Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இனிப்பான வாழ்வை அருளும் கரும்பாயிரம் பிள்ளையார்

ஒரு கரும்பு... இரு கரும்பல்ல... கரும்பாயிரம் பிள்ளையார் என்றே கும்பகோணத்திலுள்ள பிள்ளையாருக்குபெயர். இனிப்பிற்கு அளவுகோல் அதன் சுவை. அந்த சுவை எப்படியிருந்தது எனில் ஆயிரம் கரும்பின் சுவையாக இருக்கும் என்று அவரின் அருட்சுவையை சொல்லும் அற்புதக் கோயில். பரம்பொருளுக்கும், ஒரே பரம்பொருள் பலவாக, பல்வேறு ரூபங்களில் பக்தனுக்கு அருள்கிறது. ஈசன், விஷ்ணு, பிரம்மா, சக்தி, விநாயகர், பிள்ளையார் என்று படைத்து, காத்து, அழித்து என்று மாபெரும் சக்தி சுழற்சி நம்மை இயக்குகிறது. ஈசன் என்றாலே கயிலைதான் நினைவுக்கு வரும். மகாவிஷ்ணு என்றால் பாற்கடல் பாம்பணையும், வைகுண்டமும்தான் கண்முன் நிற்கும். அம்பாள் என்றாலே அம்ருத ஸாகரத்தில் மணி த்வீபத்தில் வீற்றிருக்கும் கோலம் நெஞ்சை நிறைக்கும். எல்லா தெய்வங்களுக்கும் ஒரு உலகம் உண்டு. அந்தந்த தெய்வத்தை வழிபடுபவர்கள், உபாசிப்பவர்கள்அங்குதான் செல்ல விரும்புவார்கள். கயிலையை எப்போது காணுவேன் எனவும், வைகுண்ட தரிசனம் எப்பிறவியில் வாய்க்கும் எனவும், தேவிலோகத்தில் நுழைவேனா என்று பக்தியில் அரற்றிப் பாடியிருக்கிறார்கள். அதுபோல கணபதி எனும் பிள்ளையார் வீற்றிருக்கும் உலகம்தான் ஆனந்த புவனத்தைச் சுற்றியுள்ள இஷூ ஸாகரம். அதாவது கரும்புச் சாறு கடலாக பரவியிருக்கும் உலகத்தின் மத்தியில் வீற்றிருக்கிறார். ஆனாலும், தன்னை எளிதாக மாற்றிக் கொண்டு அரச மரத்திற்கு கீழும், சிறு சந்திலும், பெரிய ஆலயத்தில் தலைவாயிலிலும் என்று இடம் பார்க்காமல் அருள்வதில் பிள்ளையாருக்கு இணை ஏது.

கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. வராஹ அவதாரத்தின்போது பகவான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையாருக்கு வராஹப் பிள்ளையார் என்று திருநாமம் உண்டென்று சொல்வார்கள். பிள்ளையார் கையிலிருக்கும் மோதகமும் இனிப்பு. அவரை சூழ்ந்திருக்கும் கருப்பஞ்சாறுக் கடலும் இனிப்பு. எப்படி இனிப்பை தேடி வண்டுக் கூட்டங்கள் மொய்க்குமோ, அதுபோல பக்தர்கள் எப்போதும்பிள்ளையாரை ஸ்நேகத்துடனும், பக்தியுடன் அண்டியே நிற்பர். மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம். உடம்பை வருத்திச் செய்யும் எந்த தவமும் தேவையில்லை. இரண்டு கொத்து அறுகம்புல்லை எடுத்து பிள்ளையாரின் திருவடிகளில் போட்டாலே போதும். குளிர்ந்து அருளும் தயாபரன். பக்தர்கள் தங்கள் ஆசைக்கு ஆயிரம் திருப்பெயர்கள் இட்டு வணங்குவதும் இவருக்குத்தான். அப்படித்தான் இவருக்கு கரும்பாயிரம் என்றும் பெயர் வைத்தார்கள். அது அவரே நிகழ்த்திய சிறு லீலையால் வந்த திருப்பெயர்.

