக்தியை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்வார்.

* எல்லா மாற்றங்களையும் கண்டபின்தான் பணம் என்பது வெறும் ஒரு கருவிதான். ஆனால், உண்மையான திறமை மட்டுமே எல்லாவற்றையும் மாற்றக்கூடியது என்பதையும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்வார்.

* பொருளாதாரத்தை இரட்டிப்பு செய்வது எவ்வாறு என்பதற்கான எளிதான வழியை தேட முயற்சித்து, அதற்கான தொலைநோக்குடன் அதில் முதலீடு செய்வதில் தனது சாமர்த்தியத்தை காட்டுவார்.

வித்யுத் யோகம் மேம்பட என்ன செய்யலாம்

* வித்யுத் யோகத்திற்கான கிரகம் எந்த பாவகத்தில் உள்ளதோ அதற்கான பரிகாரங்களை விடாமல் செய்து கொண்டே இருத்தல் யோகத்தின் பக்க விளைவுகளை குறைத்து யோகத்தின் முழுப்பலன்களும் கிடைக்கப் பெறுவார்கள்.

* சனி உச்சம் பெற்றால் கண்டிப்பாக மக்கள் செல்வாக்கு கூடும். பலர் தங்களை நாடி வருவார்கள். எனவே, மேஷ லக்னக்காரர்கள் அன்னதானம் செய்வதும், தங்களை நாடி வருபவருக்கு விருந்து உபசரிப்பதும் நன்மை தரும்.

* சுக்கிரன் உச்சம் பெற்றவர்கள் கண்டிப்பாக பெண்கள் விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இல்லாவிடில் அவமானத்தை ஏற்படுத்திவிடும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு.

* செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் வீடு, நிலம் போன்ற இடங்களை வாங்கும் பொழுது கண்டிப்பாக கடனாக வாங்கி நிலத்தை பெறுவது பாதுகாப்பை தரும். நிலத்தை பெறுவதற்காக குண்டர்களுடன் சேர்ந்து கொள்வதெல்லாம் சாபத்தையும் ஆபத்தையும் தரும் என்பதை மறக்க வேண்டாம். பேராசை பேரழிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முருகனை மலையேறி வழிபடுவது சிறந்த நற்பலன்களை தரும்.