Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லீலாசுகர் என்கிற வில்வமங்கள ஸ்வாமிகள்

லீலா சுகர் எனும் வில்வ மங்கள ஸ்வாமிகள் எதிர்பாராத திருப்பங்கள்; சுவாரசியமான சம்பவங்கள்; தெய்வத்தை நேருக்குநேராகத் தரிசித்து, அதன்மூலம் பெற்ற அனுபவங்கள் - எனப் பல வகைகளிலும் சிறந்த வரலாறு லீலாசுகர் எனும் வில்வமங்கள ஸ்வாமிகள் வரலாறு.கர்நாடக மாநிலத்தில் அந்தண குடும்பத்தில் பிறந்த வில்வ மங்கள் இல்லறவாசி; வேதம் கற்றவர்; மனைவி சிந்தாமணியிடம் மட்டற்ற பிரேமை கொண்டவர். ஒருசமயம்... சிந்தாமணி தன் பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தார்.

சில நாட்கள் ஆயின. மனைவியைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டுவிட்டார், வில்வமங்கள். மென்மையான தூறலாகப் பெய்யத் தொடங்கியது மழை. மழைக்காலம் என்பதால், வில்வமங்கள் வரும்வழியில் இருந்த நதியில், தண்ணீர்ப் பெருக்கு ஓடிக்கொண்டிருந்தது.நதிக்கரையை நெருங்கிய வில்வமங்கள், தண்ணீர்ப் பெருக்கைப் பார்த்துத் தயங்கி நின்றார்.

‘‘ம்...எப்படி அக்கரைக்குப் போவது?’’ என்று நினைத்த வரின் பார்வையில், உயிரற்ற ஓர் உடல் தண்ணீரில் மிதந்தபடி வருவது தெரிந்தது. மனைவியைப் பார்க்கும் ஆர்வத்தில், உயிரற்ற அந்த உடலைப் பிடித்து மிதந்தபடியே, எதிர்க் கரையை அடைந்தார்.

மழை தூறிக் கொண்டிருந்தால், வழிநடைப்பாதை வழுக்கலும் சறுக்கலுமாக இருந்தது. ஒரு வழியாகச் சமாளித்து வீட்டை நெருங்கிய வில்வமங்களுக்கு, அங்கும் ஒரு பிரச்சனை இருந்தது. இருட்டு நேரம். மழை வேறு பெய்து கொண்டிருந்ததால், வீட்டுக்கதவு சார்த்தித் தாழிடப்பட்டிருந்தது.வீட்டுக்குள் போக வழியறியாத வில்வமங்கள், வேறு ஏதாவது வழி இருக்குமா? என்று சுற்று முற்றும் பார்த்தார். வீட்டின் வெளிச்சுவரில் ஒரு பெரும் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பிடித்து ஏறி, சுவரைத்தாண்டி மறுபக்கம் குதித்தார்; போய் மனைவியின் எதிரில் நின்றார்

வில்வமங்கள்.

சிந்தாமணி திகைத்தார். ‘‘என்ன இது? இந்த இருட்டு நேரத்தில்...” என்று கேட்டார். ‘‘உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. புறப்பட்டு வந்து விட்டேன்”எனப் பதில் கூறினார் வில்வ மங்கள்.

சிந்தாமணிக்குத் திகைப்பு அதிகமானது. ‘‘நதியில் வெள்ளப்பெருக்கு ஓடிக் கொண்டிருந்ததே!” எனக் கேட்டார். ‘‘உயிரற்ற உடல் ஒன்று மிதந்து வந்தது. அதைப் பிடித்து இக்கரைக்கு வந்தேன். மழைவேறு! இங்கு வந்தால்...வீட்டுக் கதவு தாளிடப்பட்டிருந்தது. நல்லவேளை! சுவரில் ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்து ஏறி, இந்தப் பக்கம் குதித்தேன்” என்றார், வில்வமங்கள்.

சிந்தாமணி குழப்பத்தோடு, ‘‘நம் வீட்டுச் சுவரில் ஏது கயிறு?” என்றபடியே, கணவர் சொன்ன இடத்தில் போய்ப் பார்த்தார். வயிறு நிறைய இரையை விழுங்கியிருந்த பெரும் பாம்பு ஒன்று, மெல்ல... நகர முடியாமல் நகர்ந்து கொண்டிருந்தது. அதைத்தான் கயிறு என்று எண்ணிப் பிடித்து, சுவரேறி வந்திருக்கிறார், தன் கணவர் என்பது தெரிந்தது.

இதையெல்லாம் பார்த்த சிந்தாமணி திடுக்கிட்டுத் திரும்பினார். கண்கள் கலங்கி யிருந்தன. கணவரிடம் போய், ‘‘என்ன செய்திருக்கிறீர்கள் தெரியுமா? பாம்பைப் பிடித்துச் சுவரேறி வந்திருக்கிறீர்கள். அழியும் உடம்பைக் கொண்ட என்னைப் பார்ப்பதற்கான இந்தத் தீவிரத்தை, அழியாப் பரம்பொருளான பகவானைப் பார்ப்பதில் காட்டியிருக்கக் கூடாதா?அல்லது காட்டத்தான் கூடாதா?” எனப் பேசிக்கொண்டே போனார்.

ஆனால், அதன்பின் சிந்தாமணி சொன்ன எதுவுமே, வில்வமங்களின் காதுகளில் விழவில்லை. அவர் மனம் முழுதும் பகவானிடம் திரும்பி விட்டது. ‘‘சிந்தாமணி சொல்வது உண்மைதானே! நற்குலத்தில் பிறந்திருந்தும் என் மனம் பகவானிடம் ஈடுபட்டு அவரை நினைக்க வில்லையே!” என எண்ணியவர் மனம், அப்படியே பகவானிடம் திரும்பியது.

ஆம்! மனைவியின் வார்த்தைகள் வில்வ மங்களைப் பக்தி மார்கத்தில் திருப்பி விட்டது; அப்படியே மனைவியின்கால்களில் விழுந்து வணங்கினார். சிந்தாமணி ஓரடி தூரம் நகர்ந்து பின் வாங்க, ‘‘அம்மா!மாயையில் சிக்கியிருந்த என் மனதை மாலவனிடம் செலுத்துமாறு தூண்டிய நீ, என் குரு! வாழ்க! வாழ்க! அடியேன் உபதேச குருவைத் தேடிப் போகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியேறினார், வில்வமங்கள்.

சிந்தாமணியோ, ‘‘தெய்வமே! உன்னருளால் என்னை எதையோ சொல்ல வைத்து, அவரை நல்வழிப்படுத்தினாயே!” என்று நன்றி சொன்னார்.வெளியேறிய வில்வமங்கள், சோமகிரி எனும் மகானிடம் உபதேசம் பெற்றார். குரு மந்திரம் உருவேற உருவேற கண்ணன் திருவருளும் முழுமையாக வில்வ மங்களுக்கு வந்து வாய்த்தது. எந்த நேரமும் கண்ணனையே எண்ணித் தியானத்திலேயே இருந்த வில்வமங்கள், குரு உபதேசத்திற்குப்பின் ‘லீலாசுகர்’ எனும் திருநாமம் பெற்றார்.

பாகவதம் சொல்லி கண்ணனின் திருவிளையாடல்களை வெளிப்படுத்திய சுகாசாரியாரைப் போல, கண்ணனின் லீலைகளைத் தன் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியவருக்கு ‘லீலா சுகர்’ என்ற நாமமும் பொருத்தமாகவே இருந்தது. (நாம் வில்வ மங்கள் என்றே பார்க்கலாம்)பொங்கிய பால் அப்படியே பாத்திரத்திற்கு மேல் வழிவதைப்போல, வில்வமங்களின் உள்ளத்தில் பொங்கிய கிருஷ்ணபக்தி, பாடலாக வெளிப்பட்டது.

சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர் குருர்மே

சிக்ஷா குருஸ்ச பகவான் சிகி பிஞ்ச மௌளி:

யத்பாத கல்பதரு பல்லவ சேகரேஷு

லீனாஸ்வயம்வர ரஸம் லபதே ஜயஸ்ரீ

இந்த முதல் பாடலில்,சிந்தாமணிக்கு வெற்றி பாடி, அதன் பிறகே தன் உபதேச குருவைச் சொல்லியிருப்பது, தன்னை நல் வழிப்படுத்திய சிந்தாமணியிடம் வில்வமங்கள் எவ்வளவு நன்மதிப்பு வைத்திருந்தார் என்பது விளங்கும்.வில்வமங்களின் பயணம் தொடங்கியது. வந்து கொண்டேயிருந்தவர், புனித பூமியாம் கேரளாவை அடைந்தார். அங்கே இளா நதிக்கரையில் - திருநாவை எனும் திருத்தலத்தில் தங்கத் தொடங்கினார். அங்கே தங்க ஆரம்பித்தவர், நாள்தோறும் இளா நதியில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்துக் கொள்வார். அதன்பின் அங்கேயே மண்ணால் ஒரு ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்தைச் செய்து பிரதிஷ்டை செய்வார். கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபாடு செய்வார்.

