?விஷ்வக்சேனர் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் ஒருவரா?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
இல்லை. விஷ்வக்சேனர் என்பவர், வைணவ சம்பிரதாயத்தில் மட்டுமே இடம்பிடிப்பவர். இவர் திருமாலின் படைகளுக்குத் தலைவராகக் கருதப்படுபவர். திருமாலின் திருத்தலங்களில் பூஜை மற்றும் விழாக்களுக்கு முன்பாக விஷ்வக்சேனரை ஆராதனை செய்வார்கள். வைணவ சம்பிரதாயத்தில் எந்த ஒரு காரியமும் தடையின்றி நடைபெற அவரை முதலில் வணங்குகிறார்கள். நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், விநாயகர் பொதுவாக எல்லா விக்னங்களையும் தடைகளையும் நீக்குபவர் என்றும் விஷ்வக்சேனர் என்பவர் ஸ்ரீ மன் நாராயணனுக்குரிய கைங்கரியங்கள் ஆராதனைகள் தடையின்றி நடைபெறத் துணைநிற்கும் சேனாதிபதி என்றும் பொருள் கொள்ளலாம்.
?கோத்திரம் என்றால் என்ன?
- மு.ரவிகணேஷ், சேலம்.
கோத்திரம் என்பது மகரிஷிகளின் பெயரைக் கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, பாரத்வாஜ கோத்ரம், கௌசிக கோத்ரம், காச்யப கோத்ரம், கௌதம கோத்ரம், ஜம்பு மகரிஷி கோத்ரம் என்றெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த கோத்திரத்தின் பெயரைச் சொல்கிறார்களோ அந்த குடும்பமானது அந்த மகரிஷியின் வழித்தோன்றல் என்பது பொருள். ஆனால் இந்தக் காலத்தில் ஒரு சிலருக்கு தங்கள் கோத்திரத்தின் பெயர் தெரிவதில்லை. அவ்வாறு பெயர் தெரியாத காரணத்தால் சைவ நெறியைப் பின்பற்றுபவர்கள் சிவகோத்ரம் என்றும், வைணவ நெறியைப் பின்பற்றுபவர்கள் விஷ்ணு கோத்ரம் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். ஒரே பரம்பரையைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் சகோதர முறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரே கோத்ரத்தைச் சேர்ந்த வீட்டில் சம்பந்தம் செய்யக்கூடாது என்ற விதியும் உண்டு.
?தொடர்ந்து காயத்ரி ஜபம் செய்து வந்தால், அதன் பலன் எப்படி இருக்கும்?
- கிருஷ்ணபிரசாத், திருச்சி.
மந்திரங்களில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம். அதனை முறையாக தினந்தோறும் ஜபம் செய்து வருபவர்களுக்கு ஆன்ம பலம் என்பது உண்டாகும். எதையும் தாங்கும் இதயமும் எந்த ஒரு இக்கட்டான சூழலை சமாளிக்கும் திறனும் வந்து சேரும். குறிப்பாக, தன்னம்பிக்கை என்பது உயரும். காயத்ரி ஜபத்தினை தொடர்ந்து செய்பவன் தனக்குள் உறையும் இறைசக்தியை உணர்கிறான். இறைவன் தன்னுடனேயே இருக்கும்போது, வீண் மனக்கவலை எதற்கு என்ற எண்ணம் மேலோங்குவதால் சதா சர்வகாலமும் நிம்மதியாக வாழ்வர்.
?திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
- வண்ணை கணேசன், சென்னை.
தினம், கணம், மஹேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,
வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடி என்று பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும் இந்த பத்து பொருத்தம் பார்ப்பதைவிட, ஜாதக ரீதியாக பொருத்தம் பார்ப்பதே சாலச் சிறந்தது. மணமகனின் ஜாதகத்தில் லக்னம், 2,4,7,8,12 ஆகிய பாவகங்கள் பெண்ணின் ஜாதகத்தில் உள்ள கிரஹ அமைப்புடன் ஒத்துப் போகிறதா? அதே போல பெண்ணின் ஜாதக பலமும் ஆணின் ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலையோடு பொருந்துகிறதா என்பது போல ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணத்தை
நிச்சயிப்பதே சாலச் சிறந்தது.
