108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில், ``ஸ்ரீ தீர்த்தக்கரை வாசுதேவப் பெருமாள் சந்நதி’’ என்று அற்புதமான வாசுதேவப் பெருமாள் அருள்பாலித்துவருகிறார். ரங்கநாதஸ்வாமியை சேவித்துவிட்டு, கொட்டாரம் வழியாக தாயார் சந்நதிக்கு செல்லும் வழியில் நேர்மூலையில் மிகப் பெரிய நூறுகால் மண்டபம் இருக்கும். அதன் முன்பகுதியில், முதலாழ்வார் சந்நதியும், உள்பகுதியில் அழகிய ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக ஸ்ரீ தீர்த்தக்கரை வாசுதேவப் பெருமாள் சந்நதி அமைந்திருக்கிறது.
அது என்ன தீர்த்தக்கரை?
ஸ்ரீ வைகுண்டத்தில் பாய்ந்து ஓடும் புனிதமான ``விரஜாநதி’’, ஸ்ரீ ரங்கத்திலும் ஓடுவதாக ஐதீகம். ஸ்ரீ ரங்கம் கோயில் உள்ளே, பரமபதவாசல் உள்ளே இருக்கும் மண்டபத்தில் ``விரஜா நதி’’ இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், அந்த மண்டபத்தை விரஜாநதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய புனித நதிக்கரையில் இருந்த பெருமாள் என்பதால், ஸ்ரீ தீர்த்தக்கரை வாசுதேவர் என்று இப்பெருமாளுக்கு பெயர் ஏற்பட்டது. அதனால்தான் ஸ்ரீ ரங்கம் ``பூலோக வைகுண்டம்’’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சந்நதியில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். அழகிய புன்னகை தவழும் திருமுகம். கற்பூர ஆரத்தி காட்டும்போது அந்த புன்னகை விரிந்து விகசிப்பதை காண கண்கோடி வேண்டும். இடது திருக்கரத்தில் சங்கம், மேல் வலது திருக்கரத்தில் சக்கரம். பிரயோக சக்கரமாக இருப்பது விசேஷம். கீழ் இடதுகரம் கடிமுத்திரையோடும், வலதுகரம் வரதஹஸ்தமாக காட்சியளிக்கிறார்.
வலதுபுறத்தில் ஸ்ரீ தேவிதாயார் கையில் தாமரை மலரோடும், இடதுபுறத்தில் பூமாதேவித்தாயர் கையில் தாழம்பூ மலரோடும் மந்தகாச புன்னகையோடு நின்ற திருக்கோலத்தில் கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார். இவர்களோடு வரம் தரும் வரதராஜர், தெற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில், வலது மேல் கரங்களில் சங்கு சக்கரத்தோடும், கீழ் இடது கரத்தில் கதையுடனும், வலதுகரம் அபய ஹஸ்தமாகவும் எழுந்தருளியிருக்கிறார்.
நாகர் பிரதிஷ்டை
அதோடு, அர்த்த மண்டபத்தில் ஐந்து நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாகதோஷம், திருமணத்தடை போன்றவற்றிற்கு பரிகாரமாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சந்நதிகளில் நாகர்கள் இருப்பதில்லை. ஆனால் ஸ்ரீ ரங்கம் கோயிலில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதியிலும், ஸ்ரீ தீர்த்தக்கரை வாசுதேவப் பெருமாள் சந்நதியிலும்தான் நாகபிரதிஷ்டை உண்டு. இந்த சந்நதியில் இன்னொரு சிறப்பும் உண்டு. சந்நதி மடப்பள்ளியில் அன்னமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு அரிசி, பருப்பு, வெல்லம் சேர்ப்பது குறையாத செல்வத்தையும், வளமான வாழ்வையும் தரக்கூடியது. இந்த சந்நதி முழுமையான ஆகம முறைப்படியான அமைப்பு கொண்டது. கருவறையை அடுத்து, அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து ஸநபன மண்டபமும் அதற்கடுத்து மிக பிரமாண்டமான நூறுகால் மகாமண்டபமும் அமையப் பெற்ற திருக்கோயில். இத்தகைய சிறப்பான கோயில் ஒதுக்குபுறமாக அமைந்திருப்பதால், பெரும்பாலார் தாயார் சந்நதி செல்லும் அவசரத்தில், இந்த மகோன்னதமான சந்நதி பெருமாளை தரிசிக்காமலேயே சென்று விடுகிறார்கள். சிலர், அவசர அவசரமாக வெளியிலிருந்து சேவித்துவிட்டு செல்கிறார்கள்.
உள்ளே சென்று தரிசனம்
அப்படி சேவித்தால், பெருமாள் மட்டுமே சேவையாவார். ஆத்மசுத்தியோடு உள்ளே அர்த்த மண்டபம் வரை சென்று சேவித்தால், இரண்டு தாயாரும், வரதராஜரும் சேவையாவார்கள். எனவே வாயிலிலிருந்து கையை கூப்பிவிட்டு செல்லாமல், சந்நதிக்குள்ளே சென்று சேவிக்க வேண்டும். அடுத்தமுறை ஸ்ரீ ரங்கம் சென்றால், அவசியம் ஸ்ரீ தீர்த்தக்கரை வாசுதேவப் பெருமாளை சேவிக்க தவறாதீர்கள். மேலும் விவரங்கள் தேவைபட்டால், சந்நதி அர்ச்சக பரிசாரகர் ஸ்ரீ முகுந்தன் ஐயங்கார் அவர்களை 9345155854
கைப்பேசியில் தொடர்பு கொள்ளவும்.
சந்நதி திறந்திருக்கும் நேரம்: காலை: 06:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை: 04:30 மணி முதல் 07:00 மணி வரை.