ஆதி வராஹப் பிள்ளையாரும், கருப்பஞ்சாறுக்கு நடுவில் நிற்பவருமானபிள்ளையார் பாலகனாக வேடம் தரித்து வந்தார். தெருவில் ஓரமாக நின்றார். முகத்தில் கருணையும், குறும்பும் மிலிர்ந்ததன. சற்று தொலைவே கத்தை கத்தையாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வண்டியோட்டியபடி ஒருவன் வந்தான். தந்தந்தை ஒடித்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர், இங்கு கரும்புகளை ஒடித்து உறிஞ்ச ஆசை கொண்டார். பாலகன் வண்டியருகே நகர்ந்து ‘‘ஒரு கரும்பை கொடேன்’’ என்றான்.‘‘ம்ஹூம்.. முடியாது’’ என்று வண்டிக்காரன் மறுத்தான். பிரம்மச்சாரி பிள்ளையார் வண்டியினூடே ஓடினார். கெஞ்சலும், கொஞ்சலுமாக மீண்டும் மீண்டும் கேட்டார்.

இதைக் கண்டவர்கள், ‘‘ஏன்ப்பா.. அந்த குழந்தை கேட்குது இல்ல. ஒன்னேயொன்னு ஒடிச்சு கொடேன். பார்க்கறதுக்கே பிள்ளையாராட்டம் எப்படியிருக்கு’’ என்று தங்களை அறியாமல் உண்மையை சொன்னார்கள். வண்டிக்காரன் பிடிவாதமாக இருந்தான். விஷமாக பேசத் தொடங்கினான்.‘‘இது கொஞ்சம் வேற மாதிரி கரும்பு என்ன. ஒடிச்சு உறிஞ்சினா கரிக்கும். ஆலையில கொண்டுபோய் வெல்லமா மாத்தினா இனிக்கும்’’ என்று வாய்க்கு வந்தபடி உளறினான்.

தொடர்ந்து கேட்ட சிறுவன் அருகிலுள்ள ஆலயத்திற்குள் சென்று மறைந்தார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் கரும்பாக இருந்தவை சக்கையாக மாறின. இதைக் கண்ட வணிகன் அதிர்ந்து அலறினான். விநாயகப் பெருமானே தன்னையறியாது கோயிலுக்குள் சென்றான். விநாயகர் மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆச்சரியமாக ஆயிரம் கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. மக்கள் கண்களில் நீர் வழிய நின்றனர். இப்படி பல விகட விளையாட்டுகளை விளையாடியே, மிகச் சாதாரணமாக ஞானானுபவத்தையும் அளித்து விடுவார். இப்படி விளையாடியே தத்துவப் பொருளையும் விளக்கி, சாதாரண வாழ்வைக் கூட சிகரங்களில் அமர்த்திவிடும் சமர்த்தன்.

இக்கோயில் பற்றி திருக்குடந்தைப்புராணம் போற்றுவதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.

“அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு

கோட்டுநுனி அமைத்துத் தீயோர்

திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி

கமும்கிழத் தேதே யென்று

வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்

புனற் கோட்டார் வணிகன் பாங்கர்

ஒருகரும்புக் காயிரங்கொண்டுறுகரும்பா

யிரக்களிற்றை உளங்கொள்வோமே'' மூல மூர்த்தியாக கருவறையில் பேரருள் பெருக்கி அருள்பாலிக்கிறார் பிள்ளையார். இந்த ஆலயத்தில் ஆகம விதிகளின் படியும், வேதம் முழங்கிட நாள் தவறாது வழிபாடுகள் நடக்கின்றன. பக்தர்கள் இன்னும் இந்த ஆலயத்தை புதுப்பொலிவோடு வைத்துள்ளனர். கும்பகோணத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும் இக்கோயிலின் பெருமையையும், அருள் வளமையையும் கேள்வியுற்று தரிசித்துச் செல்வது வழக்கம். எதைத் தொடங்கினாலும், விநாயகரை வணங்கித் தொடர்ந்தால் காரியம் நிறைவேறுவது சகஜமானது. திருக்குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையாரின் அருளைப் பெற்றிடுங்கள். உங்கள் வாழ்வு முழுக் கரும்பாக இனிப்பதை உணர்வீர்கள். இந்த ஆலயம் கும்பகோணம்கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது.