Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

உயிர்களின் தோற்றத்தைத் தேடி....

பகுதி -11

நம்முடைய புராணங்களையும், இதிகாசங்களையும் படித்துவிட்டு, இன்றைய அறிவியல் பார்வையில் பொருந்தவில்லை என்று கேலி செய்வது நமக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் ஒரு கேள்வி. அந்தக் கதைகளுக்குள் சொல்லப்பட்டிருக்கும் கேள்விகளை நாம் கவனித் திருக்கிறோமா? ஒரு புராணக் கதை, ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், ஒரு கதை, ஒரு உருவகம், ஒரு உரையாடல் மூலமாகச் சொல்லியிருக்கலாம். அதற்குள் ஒரு வாழ்வியல் செய்தி இருக்கலாம். ஒரு தத்துவச் சிந்தனை இருக்கலாம். ஏன்... இயற்கையைப் பற்றிய ஒரு கூர்மையான கவனிப்பு கூட இருக்கலாம். இன்றைக்கு மனிதன் அண்டத்தைப் புரிந்து கொள்வதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து விண்வெளித் தொலைநோக்கிகளை அனுப்புகிறான்.

இந்தப் பிரபஞ்சம் எப்போது தோன்றியது?

எப்படி தோன்றியது?

எவ்வளவு பெரியது?

அதற்கு எல்லை உண்டா?

நட்சத்திரங்களும் விண்மீன் மண்டலங்களும் எப்படி உருவாயின? என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறான். நாசாவின் ஆய்வுகள் உள்ளிட்ட நவீன வானியல் ஆராய்ச்சிகள், பிரபஞ்சத்தின் வயது சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் என்பதையும், ஆரம்ப காலத்திலிருந்து நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள், கோள்கள் படிப் படியாக உருவாகி வந்ததையும் ஆராய்ந்து வருகின்றன. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை மேலும் பின்னோக்கிப் பார்க்கும் முயற்சியில் முக்கியமான கருவியாக இருக்கிறது.

அதேபோல, மற்றொரு மிகப் பெரிய கேள்வி. உயிர் எப்படி தோன்றியது? பூமியில் முதலில் எத்தகைய உயிரினங்கள் இருந்தன? அவற்றிலிருந்து இன்றுள்ள பல கோடி உயிரினங்கள் எப்படி உருவாகின?ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்குச் செல்லும் மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டன? மனிதன் இந்தப் பெரிய உயிரின வரலாற்றில் எங்கே நிற்கிறான்? இதற்காகவும் இன்று மிகப்பெரிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. புதைபடிவங்கள், உடலமைப்புகளின் ஒற்றுமைகள், கருவியல் ஆய்வுகள், DNA ஆய்வுகள் என்று பல்வேறு துறைகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை ஒன்றாக வைத்து உயிரினங்களின் பரிணாம வரலாற்றை விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.

இதில் முக்கியமானது என்ன தெரியுமா? விஞ்ஞானம் இன்று, “உயிரினங்கள் எப்படி மாறின?” என்ற கேள்வியை மட்டும் கேட்கவில்லை.“முதலில் என்ன இருந்தது?” “அதற்குப் பிறகு என்ன தோன்றியது?”“அடுத்தடுத்து எப்படிப் பல்வேறு உயிரினங்கள் தோன்றின?” என்ற வரிசையையும் ஆராய்கிறது. பூமியின் பழைய அடுக்குகளில் கிடைக்கும் புதைபடிவங்களை ஆராயும் போது, எளிய உயிரினங்களிலிருந்து சிக்கலான உயிரினங்கள் தோன்றிய வரலாற்றை அறியமுடிகிறது.

தேசிய அறிவியல் கழகம் குறிப்பிடும் தரவுகளின்படி, மிகப் பழைய நுண்ணுயிர் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே காணப் படுகின்றன. பின்னர், சிக்கலான செல்கள், பலசெல் உயிரினங்கள், முதுகெலும்புள்ள உயிரினங்கள், பாலூட்டிகள், குரங்கின வகைகள் என்று நீண்ட பரிணாம வரலாறு தெரிகிறது. இப்போது நாம் விஷ்ணுபுராணத்தைத் திறந்து பார்க்கலாம். அங்கேயும் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

“உலகத்தில் உள்ள தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் எவ்வாறு தோன்றின?” இந்தக் கேள்வியை மைத்ரேயர் பராசரரிடம் கேட்கிறார். விஷ்ணுபுராணத்தின் முதல் அம்சம், ஐந்தாவது அத்தியாயம் இதற்குப் பதில் அளிக்கிறது. பராசரர் கூறும் படைப்பு வரிசையைப் பார்த்தால், ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிகிறது. முதலில் அசையாத பொருள்களின் படைப்பு. அதற்குப் பிறகு விலங்குகளின் படைப்பு - திர்யக்ஸ்ரோதஸ். அதற்குப் பிறகு ஊர்த்த்வஸ்ரோதஸ் எனப்படும்

தெய்வீக உயிர்களின் படைப்பு.