அவ்வாறு வழிபாடு செய்யும் நேரங் களில், வில்வமங்களம் தன்னை அறியாமல் பாடிப் பகவானைத் துதிப்பார்.இவர் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாட கண்ணனும், ஆம்! ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகம் தன் தலையை அசைத்துப் பாடலை அங்கீகரிக்கும். விக்கிரகத்தின் தலை அசையவில்லை என்றால், அந்தப் பாடலைக் கண்ணன் ஏற்கவில்லை என்பது பொருள். வில்வமங்கள் பாடப்பாட கண்ணன் தலையசைத்து ஒப்புதல் கொடுத்த பாடல்கள் (மட்டும்) தொகுக்கப்பட்டு, ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் எனும் நூலின் வரலாறு இதுவே. பக்தி ரஸம், ஞான ரஸம், கண்ணனின் அழகு ரஸம் - எனப் பல விதங்களிலும் தலைசிறந்து விளங்கும் அப்பாடல்கள், உண்மையிலேயே கர்ணத்திற்கு - அதாவது காதுக்கு அமிர்தம்தாம். கொஞ்ச காலம் ஆன பின்பு,வில்வமங்கள் ‘திருநாவை’ யில் இருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களுக்குச் சென்று வந்தார்.

இவருடைய தூய்மையான - முதிர்ந்த பக்தியின் காரணமாகக் கண்ணன், வில்வமங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் நேருக்கு நேராகக் காட்சி கொடுத்தார்.

புல்லாங்குழல் ஓசை, பலவிதமான கோலங்கள், தோழர்களுடன் விளையாடல் என்றெல்லாம் தரிசனம் தந்த கண்ணனைப் பிடிப்பதற்காக வில்வமங்கள் ஓடுவார். பின் என்ன செய்ய? கண் எதிரில் கண்ணனைக் கண்டபிறகு விட்டுவிட மனம் வருமா? ஓடுவார். ஆனால், வேதங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத கண்ணன், வில்வமங்களின் கைகளில்

பிடிபடுவாரா?

அதற்காக வில்வமங்கள் துவளவில்லை; தவத்தையும் வைராக்கியத்தையும் தீவிரமாக்கினார்.கண்ணன் இரங்கினார்; இறங்கினார்; சுருண்ட தலைமுடியில் மயில் இறகைச் சூடி, காதுகளில் குண்டலங்கள் ஆட, சந்திரப் பிறை போன்ற நெற்றியில் திருநீறு துலங்க, மனதை மயக்கும் திருக்கோலத்தில் காட்சி தந்தார் கண்ணன்.இவ்வாறு வில்வமங்கள் கண்ணனை நேருக்கு நேராகத் தரிசிப்பதும்; அவர் தூயபக்தியும் மக்களிடையே பரவின.அரசரையும் எட்டின.

கோழிக்கோட்டில் இருந்தபடி அப்போது அரசாட்சி செய்து வந்த அரசர் மானதேவன். (அவருக்கு சாமுதிரி, மான விக்கிரமன் எனும் பெயர்களும் உண்டு).அந்த அரசர் பகவானிடமும் பாக வதர்களிடமும் பேரன்புகொண்டவர்; கலைகளிலும் காவியங்களிலும் ஈடுபாடு கொண்ட அரசர், கண்ணனைத் துதித்து ‘கிருஷ்ண கீதி’ எனும் நூலும் எழுதியுள்ளார்.அப்படிப்பட்ட அவருக்கு, நேருக்கு நேராகக் கண்ணனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அந்த நேரத்தில் தான், வில்வமங்களைப் பற்றியும்; கண்ணன் அவருக்குத் தந்து அருள்புரிந்ததைப் பற்றியும் - உண்டான தகவல்கள் அரசரை எட்டின.

- தொடரும்

பி.என். பரசுராமன்