?கண்ணனின் காளிங்கன், விஷ்ணு
சயனிக்கும் ஆதிசேஷன் ஐந்து
தலைகளுடன் இருப்பதேன்?
- மல்லிகா அன்பழகன், சென்னை.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை அடக்கினாலே காம, குரோத, லோப, மோக, மதமாச்சரியங்களை எளிதாக வெற்றி காண இயலும். இந்த ஐம்புலன்களையே ஐந்து தலை நாகமாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஐம்புலன்களை அடக்குபவன் ஞானம் பெறுகிறான். நவகிரஹங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பார்கள். அந்த கேதுவிற்கும் ஐந்துதலை நாகத்தினைத்தான் தலையாக உருவகப் படுத்தி இருப்பார்கள். ஆக, ஐந்துதலை நாகம் இறை மூர்த்தத்துடன் காட்சியளிப்பது என்பது நாம் அந்த ஞானத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.ஸ்ரீ - சிராஜுல் ஹஸன்.
?பஞ்சதுவாரகை என்று பத்ரிநாத், புரிஜெகன்னாத், அயோத்தி, துவாரகை, பண்டரிபுரம் ஆகியவற்றைச்
சொல்வது சரியா?
- ஜெ.மணிகண்டன், வேலூர்.
பஞ்சதுவாரகை என்ற பெயரில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில், ராமரின் ஜென்ம பூமியான அயோத்தி இடம்பெற்றிருக்கிறது. துவாரகை என்பது ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது. பெரும்பாலான வட இந்திய ஆன்மிகவாதிகள், பஞ்சதுவாரகை என்ற பெயரில் அழைக்கும் தலங்களின் பட்டியல் பின்வருமாறு. இவற்றில் குஜராத் மாநிலத்தில் துவாரகை, பேட் துவாரகை, டாகோர் ஆகிய மூன்று தலங்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் நாத்வாரா, காங்ரோலி ஆகிய 2 தலங்களும் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக வருவது மூல துவாரகை - கிருஷ்ணர். தனது அரசாங்கத்தை நிறுவி ஆட்சி செய்த இடம். பேட் துவாரகை என்பது மூல துவாரகையில் இருந்து கடலில் அமைந்துள்ள தீவு.
இதுவே கிருஷ்ணரின் இல்லமாகவும், சுதாமா என்கிற குசேலர் கிருஷ்ணரை சந்தித்து அவல் தந்த இடமாகவும் சொல்லப் படுகிறது. மூன்றாவதாக வரும் டாகோர் என்பது கிருஷ்ணரின் தீவிர பக்தர். ஆன போதானா என்பவருக்காக கிருஷ்ணரே எழுந்தருளியதாக சொல்லப்படும் திருத்தலம். அடுத்து ராஜஸ்தானில் உதய்ப்பூர் அருகில் உள்ள நாத்வாரா. இங்குள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், கோவர்த்தனகிரியைத் தாங்கிப் பிடிக்கும் பாலகிருஷ்ணனின் வடிவமாக ஸ்ரீ நாத்ஜி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஐந்தாவதாக வரும் காங்ரோலி என்பது, மேற்சொன்ன நாத்வாராவிற்கு அருகில் ராஜ்சமந்த் என்கிற ஏரிக்கரையில் அமைந்துள்ள துவாரகாதீஷ் ஆலயம். வல்லபாச்சாரியாரின் மரபில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வடஇந்தியர் பலரும் இந்த ஐந்து தலங்களையும் ``பஞ்சதுவாரகா யாத்ரா’’ என்ற பெயரில் ஒருசேர தரிசிக்கிறார்கள்.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும்.
ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908, மயி–லாப்–பூர், சென்னை - 600 004.