அதற்குப் பிறகு அர்வாக்ஸ்ரோதஸ் - மனிதர்களின் படைப்பு. அதோடு கதை முடிவதில்லை. விஷ்ணுபுராணம் இதை ஒன்பது வகையான படைப்புகளாக விரிவுபடுத்துகிறது.

மகத், தன்மாத்திரைகள், இந்திரியங்கள், அசையாத பொருள்கள், விலங்குகள், தெய்வீக உயிர்கள், மனிதர்கள், அனுகிரஹம், கௌமாரப் படைப்பு என்று ஒரு பெரிய படைப்புச் சிந்தனையை முன்வைக்கிறது. இங்கே நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

“பாருங்கள்! விஷ்ணுபுராணமே டார்வினின் பரிணாமக் கோட்பாட்டைச் சொல்லி விட்டது” என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல. ஏனென்றால் இரண்டின் நோக்கமும் முறையும் வேறு. நவீன பரிணாம அறிவியல் என்பது புதைபடிவங்கள், மரபணுக்கள், DNA, இயற்கைத் தேர்வு போன்ற சோதிக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் உருவான அறிவியல் கோட்பாடு. விஷ்ணுபுராணம் பேசுவது படைப்பின் தத்துவப் பார்வை. ஆனால்... கேள்வி மட்டும் ஆச்சரியமாக நெருக்கமாக இருக்கிறது.

உயிர்கள் எங்கிருந்து வந்தன?

முதலில் என்ன தோன்றியது?

பல்வேறு வகையான உயிர்கள் எவ்வாறு தோன்றின?

மனிதன் இந்தப் படைப்பில் எங்கே வருகிறான்?

இந்தக் கேள்விகள் இன்று ஆய்வுக்கூடத்திலும், விண்வெளி ஆய்வகங்களிலும் கேட்கப்படுகின்றன. அதே அடிப்படைக் கேள்விகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது புராணச் சிந்தனையிலும் எழுப்பப்பட்டிருக்கின்றன. விடைகள் ஒன்றே என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால், கேள்வியின் ஆழத்தை நாம் கவனிக்க வேண்டியதுதான். அதுதான் நம்முடைய பழைய நூல்களைப் படிப்பதற்கான புதிய பார்வையாக இருக்க வேண்டும். கேலி செய்வதற்காக மட்டும் அல்ல. அப்படியே அறிவியல் என்று ஏற்றுக் கொள்வதற்காகவும் அல்ல. அதில் அவர்கள் என்ன கேள்வி கேட்டார்கள்? எதை கவனித்தார்கள்? அதை எந்த மொழியில் நமக்குச் சொன்னார்கள்? என்பதைப் புரிந்துகொள்வதற்காக, அந்தப் பார்வையில் பார்த்தால், விஷ்ணுபுராணத்தின் படைப்புக் கதைகள் ஒரு புதிய வாசலைத் திறக்கின்றன.அந்த வாசலுக்குள் சென்றால், அடுத்த கேள்வி இன்னும் சுவாரஸ்யமாகிறது. இன்று நாம் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்கிறோம்.

அங்கே ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததா?

ஆறுகள் ஓடியதா?

ஏரிகள் இருந்தனவா?

அந்தச் சூழலில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்க முடியுமா?

பின்னர் செவ்வாயின் சூழல் மாறியபோது அந்த உயிர்கள் அழிந்துவிட்டனவா?

- என்று கேட்கிறோம்.

செவ்வாய்க் கிரகத்தில் கடந்த காலத்தில் திரவ நீர் இருந்ததற்கான பல புவியியல் மற்றும் கனிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பழைய ஆறுகள், ஏரிகள், டெல்டாக்கள் போன்ற அமைப்புகளையும், நீரின் தாக்கத்தால் உருவாகும் சில கனிமங்களையும், நாசாவின் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனால், தண்ணீர் இருந்தது என்பதே அங்கே உயிர் இருந்ததற்கான நேரடி ஆதாரம் அல்ல என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவாகக் கூறுகிறார்கள்.

உயிர் இருந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள உயிரியல் தடயங்களைத் தேட வேண்டும். இதுதான் விஞ்ஞானத்தின் தன்மை. கண்டுபிடித்துக் கொண்டே செல்கிறது. ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டே செல்கிறது. பதில் கிடைக்காத இடத்தில் கேள்வியை நிறுத்தாமல் தொடர்கிறது.

ஆனால் நம்முடைய மெய்ஞ்ஞான நூல்கள் வேறு ஒரு வழியில் சிந்திக்கின்றன. அவை சில விடைகளைச் சொல்கின்றன. அந்த விடைகள் இன்றைய அறிவியல் ஆய்வறிக்கைகள் போல இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை கதையாக இருக்கலாம். உருவகமாக இருக்கலாம். யூகமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கதைக்குள் இருக்கும் கேள்வியை நாம் தேடிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, விஷ்ணுபுராணத்தில் ஒரு வியப்பான சிந்தனை நம்மை எதிர்கொள்கிறது. உயிர்கள் ஒரே நேரத்தில் தோன்றி, ஒரே நிலையில் இருந்து கொண்டே இருப்பதில்லை. படைப்பு இருக்கிறது. வளர்ச்சி இருக்கிறது. அழிவு இருக் கிறது. மறுபடியும் படைப்பு இருக்கிறது.

இது விஷ்ணுபுராணத்தின் படைப்புச் சிந்தனையில் மீண்டும் மீண்டும் வரும் கருத்து. இந்த இடத்தில்தான், மைத்ரேய மகரிஷி பராசரரிடம் ஒரு மிக நுட்பமான கேள்வியைக் கேட்கிறார். தக்ஷப் பிரஜாபதி முன்பு பிரம்மாவின் வலது கட்டை விரலில் இருந்து தோன்றினார் என்று சொல்கிறீர்கள்.பிறகு அதே தட்சன், பிரசேதர்களுக்கும் மாரிஷாவுக்கும் மகனாகப் பிறந்தார் என்றும் சொல்கிறீர்கள். ஒரே தட்சன் எப்படி இரண்டு விதமாகப் பிறக்க முடியும்? மேலும் ஒரு விசித்திரம், மாரிஷா சோமனின் பணிப்பெண். அதனால் தட்சன் சோமனின் பேரன். ஆனால் மற்றொரு இடத்தில் தட்சனின் மகள்கள் சோமனுக்கு மனைவிகளாகின்றனர்.

அப்படியானால், தக்ஷன் எப்படி சோமனுக்கு மாமனாராகவும் பேரனாகவும் இருக்கமுடியும்? மைத்ரேயரின் கேள்வி இதுதான். பராசரர் அதற்கு அளிக்கும் பதில் மிகவும் சுருக்கமானது. ஆனால்

அந்தச் சுருக்கத்திற்குள் மிகப் பெரிய சிந்தனை இருக்கிறது.“ஜன்ம ம்ருத்யூ ச ஸர்வேஷாம் பூதானாம் ப்ரபவாப்யயௌ...”அதாவது, உயிரினங்களுக்கு பிறப்பும் அழிவும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்குப் பிறகு அவர் சொல்லும் கருத்து இன்னும் முக்கியமானது. தட்சனும் மற்ற உயர்ந்த முனிவர்களும் ஒவ்வொரு காலத்திலும் தோன்றுகின்றனர்.

அழிவுக் காலத்தில் அவர்கள் மறைந்து விடுகின்றனர். மீண்டும் அடுத்த காலத்தில் தோன்றுகின்றனர். அதனால் தட்சன் பிரம்மாவின் மகனாக இருந்ததும் உண்மை. பிரசேதர்களின் மகனாக இருந்ததும் உண்மை. அவை வெவ்வேறு காலங்களின் நிகழ்வுகள். விஷ்ணுபுராணத்தின் இந்தப் பகுதியில் பராசரர் “ஒவ்வொரு யுகத்திலும் தட்சனும் பிற முக்கிய முனிவர்களும் இருப்பர்; பிரளய இடைவெளியில் அவர்கள் இல்லாமல் போவர்” என்ற கருத்தைத் தெளிவாகக் கூறுகிறார். இங்கேதான் நமக்கு ஒரு சுவாரஸ்யமான சிந்தனை கிடைக்கிறது. நாம் இன்றைக்கு “உயிர் எப்போது தோன்றியது?” என்று கேட்கிறோம்.

“ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி பின்னர் அந்தச் சூழல் மாறினால் என்ன ஆகும்?” என்று கேட்கிறோம்.

“உயிர் அழிந்தபிறகு அந்தக் கிரகம்

மீண்டும் உயிர்வாழ ஏற்ற சூழலைப் பெறுமா?”

என்றும் கேட்கிறோம்.

விஷ்ணுபுராணம் இதற்கு விஞ்ஞானப் பரிசோதனை முடிவாக பதில் சொல்லவில்லை. ஆனால், அது ஒரு சுழற்சி உலகப் பார்வையை முன்வைக்கிறது. தோற்றம் - நிலை - அழிவு - மறுதோற்றம். அதுதான் அதன் அடிப்படைச் சிந்தனை. இது விஞ்ஞானத்துடன் ஒன்றா? இல்லை. அதை அப்படிச் சொல்லக்கூடாது. நவீன உயிரியல் பரிணாமம், மரபணு மாற்றம், இயற்கைத் தேர்வு, புதைபடிவங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உயிரினங்களின் வரலாற்றை விளக்குகிறது. மனிதனும் மற்ற உயிரினங்களைப் போலவே நீண்ட

பரிணாம வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதைப் பல துறைகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்கள் காட்டுகின்றன. புராணம் அந்த முறையில் ஆராயவில்லை.

ஆனால் “உயிர்கள் ஒரே நிலையில், ஒரே நேரத்தில், ஒரே வடிவத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல; காலத்தோடு படைப்பும் அழிவும் நிகழ்கின்றன” என்ற ஒரு பெரிய சிந்தனையை அது முன்வைக்கிறது. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய இடம். இன்று செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீரைத் தேடுகிறோம். தண்ணீர் இருந்த இடத்தைப் பார்த்து,“இங்கே ஒரு காலத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் இருந்திருக்குமா?” என்று கேட்கிறோம். அதன்பிறகு,“அந்த உயிர் இருந்திருந்தால் அது எங்கே போனது?” என்று கேட்கிறோம். பின்னர்,“மீண்டும் உயிர் தோன்றுவதற்கான சூழல் அங்கே உருவாகுமா?” என்று கேட்கிறோம். இதுபோலவே பூமியின் வரலாற்றையும் விஞ்ஞானம் பார்க்கிறது.

ஆனால் நமது புராணச் சிந்தனை இன்னும் ஒரு படி முன்னால் சென்று,“படைப்பு ஒருமுறை மட்டும் நடப்பது அல்ல; காலச் சுழற்சிகளில் தோற்றமும் மறைவும் தொடர்ந்து நிகழ்கின்றன” என்று சொல்கிறது. விஷ்ணுபுராணத்தின் மற்றொரு பகுதியில் பராசரர், படைப்பு, நிலை, அழிவு ஆகியவை தொடர்ந்து நடைபெறுவதாகவும், அழிவுக்கும் பல வகைகள் இருப்பதாகவும் விளக்குகிறார். ஒவ்வொரு நாளும் உயிர்கள் பிறந்தும் மறைவதும் ஒரு வகையான “நித்திய அழிவு” என்றே அவர் குறிப்பிடுகிறார். இதில்தான் மெய்ஞ்ஞானத்தின் அழகு இருக்கிறது. விஞ்ஞானம்

ஆதாரத்தைத் தேடிச் செல்கிறது.

மெய்ஞ்ஞானம் ஒரு தத்துவ விடையை முன்வைக்கிறது. இரண்டையும் ஒன்றாகக் குழப்ப வேண்டியதில்லை. ஆனால், இரண்டுக்கும் இடையில் எழும் கேள்வியை மட்டும் நாம் கவனிக்கலாம். அதுதான் நம்முடைய புராணங்களைப் புதிதாகப் படிக்க வேண்டிய காரணம். ஒரு காலத்தில் தோன்றியது. வளர்ந்தது. உச்சத்தை அடைந்தது. காலம் மாறியது.

தேய்ந்தது. மறைந்தது. மீண்டும்... எங்கோ ஒரு இடத்தில் வாழ்க்கைக்கான சூழல் உருவானது. அங்கே மீண்டும் உயிர் தோன்றியிருக்க முடியுமா? இந்தக் கேள்வி இன்று செவ்வாய்க் கிரகத்திலும் கேட்கப்படுகிறது. பிற கோள்களிலும் கேட்கப்படுகிறது. தொலைதூர விண்மீன் மண்டலங்களிலும் கேட்கப்படுகிறது. இதையே வேறு ஒரு மொழியில், வேறு ஒரு காலத்தில், நமது புராணங்கள் கேட்டிருக்கின்றன. அந்தக் கேள்வியின் உள்ளே என்ன உண்மை இருக்கிறது? அதைத் தேடித்தான் நாம் இப்போது பயணம் செய்ய வேண்டும்.